இலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது.
இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.
அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.
இதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுகின்றது.
இவ்வாறு தென்பாகத்திலும் பார்க்க தொல்லியல் ஆதாரம் கொண்ட வடபாகம் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாகர்களினால்ஆளப்பட்டிருக்கிறது. பின்னர். அது தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிகளுக்கும், தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடைப்பட்டுஆளப்பட்டிருக்கிறது. பின்னர் ஐரோப்பியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆளப்பட்ட வன்னிப்பிரதேசத்தில் தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிக்கும், ஐரோப்பிய காலணித்துவத்தின் ஆட்சிவரையான காலப்பகுதியில் (பிரித்தானியர் காலம் வரை) இலங்கையின் வடபாகத்தில் யாழ்ப்பாண அரசுக்கும், தென்னிலங்கை அரசிற்கும் அடங்காது வன்னிப்பிராந்தியத்தை வன்னியர்கள் ஆண்டிருக்கிறார்கள். இதை ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பயணக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
போர்த்துக்யேர் ஆட்சிக்காலத்தில் வன்னி கைலாயவன்னியனது ஆட்சிக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்பின்னர் ஒல்லாந்தரும் அதனைத் தொடர்ந்து வந்த பிரித்தானியரும் வன்னியை ஆண்டிருக்கிறார்கள். ஒல்லாந்தரது இறுதிக்காலப் பகுதியிலும், ஆங்கிலேயரது ஆரம்ப காலப்பகுதியிலும் வன்னியில் வாழ்ந்தவனாக பண்டாரம் வன்னியனார் திகழ்கின்றார். இப்பண்டாரம் வன்னியனார் இலங்கையின் தேசிய வீரர்களுள் 1982ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார். டச்சுக்காரரின் காலத்திலும், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் இலங்கையில் தேசிய வீரர்களாக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒல்லாந்தர்களின் இறுதிக் காலத்திலும் ஆங்கிலேயர்களின் ஆரம்ப காலத்திலும் அந்நியர்களை ‘எமது தாய்மண்ணில் இருந்து வெளியேற்றுவேன்’ என சபதம் பூண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களுள் பண்டாரம் வன்னியனார் முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவரை இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய வீரராக (வன்னி பண்டார) அங்கீகரித்திருக்கிறது இலங்கை அரசு.
இப்படிப்பட்ட இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவரான பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வன்னிப் பிராந்தியத் தளபதி வொன் டிறிபேர்க் அவர்களால் கற்சிலைமடுவில் தேற்கடிக்கப்பட்டு ஓடிய நாளை பண்டாரவன்னியன் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றோம். ஆங்கிலப்படைகளிடம் தோற்றோடிய பண்டாரவன்னியனை நாம் அவனது நினைவு நாளாக கொண்டாடுகிறோம். ஏனெனில் பண்டாரவன்னியன் எப்போது இறந்தான் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடமில்லாததன் காரணத்தினாலேயே ஆகும்.
எனவே அவன் ஆங்கிலேயத் தளபதியிடம் தோற்று நிராயுதபாணியாக பண்டாரவன்னியன் ஓடிய நாளையே நாம் நினைவுகூருகிறோம். அதுவும் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களிடம் தோற்றோடி கிட்டத்தட்ட 100 வருடங்களின் பின்னர். அதாவது1904 – 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக இருந்த ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவரால் 1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர்ஒரு நடு கல் நாட்டப்பட்டது. பண்டாரவன்னியன் தோல்வியின் நினைவுத் தூபி பண்டாரவன்னியன் தோல்வியின் நினைவுத் தூபி
இந்தக் கல்லிலே “HERE ABOUTS CAPTAIN VON DRIEBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCTOBER 1803.”
என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடு கல்லிலே பண்டார வவுனியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆங்கில தமிழ் வரலாற்று நூல்கள் அனைத்திலும் பண்டார வன்னியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் நிறுவப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் 1913ல் ஜே.பி.லூயிஸ் அவர்கள் தொகுத்த ‘இலங்கையில் உள்ள நடுகற்களும்நினைவுச் சின்னங்களும்’ என்ற நூலிலே கற்சிலைமடுவில் உள்ள நடுகல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
எனவே பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் தோற்றோடிய நாளை நாம் அவனது நினைவு தினமாக கொண்டாடுவதா என்கின்ற சர்ச்சை எழுந்தது. இதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் 1997ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவு நாளை மாற்றியமைத்தனர். அதாவது பண்டாரவன்னியன் 2வது தடவையாக (ஆனால் ஆங்கிலேயருக்கு முதல் ஒல்லாந்தர் இக்கோட்டையில் இருந்த போது தகர்த்தான்) ஆங்கிலேயர்களின் கோட்டைகளில் ஒன்றான முல்லைத்தீவை கைப்பற்றி அங்கிருந்த பீரங்கிகளையும் இழுத்துச்சென்ற ஓகஸ்ட் 25 (1803) நாளை தமிழர் படைபலத்தின் திருநாளாக கொண்டாடினர். அதன்பின்னர் கற்சிலைமடு மக்களினால் 2002ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவுருவம் அமைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட பண்டார வன்னியனின் நினைவுத்தூபி
இதன் பின்னர் கடந்த 07.03.2010 ஆம் ஆண்டு இலங்கையின் தமிழர்களின் வீரனாகவும், சிங்கள மக்களின் தேசிய வீரனாகவும் கருதப்பட்ட பண்டாரவன்னியனின் சிலைகள் இலங்கைப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டன.
உன்மையில் பண்டார வன்னியனின் வீரத்தினை உறுதிப்படுத்துகின்ற ஓகட்ஸ் 25 திகதியே பண்டாரவன்னியனின் வீரத்தின் நாளாக கொண்டாடப்படவேண்டும் பண்டாரவன்னியனின் வரலாறு. பண்டாரவன்னியனின் வரலாற்றில் பல வரலாற்றுக் குழப்பங்களை பலரும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர். பண்டாரவன்னியனின் குடும்ப ஆய்வை முதன்முதலாக சுவாமி ஞானப்பிரகாசரே செய்தவராவார். இதில் சுவாமி ஞானப்பிரகாசர் தெளிவாக பனங்காம வன்னியர் பரம்பரையை குறிப்பிட்டு 1936 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 30ஆம் திகதி றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பித்தார். அத்துடன் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் 1933ஆம் ஆண்டு (பக்கம் 111 -112) இல் நல்லமாப்பாணன் பரம்பரையையும் தெளிவாக விளக்குகிறார். இதில் வன்னியர்களுடைய பரம்பரையை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்கின்ற பெயர் எவ்வாறு புனைகதை மூலம் புகுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.
இதன் பின்னர். 1982 இல் பண்டார வன்னியன் தமிழ் சிங்கள இனங்களுக்கும் தேசிய வீரனாக 2 தடவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நவரத்தினம் எம்.பி. அவர்களின் முயற்சியால் வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுருவத்தினை அமைத்து அவர்குறித்த வரலாற்றினை சிறிய ஆய்வுரையாக வழங்கினார். இதுதான் பண்டாரவன்னியன் குறித்த கருத்தை எம்மக்கள் மத்தியில் வேரூன்றச்செய்தது எனலாம். இதன் பின்னர். பண்டாரவன்னியனின் நாடகத்தை இயற்றிய திரு முல்லைமணி (வே.சுப்பிரமணியம்) அவர்கள் பண்டாரவன்னியனின் பெயரை குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என ஒரு பெரும் வரலாற்று வடுவுடன் புனைந்துவிட்டார்.
அத்துடன் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில்அதாவது பண்டாரவன்னியனுக்கு 150 வருடங்கள் முன்னர் பனங்காமத்தை ஆட்சி செய்த கைலாயவன்னியனை பண்டாரவன்னியனின் தம்பியாக்கி, சங்கிலியனை போர்த்துக்கேயரிடம் காட்டிக்கொடுத்த ஊர்காவற்றுறையின் தலைவனான காக்கைவன்னியனை (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) பண்டாரவன்னியனை காட்டிக் கொடுத்தான் எனக்குறிப்பிடுகிறார்.
(வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலரான மருதநிலா இதழில் பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்கள் தனது வன்னிநாட்டின் வரலாறுஎன்ற கட்டுரையில் சங்கிலியனைக் காட்டிக்கொடுத்தாக போர்த்துக்கேய வரலாறுகள் கூறும் இருவர்களில் அதாவது புவிராச பண்டாரத்தின் மாப்பிளையும் தளபதியுமாக இருந்தவன் (1582 – 1592) , மற்றையவன் எதிர் மன்ன சிங்கன் இரகுவம்சம் இயற்றிய அரசகேசரியின் சகோதரனாவான்.
ஆகவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப்புலவர் தனது யாழ்ப்பாண வைபவ மாலையிலேதான் முதன் முதலாக காக்கை வன்னியன் என்கின்ற கதாபாத்திரத்தினை உருவாக்குவதாக சொல்கிறார். GAGO என்கின்ற போத்துக்கேயச்சொல்லுக்கு கொன்னையன் என்பது பொருள் என்றும் தமிழில் காகோ என்றால் பிரமா படைக்காத படைப்பு, பெற்றோர் இடாத பெயர் ஆகவே மயில்வாகனப் புலவர் அந்த காகோ என்கிற பெயரை தமிழில் காக்கை என விளங்கிகொண்டு யாழ் சங்கிலியன் அரசவையில் மாப்பாண வன்னியர்கள் இடம்பெற்றதனால் காக்கையுடன் வன்னியனையும் இணைத்து காக்கை வன்னியன் என புதுபெயரைப் புனைந்தார் என்று பேராசிரியர் பூலோகசிங்கம் மருதநிலா இதழில் குறிப்பிடுகிறார்.
எனவே இவற்றையெல்லாம் (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) வாசித்த முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும் தான் எழுதத்துடித்த பண்டாரவன்னியனின் கதாபாத்திரத்தில் மயில்வாகனப்புலவர் உருவாக்கிய காக்கை வன்னியனுக்கு இரண்டாவது தடவையும் உயிர் கொடுத்திருகிறார்.
இதைவிடப் பெரும் சோகம் என்னவெனில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயப்படைகளினால் கைது செய்யப்பட்டு கற்சிலைமடுவில் தூக்கிலிடப்படுகிறான் எனவும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார். இது மிகப்பெரும் வரலாற்றுத் திரிபும், துரோகமும் ஆகும். முல்லைமணி அவர்கள் கற்சிலை மடுவில் உள்ள பண்டாரவன்னியன் வொன் றிபேக்கிடம் தோற்ற நினைவிடத்தினை அவனது கல்லறை என மனதில் நிறுத்தி பண்டாரவன்னியன் நாடகம் இயற்றியிருக்கிறார். பின்னர் இந்த பண்டாரவன்னியன் நாடகத்தினை 2006 நூலுருவில் கொண்டுவந்த போதும் தான் இந்த நாடகத்தினை இயற்ற காரணமாக இருந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்புக்களை கோடிட்டுக் காட்டியிருந்தபோதும் அந்த நாடகத்தில் இருந்த தவறை அவர் திருத்த முன்வரவில்லை
அத்துடன் முல்லைமணி பண்டாரவன்னியன் நூலில் குறிப்பிடும் போது முன்னர் நான் குறிப்பிட்ட ஞானப்பிரகாசர் 1936 இல் றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கொடுத்த அறிக்கையில் தொன்பிலிப் நல்ல மாப்பாணனின் மகள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் எனக்குறிப்பிட்டுள்ளார். 1645 இல் பிறந்த நல்ல மாப்பாணனின் பேரன் பண்டாரவன்னியன் 1811 வரை வாழ்ந்திருக்க முடியாது அதே அட்டவணையில் எல்லைக்காவேத நல்ல நாச்சனின் பிறப்பு (1730) கணவன் நல்ல மாப்பாணன் டொன் ஜூவான் குலசேகரன் என்னும் வன்னித்தலைவனின் பெயர் இடம்பெற்றது. இவனின் முழுப்பெயர் டொன் ஜுவான் குலசேகர நல்லமாப்பாண ஆகும்,
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1933 ஆம் ஆண்டு வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் என்னும் நூலில் நல்ல மாப்பாணருடைய பரம்பரையை அட்டவணைப்படுத்துகிறார். அதில் நல்லமாப்பாண முதலியாருக்கும், எல்லைக்காவேத நல்லநாச்சனுக்கும் பிறந்தவளே கதிரை நாச்சன் அவனுடைய கணவன் முகமாலை வைரமுத்து வன்னியனார் என வகைப்படுத்துகிறார். இனி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடும் நல்ல மாப்பாண முதலியாரை சுவாமி ஞானப்பிரகாசர் காட்டும் டொன் ஜுவான் குலசேகர மாப்பாணனாக இனங்கானலாம். எனவே மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் முகமாலை வைரமுத்து வன்னியனார் மகனே பண்டாரவன்னியன் எனக்கொள்ளலாம். போரன் குலசேகர மாப்பாணனின் பெயருடன் தந்தை வைரமுத்துவின் பெயரையும் சேர்த்தே குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என குறிப்பிடப்படுகிறது, எனவே பண்டாரவன்னியனுடைய தாய் குழந்தை நாச்சி இவரை கதிரை நாச்சி எனக்கொள்வதே பொருத்தம். என ஒரு வரலாற்றை சமைத்திருக்கிறார் முல்லைமணி. இங்கே ஒரு நாட்டுக்கூத்தாளர் (அண்ணாவி) வரலாற்றைப் படைக்கின்ற பொழுது எவ்வகையில் அது திரிபடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது,
எனவே 1936 களில் சுவாமி ஞானப்பிரகாசர் ஏசியாற்றி சபைக்கு வழங்கிய மாப்பாண வன்னியர் பற்றிய கட்டுரையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்பின் தகவல்களும் பொருந்தி வருகின்றன. அந்தவகையில் ஞானப்பிரகாசர் புவிநல்ல மாப்பாணனின் மகள் கதிரை நாச்சன் (பெரிய பொன்னார் வன்னிச்சி) மகளே எல்லைக்காவேத நல்லநாச்சன் என்கிறார். இவருடைய கணவனே டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணன். – இந்த டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணனுடைய மகனாக மாப்பிள்ளை வன்னியனையே காட்டுகிறார் ஞானப்பிரகாசர். ஆனால் முல்லைமணியோ இவருடைய மகனாக பண்டார வன்னியனைக்காட்டுகிறார்.
மேலும் மயில்வாகனப்புலவர் வைபவமாலையில் கதிரை நாச்சி மகளாக முகமாலை வைரமுத்து வன்னியனாரை காட்டுகிறார். ஞானப்பிரகாசரோ கதிரை நாச்சனுக்கும் இலங்கை நாராயணனுக்கும் வள்ளி நாச்சன் என்று ஒரு மகள் இருந்ததாகவும் இந்த வள்ளிநாச்சனுக்கும் தியாகவன்னியனுக்கும் ஒரு மகள் இருந்ததாகவனும் அம்மகள் கதிர்காம வன்னியனை மனம் முடிததாகவும் அவர்களது மகனே வண்டா வைரமுத்து (1813 – 1901) என்று கூறுகிறார். இந்த வண்டா வைரமுத்து பற்றி ஜே.பி லூயிஸ் அவர்கள் தனது இலங்கையின் வன்னிமாவட்டங்கள் என்னும் நூலில் குறிப்பிடும் காலம் சரியாக ஞானப்பிரகாசரின் கட்டுரையுடன் பொருந்துகிறது. ஆகவே எப்படி 1811 இல் பிறந்த வண்டா வைரமுத்துவின் மகனாக 1811 இல் இறந்த பண்டாரவன்னியன் எப்படி இருக்கமுடியும்?
அத்துடன் ஞானப்பிரகாசர் நல்லமாப்பாணன் மள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் என்று குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த வரலாற்றுக் குறிப்புக்களும் நல்ல நாச்சன் மகனே அதாவது அழகேசன் புவிநல்ல மாப்பாணன் மகனே பண்டாரம் என குறிப்பிடப்படுகிறது. இது ஒல்லாந்த வன்னித்தளபதி தோமஸ் நாகலின் குறிப்பில் தெளிவாக உள்ளது. அப்படியிடுக்க நாம் வைரமுத்துவின் மகன் பண்டாரம் என ஆதாரப்படுத்துவது பொருத்தம் அற்றது.
முல்லைமணி கற்பனையில் இயற்றிய பண்டாரவன்னியன் நாடகத்தினை மையமாக வைத்து சோழ சாம்ராச்சியத்தை மனதினில் நிறுத்து கலைஞர் கருனாநிதி ஐயா அவர்கள் பண்டாகவன்னியன் என்ற நாவலை படைத்திருந்தார்.
அதில் பண்டாரவன்னியனுக்கு நளாயினி ( நல்லநாச்சன்) என்று ஒரு தங்கை இருந்ததாகவும் அவன் பண்டாரவன்னியனின் அவைக்கழப் புலவனை காதலித்ததாகவும், சோழசாம்ராச்சியப்பார்வையில் நாவல் புனைந்திருந்தார். இதுவே இன்றும் மக்கள் மத்தியில் திகழ்கிறது. உண்மையில் பண்டாரவன்னியனின்குலமரபினை எடுத்துக்கொண்டால் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் அல்ல அவனது முழுப்பெயரை வரலாறுகளைத் தட்டிப்பார்த்தால் டொன் தியோகு பண்டாரம் அழகேசன் புவிநல்ல மாப்பாண வன்னியனாராகும். மற்றும் ஒரு விதமாகக் கூறினால்புவிநல்ல மாப்பாண அழகேசன் பண்டாரம் என்பதாகும்.
இவனுடைய வரலாற்றினை விரிவாகப் பார்த்தால். போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழ் வரலாறுகளில் பறங்கியர் எனகுறிக்கப்பட்டுள்ளனர்.1505ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது; அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவின் கரையோரப்பகுதி மன்னார், மற்றும் பறங்கிச் செட்டிகுளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை பறங்கியரால்தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் போனது. இதனால்அங்கு ‘வன்னியர்கள்’ இருப்பதாகவும், அதுவன்னியனார்களுடைய மாகாணம் எனவும் வன்னியனார் பற்று எனவும், தங்களுடைய வரலாற்றுக் குறிப்புகளில் சொல்லிச் சென்றனர்.
போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பலருக்கு முதலியார் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் வன்னிப்பிரதேச நிர்வாகத்தை பறங்கியர் நடத்தி வந்தனர். முதலியார் பதவி பெற்றவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்போது ‘டொன் ‘பட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. பதிவுகளில் டொன் பட்டமும் ‘நல்ல’ என்ற பெயரும் அவருடைய குலப் பெயருமான மாப்பாணவெள்ளாளர் என்ற பெயரும் பதவியும் சேர்த்து பதியப்பட்டுள்ளது.1644ம் ஆண்டு தொடக்கம் 1678ம் ஆண்டு வரை கயிலை வன்னியனார் பாணங்காமத்தில் ஆண்டுவந்தார்
அவர் 1678 இறக்க காசியனார்என்பவர் ஒரு வருடம் பனங்காமத்தில் பதவி வகித்தார்.அப்போது பூநகரி கரைச்சிப் பிரதேசத்தில் பரந்த பல வயல் வெளிகளுக்கு சொந்தக்காரராக இருந்த டொன் நல்ல மாப்பாண முதலியாரை, 1679ம் ஆண்டு டொன் பிலிப் நல்ல மாப்பாண முதலி வன்னியனார் எனப் பெயர் சூட்டி பனங்காமத்திற்கு பொறுப்பானவன்னியனாராக ஒல்லாந்தர்கள் நியமித்தனர்.(1679 – 1697) இதேவேளை டொன் பிலிப் நல்ல மாப்பாணருடைய மைத்துனரான டொன் புவி நல்ல மாப்பாண முதலியார் வன்னிப் பிரதேசத்தின்கிழக்குப் பிரதேசங்களான கருநாவல் பற்று, கரிக்கட்டுமூலை போன்ற பிரதேசங்களுக்கு முதலியாராக இருந்தார். இவரை டச்சுக்காரர்டொன் தியோகு புவிநல்ல மாப்பாண முதலி வன்னியனார் என்ற பெயரில் நியமித்தனர்.
பனங்காமத்தில் 18 வருடங்கள் அதிகாரம்செலுத்திய டொன் பிலிப் நல்ல மாப்பாண வன்னியனாருக்கு ஒரு;, அருமைத்தாய், கதிரைநாச்சி-1 அல்லது பெரிய பொன்னார் வன்னிச்சிமற்றும் குழந்தை நாச்சன் என்ற பெயர்களில் மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தனர்.அதேவேளை கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பான டொன் தியோகு புவி நல்ல மாப்பாணருக்குஅழகேசன் அல்லது அகிலேசன் என்ற பெயரில் மகன் இருந்தார்.
பானங்காம வன்னியனாருடைய கடைசி மகளான குழந்தை நாச்சனை, கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை வன்னியனாரான டொன் தியோகுபுவி நல்லமாப்பாணரின் மகன் டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் திருமணம் செய்திருந்தார்.இவர் 1742ம் ஆண்டு மாசி மாதம் 21ந் திகதி கருநாவல்பற்றிற்கும், கரிக்கட்டு மூலைக்கும் டொன் தியோகு அழகேசன் புவிநல்லமாப்பாணர் வன்னியனாராக நியமிக்கப்பட்டிருந்தார். டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் என்பவர் மன்னார்தொடக்கம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு வரைக்கும், பொதுவாக அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசம் முழுவதற்கும்பொறுப்பாக இருந்ததினாலேயே, 1767ல் டச்சுக் கவர்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, அவரை மன்னாரிலும், ஆனையிறவிலும்,முல்லைத்தீவிலும் வரவேற்று உபசரித்துள்ளார்.
கரிக்கட்டுமூலை கருநாவல்பற்று டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாண முதலி வன்னியனாருக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தவர் பெயர் சின்னநாச்சன், இளையவர் பெயர் பண்டாரம்1767க்குப் பின்னர் கருநாவல்பற்று, கரிக்கட்டுமூலை, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்குப் பொறுப்பாக டொன் தியோகு அழகேசன்புவி நல்ல மாப்பாணரின் மூத்தமகளான சின்ன நாச்சன் வன்னிச்சியாராக நியமிக்கப்பட்டார்.
அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்திலிருந்து முறையாக திறைகள் செலுத்தப்படாத காரணத்தினால், அதனை நெறிப்படுத்த, 1782 ம்ஆண்டு கப்ரன் தோமஸ் நாகெல் வன்னிப் பிரதேசத்திற்கு பொறுப்பாக டச்சுக்காரால் நியமிக்கப்பட்டார்;. 1783ம் ஆண்டு லெப்ரினன்ற்தோமஸ் நாகெல் முல்லைத்தீவை கைப்பற்றுகிறான்.இதனால் சின்னநாச்சனும், பண்டாரமும் அனுராதபுரத்திற்கு அண்மையில் உள்ள நுவரகலாவௌ என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.நுவரகலாவௌ சென்ற பண்டாரமும், சின்னநாச்சனும் புலான்குளம முதியான்சேயின் பாதுகாப்பில் இருந்தனர்.
அப்போதுபுலான்குளம் முதியான்சேயினுடைய மூத்த மகன் குமாரசிங்க கனியே திசாவையாக இருந்தார். வன்னிச்சிமார் வேறு இடங்களுக்குசென்றிருந்த காரணத்தினால் 1785ம் ஆண்டு ஜுன் மாதம் பனங்காமமும் ஒல்லாந்த கப்ரன் தோமஸ் நாகெல்லினால் கைப்பற்றப்பட்டது.1785ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி கலவரம் செய்த அனைவருக்கும் கப்ரன் தோமஸ் நாகெல் பொது மன்னிப்பு அளித்தான் இதனால் பண்டாரமும், சின்னநாச்சனும் தமதிடத்திற்கு திரும்பி வந்தனர்.1785 ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி அதிகாரத்தில் இருந்த பலருக்கான நியமனங்களில் டச்சுக்காரர் பல மாற்றங்கள் செய்தனர்.
இக்காலத்தில் பல பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்பட்டும் குறைக்கப்பட்டும் இருந்தன. 1785ம் ஆண்டு சின்னநாச்சன் நுவரவௌ குமாரசிங்க திசாவையை திருமணம் செய்;துகுமராசிங்க திசாவையுடன் (வன்னியனார்)சின்னநாச்சன் தனது புகுந்த வீடான நுவரகலாவௌ சென்றார். சின்னநாச்சனுக்குப் பின்னர் அவரது சகோதரர் பண்டாரம்கரிக்கட்டுமூலைக்கு ‘வன்னியனராகப்’ பதவி ஏற்றார். வெறுமனே பண்டாரம் என அழைக்கப்பட்டவர் வன்னியனார் பதவி பெற்றதும்பண்டாரம் 10 வன்னியனார் ஆனார். இதற்குப் பின்னர் டச்சு ஆட்சியாளர்களால் இவர் பண்டார வன்னியன் என அழைக்கப்பட்டார்.
ஒல்லாந்தர் சாயவேரை இலவசமாக பிடுங்கித்தரும்படி கட்டளையிட பண்டாரவன்னியன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில்இருந்த ஒல்லாந்தர் கோட்டையை முதன்முதலாக தாக்குகிறான் இது தோல்வியில் முடிந்தது. இதனால் பண்டாரத்திற்குவழங்கப்பட்டிருந்த வன்னியனார் பதவி 1795இல் பறிக்கப்படுகிறது. அப்போது பதவியிழந்த பண்டாரவன்னியன் சிங்களதிசாவைகளினால் ‘வன்னிப் பண்டாரம்’ என அழைக்கப்பட்டான்.1795ம் ஆண்டு மார்ச் மாதம் 18 ந் திகதி தொடக்கம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் படிப்படியாக ஆங்கிலேயர் வசப்பட்டன.
1800 ஆம் ஆண்டு கவர்ணராக நோர்த் நியமிக்கப்ட கவர்ணர் நோர்த் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களுக்குநியமணங்களை வழங்கினார். அதன்போது பண்டாரவன்னியனுக்கும் இலுப்பைக்குளம் என்ற பகுதிக்கு வன்னியனாக நியமணத்தைநோர்த் வழங்குகிறான். இப்பிரதேசம் பின்னர் பண்டாரஇலுப்பைக்குளம்; என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.
1801ம் ஆண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கு வொன் டிறிபேர்க் என்ற ஒல்லாந்தன் டிறிபேர்க் ஆங்கிலேயர் காலத்திலும் பிஸ்கலாகவும்தளபதியாகவும் நியமிக்கப்பட்டான்.இதன்பின்னர். 1803; ஆண்டு ஜுன் மாதம் 26ந் திகதி கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கனும் முதன்மந்திரி பிலிமத்தலாவையும் சூழ்ச்சிசெய்து ஆங்கிலேயரின் பாதுகாப்பில் இருந்த முத்துச்சாமியை சிரச்சேதம் செய்தனர்.
இதனால் கண்டி ராஜதானியில் மீண்டும் முறுகல்நிலை ஏற்பட்டது. இதைச்சாட்டாக வைத்து பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது பிரதேசத்திலிருந்து வெளியேற்றவேன் என சபதங்கொண்டுகொட்டியாரத்தில் முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதலைத் தொடங்குகிறான். இதனால் பிரித்தானியப்படை அங்கிருந்துபின்வாங்கியது. ஆங்கிலேயர் மன்னாருக்குச் செல்லும் வீதி முழுவதும் மரங்களைத் தறித்து விழுத்தி மன்னார் யாழ்ப்பாணத்திற்கானபோக்குவரத்தை தடை செய்தார்.
இதன்பின்னர். தனது மைத்துனரான குமாரசிங்க வன்னியருடன் இணைந்து 1803 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்… 25ந் திகதி முல்லைத்தீவிலிருந்த அரசாங்க இல்லத்தையும் கோட்டையையும் தாக்கினான் கப்ரன் டிறிபேர்க் யாழ்ப்பாணத்திற்கு தப்பிஓடுகிறான். முல்லைத்தீவைக் கைப்பற்றிய பண்டாரம் வன்னியனார் தன்னோடு வந்திருந்த குமாரசிங்க திசாவை வன்னியனாரிடம் அப்பிரதேசத்தை ஒப்படைத்துவிட்டு ஆனையிறவில் தாக்குதலை மேற்கொள்ள கற்சிலைமடுவிற்கு சென்று தங்கியிருந்தார்.
அங்கிருந்து ஆனையிறவிற்கு அண்மையிலிருந்த சிறு சிறு கோட்டைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் இருந்தார்.இதன்போது 1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 ந் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரிலிருந்து துணுக்காய் சென்ற வொன் றிபேக் பண்டாரவன்னியன் தங்கியிருந்த கற்சிலைமடுவில் அதிரடித்தாக்குதலை மேற்கொள்கின்றான். இதனால் பலர் கொல்லப்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 வீடுகளில் இருந்த பண்டாரத்தின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன. ஒன்றரை இறாத்தல் குண்டுகள் போடக்கூடிய கண்டி இராஜதானியின் முத்திரை பொறிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கி, 55 ஆயுதந் தாங்கிகள், பன்னிரண்டு ஈட்டிகள், இரண்டு வாள்கள், இரண்டு கிறிஸ் கத்திகள், ஒரு துப்பாக்கி வாய்ச் சரிகை, ஒரு துப்பாக்கிக் குழாய், இரண்டு கூடை துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை ஆங்கிலப் படைகள் மீட்டனர்.
இதனால் பண்டாரவன்னியன் தனது இருப்பிடமான பண்டார இலுப்பைக் குளத்திற்கு தப்யோடினார். இதன் நினைவாக வொன் றிபேக்கின் தினக்குறிப்பிலிருந்த தகவலைப்பார்த்த 1904 – 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவர் இருந்தார்.
1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர் ஒரு நடு கல்லை நிறுத்தினார். இந்தக் கல்லிலே
“HERE ABOUTS CAPTAIN VON DRIEBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCTOBER 1803.”
என்று பொறிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பண்டாரவன்னியன் 1811 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயப்படைகளை தாக்கும் திட்டத்துடன் நடமாடினான் என கதிர்காமநாயக்க முதலி ஆளுநர் ரேணருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இவரே பண்டாரவன்னியனின் நடவடிக்கைகளை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தியவராவார். மாறாக காக்கைவன்னியன் அல்ல.எனவே பண்டாரவன்னியன் பெரும் மன்னாகவோ இல்லாது சாதாரண படைத்தளபதியாக கிளர்ச்சியாளனாகவே செயற்பட்டிருக்கின்றான்.
அத்துடன் திரிபுபட்டிருக்கின்ற அவனுடைய வரலாறு எவ்வளவு பெரிய வரலாற்றுத் திரிபை எமக்குத் தந்திருக்கிறது. இதன்மூலம் வரலாற்றில் இல்லாத பழைப்பகுதியில் 1901 ஆண்டுகளில் வாழ்ந்த பண்டா வைரமுத்து என்கின்ற பெயரை வைத்துக்கொண்டு குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என்று முல்லைமணி அவர்கள் கற்பனையாக புனைந்த காவியம் இன்று வரலாறாகி நிலைக்க உண்மை வரலாறு மங்கியே விட்டது.
வெறும் 150 வருடங்களின் முன் வாழ்ந்த பண்டாரவன்னியனது வரலாற்றிலேயே இவ்வளவு திரிபு என்றால் மகாவம்சம் முதலான வரலாற்று நூல்களில் எவ்வளவு திரிபு இருக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை. வரலாறு என்பது ஒரு இனத்தின் காலத்தைக்காட்டும் கண்ணாடி எனவே வருங்காலத்திலாவது வரலாற்று திரிபில்லாது வரலாற்றுண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எல்லோரது ஆசையாகும்.
மூலம் – பதிவு