தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை நீத்த புனிதர்களாகிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நவம்பர் 27ஆம் திகதியை உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பதற்குத் தயாராகுமாறு கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம்(29) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முன்பாக நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போதே மேற்படி மாவீரர் பணிக்குழு தமிழ் மக்களிடம் அழைப்பை விடுத்துள்ளது.கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் இம்முறையும் மிகவும் உணர்வெழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்வெழுச்சியாகவும் சீரான ஒழுங்குபடுத்தலுடனும் கடைப்பிடிப்பதற்காக மாவீரர் நாள் ஒழுங்கமைப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்குழுவானது கிளிநொச்சியின் பல பாகங்களிலும் இருந்து மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள், மதகுருமார் ஆகியோரை உள்ளடக்கி சட்டப்படி பிரதேச சபையினது அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமிழர்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயிரையே கொடையாக்கிய எமது மாவீரர்களை நவம்பர் 27 அன்றைய தினம் நினைவுகூருவதற்கு தயாராகும் நாம் அரசியலுக்கப்பால் சென்று நாம் எல்லோரும் உணர்வுள்ள தமிழர்கள் என்ற எண்ணத்துடன் செயற்படத் தயாராகுவோம் என கிளிநொச்சி மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.