நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தினால் மாத்திரம் முடியாது. இதற்காக சகல இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அத்துடன் 2013ஆம் ஆண்டில் நாட்டில் மதவாதம் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பௌத்த துறவிகள் என்று சொல்லக்கூடியவர்களே நாட்டில் பல்வேறு இடங்களில் இனவாதத்தை பரப்பி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடுமற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கவலை தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகமும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “ஒற்றுமையில் வேற்றுமையே தேசத்தின் பலம்” என்னும்தொனிப்பொருளில் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் சகவாழ்வும் எமது நாட்டிற்கு அத்தியாவசியமான விடயங்கள். எமது நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப நான் என் வாழ் நாளில் அரைவாசிப் பகுதியையும் கழித்துள்ளேன். பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளேன்.
எமது நாடு சிறியதொரு வளமானதொரு நாடு. கலாசாரத்திலும் நாகரிகத்திலும் உன்னதமானதொரு வரலாற்றை கொண்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு அதிக காலம் தொட்டு சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள்இங்கு வாழ்ந்துள்ளார்கள். அதன் பின்னர் பல்வேறு இனங்கள் இங்கு வந்துள்ளன. பல தசாப்தங்களாக எவ்வித பிளவுகளும் இன்றி நாம் ஒற்றுமையாக வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
தென் இந்தியாவில் பல்வேறு ராஜ்ஜியங்கள் காணப்பட்டன. அங்கிருந்து பல்வேறு அரசர்களும் இங்கு வந்து எமது நாட்டை கைப்பற்றப்பார்த்தார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற நாம் எல்லோரும் போராடியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.