2011 ஆம் ஆண்டு நாட்டில் நல்லாட்சி என்ற நரியாட்சி மலர முன்பான காலம். சிவப்புத் துண்டை கழுத்தில் போட்டு ஊர் முழுக்க அலைந்து கொண்டிருந்த ஒரு இனவழிப்பு தலைவன் ஆண்ட காலம். தான் இனவழிப்பு செய்யவில்லை என்று தன் தாய் மீது அடித்து சத்தியம் பண்ணிக் கொண்டிருந்த (இன்றும் அலையும்) மகிந்தவின் ஆட்சி நடந்த காலம். அதனாலோ என்னவோ வரண்டு, வெடித்து காய்ந்து போய்க்கிடந்த வடமராட்சி கிழக்கின் ஒரு எல்லைப்புற கிராமம் அது. கார்த்திகை மாதத்தின் ஆரம்ப நாட்களில் வானில் இருந்து நிலம் வந்த மழை நீரைத் தாங்கி உயிர்ப்பு பெறுகிறது அந்த நிலம். மண் முழுக்க ஈரத்தால் நிறைந்து கிடக்கிறது. பயிர்கள், செடி கொடிகள் சூரியனை காண தம் வேர்களை விட்டு நிமிர்ந்தெழுகின்றன.
அப்படித்தான் அவனின் வீட்டு வாசலின் வேலியில் தன் கொடியின் தளிர்களை நிமிர்த்தி வானம் நோக்கி எழுந்து வேலியில் படர்கிறது அந்த செடி. அது தன் தாய் தேசத்தில் தனது உரிமையை நிறைவாக்கி முளை விடுகிறது. நாட்கள் நகர அந்த வேலியின் ஒரு பகுதி அந்த செடியின் ஆளுகையில் அழகாக கிடக்கிறது. அந்த வீட்டுக்காறன் அந்த அழகை ரசிக்க முற்பட்டான். அவனுக்கு தெரியாமல் இல்லை அந்த செடியால் தனக்கு ஆபத்து வரலாம் என்ற உண்மை. ஆனாலும் அவன் அந்த ஆபத்துக்காக எம் தாயகத்தின் ஒரு அடையாளத்தை அழித்துவிட எண்ணம் கொள்ளவில்லை. அது தன்பாட்டுக்கு வளருது வளரட்டும் என்பது அவனின் நிலைப்பாடு.
கார்த்திகை மாதத்தின் இறுதி நாட்களை காலம் நெருங்கிய போது. அந்த செடியும் தன் முதிர்ச்சியை அடைந்திருந்தது. கார்த்திகை மாதம் எம் தேசத்தின் காவல் தெய்வங்களை பூசிக்ககும் மாதம் அவர்கள் துயில் கொள்ளும் இல்லங்கள் சென்று அவர்கள் கல்லறைகளில் தொடரும் விடுதலை போராட்ட செயற்பாடுகளுக்காக உறுதி எடுக்கும் நாட்களைக் கொண்ட மாதம். ஆனால் தாயகத்தை பொறுத்தவரை அப்போதெல்லாம் அத்தனையும் முடக்கப்பட்டு கிடந்தன.
2009 இற்கு பின்னான காலத்தில் தாயகமெங்கும் மௌனித்து, வீட்டு அறைகளுக்குள் மட்டும் விளக்கேற்றி தம் காவலர்களை வழிபட்டது எமது தேசம் புலம் பெயர் தேசங்களில் மட்டும் மாதிரி நினைவாலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளாகி விட்ட காலம். அவ்வாறான ஒரு காலத்தில் தான் அந்த செடியும் முதிர்ச்சி அடைந்திருந்தது.
தனது முதிர்ச்சியின் பலனாக மொட்டு விட்டு பூவாக மலர்ந்தது. ஒற்றை பூவோடு அந்த செடி அவனது வீட்டு வாசலில் நிமிர்ந்து நிற்கிறது, போவோர் வருவோர் அதை பார்த்து மனதுக்குள் மகிழ்ந்தும் காதுக்குள் பேசியும் கொள்கின்றனர். “இத புடுங்கி எறியன் எதுக்கு வீட்டு வாசலில் இப்பிடி கிடக்க விட்டிருக்காய் ” அவனின் மனைவிக்கு நேரடியாகவே கூறத் தொடங்கினர் சிலர். ஆனால் அவனோ அதை கண்டுகொள்ளவில்லை. இந்த தேசத்துக்காக ஒரு சகோதரியை சிங்களத்தின் கோட்டை ஒன்றின் கடலடியில் வீரகாவியமாக கொடுத்த அவனால் அதை பிடுங்கி எறிய முடியவில்லை. அவளின் உயிர்ப்பாக கூட இருக்கலாம். அவனின் மனதில் அவ்வாறான எண்ணம் தோன்றவில்லை. அவன் அதை பார்த்து புன்னகைத்து விட்டு செல்வான்.
எம் கார்த்திகை தீபங்களின் நினைவு எழுச்சி நாட்களை புலம்பெயர் தேசத்தின் மக்கள் ஆரம்பித்திருந்தனர். அடுத்த நாள் கார்த்திகை 27 தேசத்துக்காக வீழ்ந்தவர்கள் நினைவுகளை மீட்கும் புனித நாள். அன்று அதிகாலை நேரம் அவனது வீட்டு வாசல் பச்சை உடைகளின் வருகையால் அதிர்கிறது. அவன் இழுத்து செல்லப்படுகிறான். ஏன் எதுக்கு என்று தெரியாது அவனின் மனைவியும் பின்னால் ஓடுகிறாள். ஊர் அமைதியாக வீட்டுக் கதவுகளை சாத்திக் கொள்கிறது. வீதியால் சென்றவர்கள் மட்டும் திரும்பிப் பார்த்து செல்கின்றனர்.
அவனுக்கான ஆபத்து மணி அடிக்கப்பட்டுவிட்டது. அவன் காணாமல் ஆக்கப்படலாம், அல்லது ஏதோ ஒரு முறையில் தண்டிக்கப்படலாம், அல்லது எதுவும் நடக்கலாம், அல்லது அத்தனையையும் கடந்து அவன் உயிருடன் மீளலாம் அல்லது இல்லாமலே போகலாம். ஆனால் ஒன்று மட்டும் நியம் இப்போது அவன் சிங்களத்தின் படைகளால் இழுத்து செல்லப்படுகிறான்.
எதற்கு என்பது தெரியாமலே அவன் இழுத்துச் செல்லப்படுகிறான். அப்போது தான் ஒரு சிங்களச் சிப்பாய் பாய்ந்து பாய்ந்து அவனின் வேலியில் நிமிர்ந்து பூத்துக் கிடந்த தமிழீழத்தின் தேசிய அடையாளங்களில் ஒன்றான “காந்தள் மலரை” அதை தாங்கி நிற்கும் காந்தள் செடியை வேரோடு பிடுங்கி எறிவதை கண்டான். அடி உதையின் வலியை மீறி சிரிப்பு வந்தது. பலமாக சிரிக்க முடியாவிடினும் சிரித்தே விட்டான். அந்த சிரிப்பினூடே அவன் சிந்திக்க வேண்டிய ஒரு நியத்தையும் இனங்கண்டிருந்தான்.
காந்தள் மரத்தின் வருகை சிங்களத்தால் ஏற்க முடியாத ஒன்றாகி விட்டது. அதுவே இந்த அடி உதைக்கான காரணம். எதிரிக்கு எம் அடையாளங்களை அழிப்பதில் எவ்வளவு முனைப்பு இருக்கிறது என்பதை அவன் பல முறை உணர்ந்திருந்தாலும் ஒரு பூவுக்காக இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தே முடிந்தது… கார்த்திகை பூ எங்கள் உயிரிலும் மேலான தமிழீழ தாயகத்தின் அடையாளமாக இல்லாமல் இருந்திருந்தால் அதன் அழகை சிங்களமும் இரசித்திருக்கலாம் ஆனால் காந்தள் மலர் எங்கள் உரிமைக்குரிய அடையாளமாகிப் போனதால் அழிந்து போகுமா? அழிக்கப்படுமா? என்பது விடையில்லா வினாவே…
கவிமகன்.இ
03.11.2017