தேசிய இனங்களின் மீது இந்தியா செலுத்தும் வல்லாதிக்கத்தின் வடிவங்கள் பல, அவை நுட்பமாக உணர வேண்டியவையாக உள்ளன.
இந்திய வல்லாதிக்கத்திற்குக் கோர முகமும் உண்டு. பூ முகமும் உண்டு.
இந்திய வல்லாதிக்கத்தின் கோர முகம் என்பது இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகள், அவசர நிலை அதிகாரங்கள், மத்திய காவல்துறைப் படைகள், ஒடுக்குமுறைச் சட்டங்கள், அவற்றை நடைமுறைப் படுத்தும் அரசு எந்திரங்கள் போன்றவை. இந்திய வல்லாதிக்கத்தின் மென்மையான முகமாக ஒடுக்கு முறைச் சட்டங்களின்படி தண்டனை வழங்கும் நீதி மன்றங்கள், அகில இந்தியத் திட்டங்கள், ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான திட்டக்குழு, நிதிக்குழு, அதிகாரப் பட்டியல்கள் போன்றவை.
இந்திய வல்லாதிக்கத்தின் பூ முகம் என்பது என்ன? வல்லாதிக்கத்தின் கோர முகத்தை அடையாளம் கண்டு எதிர்க்கக்கூடிய மக்களும், தலைவர்களும் இது ஒரு வல்லாதிக்கத்தின் வடிவம் என்று உணராமலேயே அதை ஆதரித்து நிற்கச் செய்யும் சுரண்டல் எந்திரங் களை இந்தியத்தின் பூ முகமாகக் கொள்ளலாம்.
ஒரு தேசிய இனத்தின் உரிமை என்பது அதன் மண்ணுரிமைதான். தன் மண்மீது தன் முழு உரிமையை ஒரு தேசிய இனம் வென்றெடுப்பதே விடுதலை எனப் படுகிறது. தன் விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் ஓர் இனம், அம்மண்ணில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் மீது முழு உரிமைப் பெற்றிராவிட்டால், அவ்வினம் பெற்றுள்ள தாகச் சொல்லும் விடுதலை பொருளற்றது.
ஆகவேதான் தேசிய இனங்கள் மற்றும் தேசங் களின் இயற்கை வளங்களின் மீதான இறையாண் மையை சர்வதேச அமைப்புகள் மதித்து நடக்க வேண்டும் என்று ஐ. நா. பொது அவை 1962 ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றியது. ஆனால், இந்தியா தன் வல்லாதிக்கப் பரப்புக்குள் இருக்கும் அனைத்து தேசிய இனத் தாயகங்களிலும் இயற்கை வளங்களை யும், கனிமங்களையும் தொடர்ந்து சூறையாடி வருகிறது. ஒப்பந்தமிட்டு பல தனியார் மற்றும் அந்நிய நிறுவனங் களைச் சூறையாட அனுமதிக்கிறது.
தமிழகத்தின் இயற்கை வளமும், கனிம வளங்களும் முன்னமே சூறையாடப்பட்டு வருகின்றன. இதனால், நிலத்தடிநீர் பாதிப்பு, நிலத்தடி நீர் அற்றுப்போதல், மண் உப்பளமாக மாறுவது, காற்று மாசுபடுவது, நிலப்பரப்பே வாழத் தகுதியற்றதாக மாறுவது என பல வகைகளில் தமிழகம் பாதிப்புக் குள்ளாகியுள்ளது.
ஆற்றுப்படுகைகள் பாதிப்புக் குள்ளாவது என்பது நேரடியாக ஒரு தேசிய இனத்தின் நீர் வளத் தையும், வேளாண்மையையும், உழவு சார்ந்த அதன் பாரம்பரியப் பண் பாட்டையும், அத்தேசிய இனத்தின் தற்சார்பையும், இறுதியாக அதன் இருப்பையும் பாதிப்புக்குள்ளாக்கும். இன்று தமிழகத்தின் படுகைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி யுள்ளன. காவிரி பாலாற்றுப் படுகை மக்கள் உணவு தானியங் களுக்காக வெளி மாநிலங்களை எதிர்நோக் கும் நிலையும், குடிநீருக் காகக் கூட்டுக் குடிநீத் திட்டங்களை எதிர்நோக்கும் நிலையும் வந்து விட்டது. நிலத்தடிநீர் வெகு ஆழத் திற்குக் கீழிறங்கி விட்டது. விவசா யம் செய்யத் தகுதியற்றதாகப் பல பகுதிக ளில் மாறியிருக்கிறது.
இந்நிலைக்கு யார் காரணம்?
தமிழகத்தின் உரிமைப் பங்குக் காவிரி நீர் தமிழகத்துக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது ஒரு காரணம். அடுத்தபடியாக, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ஓ. என். ஜி. சி) போன்ற நிறுவனங்கள் நிலத்தடி நீர்த்தொ குப்புகளை வெகுவாகப் பாதித்திருக் கின்றன. நிலத்தடிநீரை இரசாயனக் கலவைக்குள்ளாக்கியும், உப்புநீராக மாற்றியும், கெடுப்பது ஓ. என். ஜி. சி. யின் முக்கிய நாசகார வேலையாகும்.
மீத்தேன் எடுத்தால் அது ஒட்டு மொத்தப் பேரழிவை உருவாக்கும் என்பது இன்று பரவலாக அறியப் பட்டுள்ள செய்தி. மீத்தேன் திட்டம் வந்துதான் காவிரிப்படுகைப் பகுதி யின் அழிவு தொடங்க வேண்டும் என்பதில்லை. அந்த அழிவின் தொடக்கம் ஓ.என்.ஜி.சி.யின் செயல் பாடுகளுடன் எற்கெனவே தொடங் கிவிட்டது. காவிரிப்படுகையில் பெட்ரோலியம், எரிவாயு எடுக்கி றோம் என்ற பெயரில் நீரை வெளி யேற்றி, வேதிப் பொருட்களைக் குழாய் பதிப்பின்போது பயன் படுத்தி, வறண்ட நச்சு நிலமாகக் காவிரிப்படுகையை மாற்றும் நிறுவனங்கள் ஓ.என்.ஜி.சி, குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்ப ரேசன், ஆயில் இந்தியா லிமிடெட், கெயில் ஆகிய நடுவண் அரசு நிறு வனங்கள். இவை மட்டுமின்றி பெரு முதலாளியத் தனியார் நிறுவனங் களான அபான், ரிலையன்ஸ் ஜூபி லியன்ட், பிரிட்டீஷ் பெட்ரோலியம் போன்றவை.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மாவட்டங்களில் 5000 ச.கி.மீ பரப்பு எரிவாயு, பெட் ரோலியம் எடுக்க ஓ.என்.ஜி.சி., கெயில், ஜி.எஸ்.பி, சி.பி.சி.எல். மற்றும் பெங்கால் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஜூபிலியண்ட், பெங்கால் எனர்ஜி போன்ற நிறுவ னங்களுக்கு முன்னமே தாரை வார்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காவிரிப்படுகையில் 946 ச.கி.மீ பரப்பிலான (காவிரிப்படுகை சி.ஒய்.ஒ.என்.என் 2005/1 திட்டம்) கெயில் நிறுவனத் தின் எரிவாயுத் திட்டத்தில் 30 விழுக்காட்டுப் பங்கை குஜராத் அரசு பெட்ரோலியம் கார்ப்பரே சன் பெற்றிருக்கிறது.
இது போன்று காவிரிப்படு கையில், குஜராத் அரசு பெட்ரோலி யம் கார்பரேஷனுக்கு 5 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் நிலப்பகுதியிலும், கடற்பகுதியிலும் பங்கு இருக்கிறது.
காவிரிப்படுகையில், சி.ஒய்.ஒய் ஒ.என்.என் 2001/1 திட்டம், புவன கிரி 680 ச.கி.மீ, சி.ஒய்.ஒய். ஒ.என்.என் 2003/1 திட்டம், 970 ச.கி.மீ, சி.ஒய்.ஒய் ஒ.என்.என். 2004/1, ஓ.என்ஜி.சி சிதம்பரம் 214 ச.கி.மீ, என்.எல்.சி விரிவாக்கம் 1000 ச.கி.மீ – ஜெயங் கொண்டம் பகுதி ஆகிய திட்டங் கள் மட்டுமின்றி இனி நிலத்தையும் நீரையும் கெடுக்கும் வகையில் மீத்தேன் திட்டங்களுக்கு ஏற்ப ளிப்பு தரப்பட்டுள்ளது. காவிரிப் படுகை இனித் தாங்காது. காவிரிப் படுகை முழுவதும் முன்னமே அரசு நிறுவனங்களா லும், தனியார் நிறுவனங்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக் கிறது.
தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி அள்ளித் தந்திருக்கும் அழிவுகள்:
காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து பசுமை விகடன் தொடர்ந்து எழுதி வருகிறது.
“இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் கோரத் தாண்டவத்தால், திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடி கிராம மக்கள் சந்திக்கும் துயரங்கள் எழுத் துக்களுக்குள் அடக்கிவிட முடியா தவை. அவர்களின் சோகக்கதை, பெட்ரோலுக்கும் மேலாகப் பொங்கி வெளியே வந்தபடியேதான் இருக்கின்றன. சுவாசிக்கச் சுத்த மான காற்று இல்லை, குடிக்கத் தூய்மையான தண்ணீர் இல்லை, வாழ்வாதாரங்களும் கையில் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த நேரத்திலும் நச்சுவாயு வெளி யாகலாம் என்கிற அச்சத்தோடு, நித்தமும் நிச்சயமற்ற வாழ்க்கை தான் எங்களுடையது என்று விரக் தியின் உச்சத்தில் நின்றபடி சொல் லும் அந்த மக்களின் கண்ணீர், கழகங்களையோ காங்கிரசையோ, காவிகளையோ, ஏன் கம்யூனிஸ்டு களைக்கூட இதுவரை எட்ட வில்லை’’
ஓ.என்.ஜி.சி.யால் நிலத்தடிநீர் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறி விடுகிறது என்பது உண்மை. பயன் படுத்தத் தகுதியற்றதாக நீர் கெட்டுப் போனால், அங்கே உழ வும், வாழ்வும் பாதிக்கும். மக்கள் சிறுகச்சிறுக அந்நிலப்பரப்பை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால், ஓ.என்.ஜி.சி இன்றுவரை எவ்விதப் பெரிய எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. மாறாக, அதை ஒரு பெரும் பொதுத்துறை நிறுவ னம் என்றும் ”தேசியச் சேவை” செய் கிறது என்றும் மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் கருதப்படு கிறது. பொதுவாக, ஓ.என்.ஜி.சி நாட்டின் எரிவாயு மற்றும் பெட் ரோலியத் தேவையை நிறைவு செய்யப் பணியாற்றி வருவதாகவும், ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகள் பெரிய பாதிப்பை இதுவரை ஏற் படுத்திவிடவில்லை என்றும் கருது வதாலேயே, பல்வேறு மாநில மற் றும் இந்திய தேசியம் பேசும் கட்சிகள் இதுவரை எதிர்க்க வில்லை. பாதிப்புகள் ஏற்பட்டிருந் தாலும் கூட, பலர் ஓ.என்.ஜி.சி. யால் தாங்கள் பொருளியல் பலன்களை அடைந்து வருவதால் எதிர்ப்ப தில்லை.
இந்திய தேசியப் போதையில் தள்ளாடும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் தங்கள் தொழிற்சங்கங்களில் முக்கியப் பங் கேற்றிருப்பதால், ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான குரல் எழும்பினால் அதை எதிர்க்கின்றன. ஓ.என்.ஜி.சி. ஊழியர். களோடு இக்கட்சியினர் தாங்களும் களம் இறங்குகிறார்கள். ஓ.என்.ஜி.சி. யைக் குறை கூறுபவர்களை வசை பாடுகிறார்கள். இந்திய தேசியத் துக்கு ஆபத்து வந்து விட்டதாகக் கூறி அல்லாடுகிறார்கள்.
ஓ.என்.ஜி.சி. யின் அத்துமீறல்கள் மிகப்பல, இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கும் ஏழை விவ சாயிகளின் நிலத்தைக்கூட ஓ.என். ஜி.சி. வலுவில் பிடுங்கிக் கொள்கிறது. நிலம் தர மறுக்கும் விவசாயிகளை அதிகாரிகள் மிரட்டுகிறார் கள். நிலம் வலுவில் கையகப் படுத் தப்படுகிறது. நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பதாகக்கூறும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் நில உரிமையாளர்களி டம் கையெழுத்தை வாங்கிச் செல்கிறார்களே யொழிய எந்த ஆவணமும் வழங்குவதில்லை. பல விவசாயிகளின் அனுபவம் இன்னும் மோச மானது. எரு அடித்து, ஏர்பூட்டி, விதை தெளித்த நிலங்களிலும், பயிர் பச்சைப்பசேல் என்று வளர்ந்திருக்கும் வயல்களிலும், வளர்ந்து நிற்கும் வாழைத் தோப்புகளிலும், கரும்புத் தோட்டங்களிலும் நிலவுடைமையாளரின் அனுமதியே பெறாமல் கல் நட்டுவிட்டுப் போகிறது ஓ.என்.ஜி.சி. விளையும் வயலில் வெடிகுண்டு சோதனை என்ற பெயரில், நிலத்தடியில் மேல்மட்டத்தில் இருக்கும் நன்நீர் தொகுப்பும், நிலத்தடியில் உள்ள உப்புநீர் தொகுப்பும் கடும் அதிர்வுக்குள்ளாகி, இரண்டற கலந்து விடுவது, மேல்மட்ட நீர் கீழிறங்கி விடுவது போன்ற நாசகார வேலைகளை ஓ. என்.ஜி.சி. செய்து விடுகிறது. விளையும் வயல்களில் கனரக எந்திரங்களையும் வாகனங்களையும் செலுத்தி நிலத்தைப் பாழ்பண்ணிவிடுகிறது. கண்ட இடங்களிலெல்லாம் துளையிட்ட சோதனை மேற்கொண்டு பயிர்களை அழித்து விடுகிறது.
பசுமை விகடன் (25.5.2014) கமலாபுரம் ஊராட்சித்தலைவர் செல்வகணபதியின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்திருக்கிறது:
“கமலாபுரம் பஞ்சாயத்துல 425 ஏக்கர் விளைநிலம் இருக்கு. ஒரே மாசத்துல, இங்க 4 ஆயிரத்து 600 வெடிகுண்டு சோதனை பண்ணியிருக்காங்க. அதாவது 150 அடி ஆழத்துல 4 ஆயிரத்து 600 துளைகள் தோண்டியிருக்காங்க. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டது மட்டு மில்லால், நிலத்தடி நீர் மட்டம் பல மடங்கு கீழே போயிடுச்சு’’
நிலத்தைப் பாழ்படுத்துவதற்கும், பயன்படுத்துவதற்கும் ஓ.என். ஜி.சி. கொடுக்கும் நட்ட ஈடு குறைவு. அப்படி அதிகமாகக் கொடுக்க முன் வந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், ஓ.என்.ஜி.சி. ஏற்படுத்தும் நாசம் நிரந்தரமானது.
விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. ஏற்படுத்தியிருக்கும் கச்சா எண் ணெய்க் கசிவுகளைப் பற்றி ஓ.என். ஜி.சி. முறையாகப் பதிவு செய்வ தில்லை. “திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்த பட்சம் 250 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்பட்டிருக்கும்” என்று கருப்பூர் கார்த்திகேயன் பதிவு செய்கிறார். (பசுமை விகடன் 25.5.2014, பக்கம் 61)
எனவே இதற்கு முன்பு, திருவா ரூர் மாவட்டம் வெள்ளக்குடியைக் சுற்றியுள்ள கமலாபுரம், வடுகக்குடி, ஒட்ட நாச்சியார்குடி, சிங்களாஞ் சேரி, தேவர்கண்டநல்லூர், பெருங் குடி, கட்டையந்தோப்பு, சாருவன், மூலக்குடி, எருக்காட்டூர், கொட் டாரக்குடி, பூந்தாழங்குடி, வேலுக் குடி, தாழைக்குடி -ஆகிய பகுதிக ளில் 60 எண்ணெய் எரிவாயு கிணறுகள் பாதிப்புகளை ஏற் படுத்தியுள்ளன.
2012 இல், காரைக்காலுக்குக் கச்சா எண்ணெய் எடுத்துச் செல் லும் குழாய் வெடித்து, நேரடியாக 8 ஏக்கர் நிலமும், நீர்மூலம் எண் ணெய் பரவி பலநூறு ஏக்கர் விளைநிலங்களும் பாழாயின. இக் கச்சா எண்ணெய் மண்ணுக்குள் ஊடுருவி நீர்த்தொகுப்பையும் பாதித்தது. திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் ஊராட்சி சர்வான் பகுதியில் கச்சா எண்ணெய்ச் சேறாக மாறிப் போயின. பிரச்சி னைக்குத் தீர்வாக, மேலே மண் அடித்து மூடித் தருவதாக ஓ.என். ஜி.சி. கூறியது.
ஓ.என்.ஜி.சி.யால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பல மாநிலங் களில் ஓ.என்.ஜி.சி. விபத்துகளில் ஏராளமாக இறந்துள்ளனர். 2009, நவம்பர் மாதம் திருவாரூர் அருகே, உச்சிமேடு என்ற ஊரைச் சேர்ந்த சேதுபதி, ஆனந்தராஜ், கலியபெரு மாள் ஆகியோர் ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து பலத்த காயமடைந்தனர். ஆனந்தராஜ் என்ற மாணவர் (வயது 14) இறந்து போனார். சேதுபதியின் உடல் கருகி, காதுகள் எரிந்துபோய், உயிர் பிழைத்தார்.
தினமணி நாளிதழ் (7மார்ச் 2014) ஒரு செய்தியைப் பதிவு செய்தது. புதுச்சேரியில் 2008 டிசம்பர் மாதம், தேசிய நலப்பணித் திட்ட 10 நாள் முகாமில் பங்கேற்கச் சென்ற திருவாரூரைச் சேர்ந்த என். ஜெயப்பிரகாஷ் என்ற 12 ஆம் வகுப்பு மாணவர், முகாம் அருகே சிறுநீர் கழிக்கச் சென்றபோது, ஓ.என்.ஜி.சி. யின் எரிவாயுக் குழாய் வெடித்து, காயமடைந்து, அவரு டைய ஆணுறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள வயிற்றுப்பகுதிகள் முழு வதும் சேதமடைந்து, உறுப்பு நீக்கப் பட்டது. பாதிப்புக்குள்ளான மாண வருக்கு 8.80 இலட்சம் ஓ.என்.ஜி.சி. தரவேண்டும் என்றும் இழப்பீடாக அரசு 3 இலட்சம் தர வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை, பாதிப்புக் குள்ளான மாணவரின் தந்தை போராடித்தான் பெற வேண்டி யிருந்தது. வேலை வாய்ப்பளிக்க ஓ.என்.ஜி.சி. மறுத்துவிட்டது.
இப்படி இழப்புகளைப் பட்டிய லிட்டுக் கொண்டே போகலாம். விபத்துகள் என்பவை ஒருவகை. மற் றொரு வகை எரிவாயு – பெட்ரோ லியத் திட்டங்களால் விளையும் சரிசெய்ய இயலா நாசங்கள். இவைதாம் மக்களைக் கவலை கொள்ளச் செய்கின்றன.
தற்போது, ஓ.என்.ஜி.சி. யால் ஏற் பட்ட நாசகார விளைவுகளை உணர்ந்து கொண்ட, நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் திருநகரி ஊராட்சி மக்கள் ஓ.என்.ஜி.சி. க்கு எதிரான போராட் டத்தை முன்னெடுத்துள்ளார்கள். பொதுநிலையில் மீத்தேன் திட் டத்தை எதிர்த்தும் தங்கள் ஊரைப் பொறுத்தவரை நிலத்தடிநீரைப் பாதுகாக்கும் நோக்கில் ஓ.என்.ஜி. சி. யின் குழாய்ப் பதிப்பை எதிர்த்தும், மார்ச் 24 ஆம் நாள் முற்றுகைப் போராட்டம் நடத்தி குழாய் பதிப்பைத் தடுத்து நிறுத்தினர். திருநகரியில் முதல் எரிவாயுக் குழாயை 5 ஆண்டுகளுக்கு முன் ஓ.என்.ஜி.சி. பதித்தது. அதுவரை, 15 அடி ஆழம் முதல் 20 அடி ஆழத் திற்குள் நல்ல குடிநீர் கிடைத்த திரு நகரியில், ஓ.என்.ஜி.சி. குழாய்ப் பதித்தப் பிறகு, குழாயைச் சுற்றி யுள்ள பகுதி யில் நீரின் பண்புகள் கெட்டு, முற்றிலும் உப்பு நீராகி விட்டது. அங் குள்ள வேளாண் நீர் குழாய்களில் இப்போது உப்புநீர் தான் கிடைக் கிறது. அப்பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடியைக் கைவிட்டு பருத்தி சாகுபடிக்கு மாறி னர். அருகாமையிலுள்ள ஊர்களில் (அங்கெல்லாம் இன்னமும் ஓ.என். ஜி.சி. குழாய்கள் பதிக்கப்பட வில்லை) நல்ல நீர் கிடைக்கிறது. திருநகரி மக்களின் போராட்டம் தொடர்கிறது.
குடிநீரையும், விளைநிலத்தை யும் மக்களிடமிருந்து பறித்துக் கொண்டு, அம்மக்களுக்கு சிறிய அளவில் நட்ட ஈடு கொடுப்பது, மக்கள் தலைவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது, ஊரில் விளையாட்டுப் போட்டிக்கு மற்றும் பள்ளிக் கூடங் களுக்கு ஏதாவது பொருட்களை வழங்குவது, ஊர் நலனில் அக்கறை உள்ளவர்களைப் போலக் காட்டிக் கொள்வது – இப்படியே தம் திட்டங் களைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவது என்ற போக்கில் ஓ.என். ஜி.சி. நிறுவனம் செயல்படுகிறது.
நமக்கு எரிவாயுவும் பெட்ரோ லியமும் அவசியம் என்பது உண்மை. ஆனால், குடிநீர் என்பது அதைவிடவும் அதிக அவசிய மானது. பெட்ரோலியத்தை இறக்கு மதி செய்வது போல் குடிநீரை இறக்குமதி செய்து வாழ முடியாது. எரிவாயுவுக்காகவும், பெட்ரோலுக் காகவும், குடிநீரையும் சோறு போடும் வேளாண் விளைநிலங் களையும் இழந்தால், அந்த இனம் தன் அழிவை நோக்கி நகர்கிறது என்று பொருள்.
இன்று பெருமளவில் வந்தேறிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவ னங்களின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்ய, உள்நாட்டு வேளாண்மையையும், நிலத்தடி நீரையும் அழித்தாவது, எரிவாயு எடுப்பது என்று இந்திய அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங் களும் முனைந்து நிற்கின்றன. இருப் பதை அழித்து முதலாளிய நிறுவ னங்களின் தேவையை நிறைவு செய் வது என்பதை ‘வளர்ச்சி’ என்று ஆட்சியாளர்களும், முதலாளி களும் விவரிக்கிறார்கள். வேளாண் மை பாதிக்கப்படுகிறது என்ற கூக் குரல் எழும்போது, இந்தியப் பிரத மராக இருந்த மன்மோகன் சிங் விவசாயிகளை வேளாண்மையை விட்டு வெளியேறச் சொன்னார்.
குஜராத் மாநிலத்தில் மோடி நடத்திய ஆட்சியைக் கவனித்தால், இப்போது வந்துள்ள பா.ச.க. ஆட்சி யிலும் இதே நிலை தொடரும் என்றே தெரிகிறது. காவிரிப் படுகையில் எண்ணெய் எடுக்கும் ஓ.என்.ஜி.சி.யின் கதவுகள் உலக முதலாளிகளுக்காக அகலத் திறக்கப்பட்டுவிட்டன. புதிய ஆய் வுத் தேடலுக்கான அனுமதிக் கொள்கையின்படி (என்.இ.எல்.பி.) தனியார் நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீடு ஓ.என்.ஜி.சி. யில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எண்ணெய் வயல்களை வளைத்துக்கொள்ளும் ஓ.என்.ஜி.சி. அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க் கிறது. பங்கிட்டுக் கொடுக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவ னமும் ஓ.என்.ஜி.சி.யும் சேர்ந்து கூட்டாக வங்கா ளத்தில் இராணி கஞ்சில் மீத்தேன் எடுக்கிறார்கள். எண்ணெய் வயல்களில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற் கென்றே ‘ஹைட்ரோ கார்பன் இயக்குனரகம்’ பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் தொடங்கப் பட்டது. இந்நிறுவனம் அமெரிக்க புவிசார் கணக்கீடு (தி யு எஸ் ஜியாலஜிக்கல் சர்வே) உடன் சேர்ந்து இந்தியாவில் ஷேல் மீத்தேன் எரி வாயு (நிலத்தடிப் பாறைகளை உடைத்த மீத்தேன்) மதிப்பீடு நடத்தியிருக்கிறது.
ஓ.என்.ஜி.சி.யும் அமெரிக்க எண்ணெய் நிறுவனமான கொனா கோ பிலிப்ஸ் நிறுவனமும் சேர்ந்த காவிரிப்படுகையில் நிலத்தடிப் பாறை மீத்தேன் (ஷேல் எரிவாயு) கிடைக்கும் இடங்களை 2012 இல் ஆய்வு செய்தன. நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுக்கும் முறையும், ஷேல் மீத்தேன் எடுக்கும் முறையும் ஒன்றே.
ஓ.என்.ஜி.சி. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் முதலா ளிகளுக்கு எரிவாயு கிடைத்துவிடும். தமிழ்நாடு இல்லாமல் ஒழிந்து போகும். ஷேல் மீத்தேன் இருக்கக் கூடிய ஆற்றுப்படுகைகளுள் ஒன்றா கக் காவிரிப்படுகை கண்டறியப் பட்டுள்ளது.
நாகாலாந்து மக்கள் போராட்டம்
உணர்வு பெற்ற நாகாலாந்து மக்கள் ஓ.என்.ஜி.சி. யை நாகா லாந்தை விட்டே 1994 இல் விரட்டியடித்தனர். 2007 இல் மீண்டும் ஓ.என்.ஜி.சி. நாகாலாந் துக்குச் சென்றது. ஓ.என்.ஜி.சி.யால் பதித்து கைவிடப்பட்ட குழாய்களி லிருந்து எண்ணெய் கசிந்து 133 ச. கி. மீ. விளைநிலங்கள் பாதிப்புக்குள் ளாயின. 2009 இல் மக்கள் போராட்டத்தின் காரணமாக, நாகாலாந்து மாநில அரசு ஓ.என். ஜி.சி.க்கு அளித்திருந்த அத்தனை உரிமங்களையும் இரத்து செய்தது. மேலும் நாகாலாந்தின் ஓகா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான சங்பங் மற்றும் திஸ்சொரி என்ற கிராமங்கள் சார்பாக 1000 கோடி ரூபாய் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ஓ.என்.ஜி.சி. தான் வைத்திருந்த ஆறு பிளாக்கு களில் ஐந்தில் 30 விழுக்காட்டு எண்ணெய் எடுப்புப் பகுதிகளை கனாரோ ரிசோர்சஸ் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்குக் கைமாற்றிக் கொடுத்தது. தன் தேசிய இனப் பிரதேசத்தின் இயற்கை வளங்களைக் காப்பதில நாகா லாந்து மக்கள் நடத்திய போராட் டம் கவனத்தில் கொள் ளத்தக்கது.
ஓ.என்.ஜி.சி.யை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
காவிரிப்படுகையில் எரிவாயு-பெட்ரோல் எடுப்பது என்ற பெயரில் ஓ.என்.ஜி.சி. நிகழ்த்தியி ருக்கும் நாசகார வேலைகளுக்கு இணையான அழிவைத் தமிழகத் துக்கு வேறு எவரும் செய்துவிட முடியாது. இன்று நிலத்தடி நீர் காவிரிப்படுகை முழுவதுமே பாதிக்கப்பட்டு விட்டது. ஓ.என். ஜி.சி. பெயர் அறிவிக்கப்படாத நச்சுப் பொருட்களை குழாய்ப் பதிப் பில் பயன்படுத்தி வருகிறது.
தஞ்சை மாவட்டம் கதிராமங் கலத்தில் (பிளாட் கே.டி.ஐ.–1) ஓ.என்.ஜி.சி. யால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேலை என்ன? என்னென்ன இரசாயனப் பொருட் களைப் பயன்படுத்துகிறீர்கள்? என்ற கேள்வி தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி முன்வைக்கப் பட்டபோது, விதி 24 – எ யின்படி இத்தகவல்கள் பரிமாறுவதற் கில்லை’ என்று ஓ.என்.ஜி.சி. பதில் கொடுத்தது. நிலத்துக்கு அடியில் செலுத்தப்படும் வேதிப் பொருட் கள் நிலத்தடி நீரிலும், குடிநீர்த் தொகுப்பிலும் கலப்பது என்பது தவிர்க்க வியலாதது. எரிவாயுக் குழாய்களையும் பெட்ரோலியக் குழாய்களையும் பதிக்க விடாமல் போராடித் தடுப்பது ஒன்றே, காவிரிப்படுகையைக் காப்பாற்றிக் கொள்ளும் வழி.
இந்திய வல்லாதிக்கத்தின் பூ முகம்
இந்திய தேசியம் என்ற பெயரில் தேசிய இனங்களின் அடையாள மறுப்பில் ஈடுபட்டிருக்கும் அகில இந்தியக் கட்சிகளும், இந்திய வல்லாதிக்க ஆதரவாளர்களும் இந்த ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் ஆதரிப்பவர்கள். ஆனால் மாநில அளவிலான கட்சிகள் மாநில உரிமைகளையும், சுயாட்சிக் கோட்பாட்டையும் ஆதரிக்கின்றன. இவர்கள் இந்திய அரசு கொடுக்கும் நெருக்கடிகளை விமர்சிப்பார்கள், மைய அரசு அனைத்து நிதியாதாரங்களையும் தானே வைத்தக்கொள் வதாகச் சாடுவார்கள். அவ்வப்போது இந்திய அரசு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக அங்கலாய்ப் பார்கள். அவர்களுக்கு இந்திய வல்லாதிக்கத்தின் கோர முகத்தை அடையாளம் காண முடியும், ஆனால் எதிர்க்க மாட்டார்கள். இந்தியத்துடன் உடன் பட்டு, தங்களுக்கு அனுமதிக்கப் பட்ட எல்லைக்குள் நின்று அரசி யல் செய்வார்கள்.
இந்திய வல்லாதிக்கத்தின் மற்றொரு முகத்தை மக்கள் அடை யாளம் காண்பதில்லை. அது, அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, கெயில், ஆயில் இந்தியா லிமிடெட் போன்ற வடிவில் இருக்கும். ஓ.என்.ஜி.சி. ஓர் ஆக்கிரமிப்பாள னாக, ஒரு தேசிய இனத்தின் தாயகப் பரப்புக்குள் புகுந்து அத்தேசிய இனத்தின் இயற்கை வளத்தை, கனிமவளத்தை சூறை யாடுகிறது. விளைநிலத்திற்குள் ஆக்கிரமிப்பாளனாகப் புகுந்து நிலத்தைப் பிடுங்குகிறது. அடையா ளக் கல் நடுகிறது. எதிர்ப்பவர்களை அச்சுறுத்துகிறது. ஊராட்சி மன்றங் களை அவமதித்து எவ்வித அனும தியும் பெறாமலே வேலைகளைத் தொடங்குகிறது.
ஒரு தேசிய இனத்தின் ‘வைப்புச் செல்வம்’ ஆகிய பெட்ரொலியம் – எரிவாயு ஆகியவற்றை தன் விருப்பப்படி எடுத்துக் கொண்டு, ஒரு சிறு தொகையை ‘இராயல்டி’ என்ற பெயரில் வழங்குகிறது. இது ஒரு சுரண்டல் ஆகும். பெட்ரோல் – எரிவாயு எடுப்பது என்ற பெயரில், ஒரு தேசிய இனத்தின் வாழ்வா தாரங்களைச் சிதைக்கிறது. வேளாண்மையை அழிக்கிறது. சுற் றுச் சூழலை பாதித்து மக்களின் உயிர்வாழும் உரிமையைக் (ரைட் டு லிவ்) கேள்விக்குறியாக்குகிறது. நிலத்தடி நீரை நஞ்சாக்குகிறது.
எரிவாயு – பெட்ரோல் தேவை என்ற ஒரு தேவை பற்றிய புரிதலை மட்டுமே முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வாதாரங் களை சிறுகச் சிறுக அழித்துக் கொண்டு வரும் ஓ.என்.ஜி.சி. இந்திய வல்லாதிக்கத்தின் ஒரு பூ முகம்.
கோரமுகத்தைக் கண்டு கொதிக்கும் தமிழினம்
இந்திய வல்லாதிக் கத்தின் இவ்வடிவத்தையும் அடை யாளம் கண்டு தடுக்க வேண்டும். இது அரசு நிறுவனமாக இருப்ப தால், பொதுத்துறை என்று அழைக் கப்படுவதால் பொதுமக்கள் துறை யாக, தமிழ்த் தேசிய இனமக்க ளுக்கும் உரிய நிறுவனமாக பிழை யாகக் கருதிக் கொள்ளக் கூடாது. இந்தப் பூ முகத்திற்குள் ஒளிந் துள்ள கோர மிருகத்தைக் கண்ட றிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசிய இனமே தன்னு டைய இயற்கை வளங்களைக் கைக் கொள்ள வேண்டும், கவனமாக கையாள வேண்டும். தன் இனத் தையும் பாதுகாத்துக் கொண்டு, தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள அதுவே வழி.
இன்னொன்று, இன்று அரசுத் துறையில் உள்ள நிறுவனங்கள் வேகமாக தனியாருக்கு கைமாறி வருகின்றன. பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலம் நிதி திரட்டுவதை ஓர் முதன்மைப் பணியாக நிதியமைச்சகம் செய்து வருகிறது. ஓ.என்.ஜி.சி. யானது ஜிண்டால், டார்ட் போன்ற தனி யார் குழுமங்களுடன் இணைந்து கூட்டாண்மை அமைத்து மறைமுக தனியார்மயமாகி வருகிறது. சிறிது சிறிதாக நமது பூ முகத்தை இழந்து, உண்மையான தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.
இப்போதாவது தமிழர்கள் இந்தப் பூ முகத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்தாளர்: த.செயராமன்