மாவீர நண்பனுக்கு மனதார ஒரு கடிதம்
களவாடிக் கொண்டு எங்கள் நட்பினை
கலைக்க வேண்டாம்
]\
மடல் இலக்கம் ..ஒன்று
வணக்கமே எந்தன் நண்பா ….
வகை வகை வெற்றி எல்லாம்
வந்து உன் அருகில் சொல்ல
ஆசைகள் மட்டும் இல்லை
ஆவலும் அதுவே நண்பா
முதல் வரி மறந்து கொண்டேன்
முகவரி தொலைத்து விட்டேன்
முன்னேற்றம் ஏதும் இல்லை
முடிந்தது போரும் நண்பா
ஆசைகள் கோடி உந்தன்
அடி நெஞ்சில் தானிருக்க
தேசமே எங்கள் என்று
தேடியே நீயும் வந்தாய்
அன்று தான் உன்னைக் கண்டேன்
ஆசையாய் அருகில் வந்தாய்
தேசமே வருவதென்றால்
தேகமே எரிப்பேன் என்றாய்
பாசமாய்ப் பழகி கொள்வோம்
பயிற்சிகள் முடித்தும் கொண்டோம்
பக்குவம் தன்னைப் பெற்று
பகைவரை பகைத்துக் கொண்டோம்
கனவினால் ஒன்றிணைந்தோம்
கனவினால் களம் புகுந்தோம்
கனவினால் காயம் கண்டோம்
கனவினால் உனை இழந்தோம்
களமது வேறாயினும் என்
உளமது உன்னை சுற்றும்
பலமது பாசம் அல்ல
தேசமே எந்தன் நண்பா….
மாதத்தில் ஒரு நாள் வந்து
கல்லறை தழுவி கொள்வேன்
மகிழ்வுடன் என்னை ஏற்பாய்
மடியினில் அணைத்தும் கொள்வாய்
கல்லறை ஓரம் வந்து காதினை
வைத்து நிற்பேன்
சில்லறை என்பார் சில பேர்
எனினும் உன் குரல் கேட்டதுண்மை
கனவினில் வந்தாய் ஓர் நாள்
கல்லறை வாடா என்றாய்
கண்டதோ மரணக் கோலம்
எப்படி முடியாதென்பேன்
உன் துயிலறை ஆவல் கொண்டு
வாசலில் வந்து நின்றேன்
ஒரு கணம் உறைந்து போனேன்
எப்படி சொல்வேன் வாயால்
கல்லறை காணவில்லை
கருவறை தூங்கவில்லை
துயிலறை எங்கே என்று
துளைத்தது எந்தன் நெஞ்சை
ஓரத்தில் உந்தன் குரல்
ஓங்கியே கேட்டதடா
விழிகளை துடைத்து விட்டு
தேடினேன் உன்னை மட்டும்
ஆழவாய் உழுத மண்ணில்
அங்காங்கே வரித் துணிகள்
வீரத்தை போர்த்தி கொண்ட
வெற்றியின் கொடித் துணியும்
கண்டது உன்னை அல்ல
கல்லறைத் துண்டும் அல்ல
எலும்பிலே இருந்து அன்று
எழுந்தது உந்தன் குரல்
அள்ளியே அணைத்தேனடா
அன்று உன் தொடை எலும்பை
மனவறை வந்த உன்னை
மகிழ்விக்க என்ன செய்ய
அன்று உன் தொடை எலும்பே
அப்படிப் பார்வை பார்த்து
அடிமையா நண்பா என்று
அழுததைஉணர்ந்து கொண்டேன்
ஆயிரம் சொல்ல உண்டு
ஆறுதல் எனக்கு வேண்டும்
உன்னிடம் சொல்லி எந்தன்
துயர் எலாம் ஆற்ற வேண்டும்
எப்படிப் போரில் தோற்றோம்
எப்படி உன்னை விதைத்தோம்
எப்படி வீரம் இழந்தோம்
எப்படி வாழுகின்றோம்
எழுதுவேன் மறு மடலில்
களப்பணி இல்லை நண்பா
பொதுப்பணி நிறைய உண்டு
இன்னுமோர் மடலில் மீதி…
– கவிப்புயல் சரண்.