வேகமாக வீட்டிற்குள் சென்ற கார்த்திக் ஏதுமே புரியாத ஒரு நிலையில் இருந்தான். அவனது அருமைத்தாயார் ஹாலின் நடுவே மருத்துவர்கள் புடைசூழ இருப்பதை பார்த்ததும் அவனை அறியாமல் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது. என் அம்மா கூப்பிடும் போது கவனிக்காமல் ஒரு பெண்மீதான ஆசையில் கண்மண் தெரியாமல் தான் ஓடிப் போனதை எண்ணி மிகவும் அருவருத்துப் போனான் கார்த்திக்.
கண்ணில் நீர்கோர்க்க மெதுவாக தந்தையை தேடிய கார்த்திக்கின் விழிகளில் அவனது தாயிற்கு
அருகில் கையை பிசைந்தபடி நின்றிருந்த தந்தையின் உருவம் கண்ணில் சிக்கியது. ஒரே நாளில் பத்து வருட அதிக முதுமையை காட்டிய தந்தையின் உருவம் கார்த்திக்கின் மனதில் ஈட்டி கொண்டு குற்றுவது போல இருந்தது. நேர்த்தியான ஆடையுடன் கம்பீரமாக நடந்து செல்லும் தந்தை இன்று இவ்வாறு முதுமையாக மாற எனது காதலே காரணம் என்று எண்ணி வெட்கிக்
கொண்டான் கார்த்திக்.
மருத்துவர்கள் அவசர அவசரமாக எல்லா விதமான சோதனைகளையும் செய்துகொண்டு இருந்தாலும் கார்த்திக்கின் மனம் அருவமும் உருவமும் இல்லாத இறைவனை தேடி அலையத்தொடங்கியது. ”என் அம்மாவை எப்படியாவது காப்பாற்று” நீ கேட்கும் எதையும் நான் தருவதற்கு சித்தமாக இருக்கின்றேன் என்று மனதார வேண்டிக்கொண்டான் கார்த்திக்.
கோயிலுக்கு போகச்சொல்லி கார்த்திக்கின் தாய் லட்சுமி கெஞ்சும் போதெல்லாம் அதை காதில் போட்டுக்கொள்ளாத கார்த்திக் இன்று அதே கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்டான்.
”என் கண்ணிற்கு தெரியாத எந்த இறைவனும் எனது அம்மாவை காப்பாற்றட்டும்” என்று அவனது வாய் ஓயாமல் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது.
”கார்த்திக், கார்த்திக்” என்று அழைத்த வைத்தியரின் குரலை கேட்டு அவர் அருகில் வந்தான் கார்த்திக்.
”சொல்லுங்கள் டாக்டர்” என் அம்மாவுக்கு எப்படி இருக்கின்றது? என்று பதைபதைத்த கார்த்திக்குக்கு
”உன் அம்மாவிற்கு ஏதும் இல்லை. ஒரு சிறு அடி தான் அதனால் ஒரு சிறு தையல் போட வேண்டி இருந்தது. இப்போது அவர்கள் களைப்பாக இருப்பார்கள் அவர்களை தொந்தரவு செய்யாமல் நன்றாக தூங்க விடுங்கள் என்று கூறிக்கொண்டு தனது குழுவினருடன் புறப்பட்டு சென்றார் வைத்தியர்.
எல்லோரும் புறப்பட்டு சென்ற பின்னர் பரமசிவம் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு எதனால் இவ்வாறு லட்சுமி விழுந்து இருக்க கூடும் என்று ஊகிக்க முடியாமல் இருந்தது.
”சங்கரன், சங்கரன்” என்று கடுமையாக கர்சித்த குரலை கேட்டு பயந்தபடி ஹாலுக்குள் ஓடினார் சங்கரன். எப்போதுமே அன்பாகவே அழைத்து பேசும் முதலாளியின் குரலில் இருந்த கோபம் சங்கரனை பதட்டமடைய செய்தது.முதலாளியின் கண்களை நேரடியாக பார்க்க விரும்பாத சங்கரன் தனது பார்வையை தன்னையும் அறியாமல் ஜன்னலுக்கு வெளியே சிதறவிட்டார் .
கடந்த இருபத்தைந்து வருட அனுபவத்தில் சங்கரனை அறிந்த பரமசிவத்திற்கு சங்கரனின் இந்த செயற்பாடு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. தன்னில் தவறு இல்லை என்றால் முதலாளி என்று கூட பார்க்காமல் நேர்மையை பேசும் சங்கரனை பிடித்தே அவனை இவ்வளவு காலமும் தன்னுடன் சேர்த்து வைத்திருந்தார் . ஆனாலும் அவரது பணத்திமிரும் இடையிடையே எட்டி பார்க்க தவறுவதில்லை. ஓரளவு சங்கரனை பற்றி சரியாகவே தெரிந்து வைத்திருந்த பரமசிவத்திற்கு சங்கரனின் இன்றைய முக பாவனை ஏதோ தவறாக உணர்த்த அவரது முக அசைவுகளை ஆழமாகவும் கவனிக்க தொடங்கினார். சங்கரனின் பார்வையை தொடர்ந்த பரமசிவத்திற்கு அங்கே கார்த்திக் திக்பிரமை பிடித்தவன் போல வெளி தோட்டத்தில் அமர்ந்து இருந்தது பெருத்த சந்தேகத்தை எழுப்பியது.
லக்ஷுமியின் இந்த விபத்திற்கும் கார்த்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர்ந்து கொண்ட பரமசிவத்திற்கு கார்த்திக் எதனால் இப்படி நடந்திருக்க கூடும் என்று அறிந்திட முடியவில்லை.
தன்னிலும் தாய் லக்ஷிமி மீது உயிரையே வைத்திருக்கும் தன் மகன் தனது தாயின் விபத்துக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்? என்று புரியாமல் தலை சுற்ற தொடங்கியது பரமசிவத்திற்கு..
”கோபம் அதிகம் ஏற்பதும் போது. தலை சுற்றும் தலை வலியும் கூடவே சேர்ந்து வரும்” என்று எப்போதுமே லக்ஷிமி முனகுவாள். அதனாலேயே தனது கோபத்தை எல்லாம் கட்டி ஒரு மூலையில் எறிந்துவிட்டு சந்தோசமாக மனைவியுடன் அன்பாக இருப்பார் பரமசிவம். காதல் மனைவி மீது எப்போதும் கோபம் கொள்ளாத பரமசிவம் மகனின் சின்ன சின்ன சேட் டைகளையும் கவனிக்க வேண்டாம் என்று கூறும் போது மட்டும் மனைவி மீது தீராத கோபம் ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் அவள் தன்னை காதலிக்கும் போது கெஞ்சிய, கொஞ்சிய இளமை நினைவுகளை இரைமீட்டி அவளை கிண்டலத்து கோபத்தை மறப்பார் பரமசிவம்.
அவரது காதல் தேவதை இன்று கட்டிலில் பிடுங்கி எறிந்த புல் போல நலிந்து உறங்குவதை காண விரும்பாமல் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரையும் துடைக்க முடியாமல் வாளா இருந்தார் பரமசிவம்.
தோட்டத்தில் இருந்த கார்த்திக் மெதுவாக வீட்டுக்குள் வந்தான். யன்னல் ஓரத்தில் அருகில் கண்ணில் கண்ணீருடன் இருந்த தந்தையை கண்டதும் அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்பா அப்பா என்னை மன்னித்து விடுங்கள் அம்மாவின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என்று கதறி அழுதான் கார்த்திக்.
கார்த்திக் சொன்னதை முழுவதுமாக ஏற்க முடியவில்லை பரமசிவத்தால்.
”என்னடா சொல்கின்றாய் உனக்கு என்ன பைத்தியமா என்று கேட்டார்” பரமசிவம்,
”இல்லை அப்பா உண்மையை தான் செல்கின்றேன் அம்மாவின் இந்த நிலைக்கு காரணம் நான் தான். ஒரு பெண்ணில் நான் கொண்ட காதல் என் கண்ணை மறைத்ததால் தான் என் அம்மா கூப்பிட கூப்பிட அவளை தேடி ஓடினேன்” என்று கதறினான் அவன்.
”காதலா என்னடா சொல்கின்றாய் உன்னை உயிரோடு விட மாட்டேன்” என்று கூறியபடி மாடிப்படியை நோக்கி ஓடினார் பரமசிவம்.
வேகமாக தனது அறைக்கு சென்ற பரமசிவம் அழகிற்காக வைத்திருந்த சவுக்கை கையில் எடுத்துக்கொண்டு கார்த்திக்கை நோக்கி ஓடினார்.
தொடரும்