வானத்து நட்சத்திரங்கள்
அவர்களை நோக்கியே
விழி சிமிட்டிக் கொண்டிருக்கிறன
நாங்கள் ஊரெங்கும் விதைத்த
வீர விதைகள் உயிர்ப்புக்காக
வானம் இடைக்கிடை
நீ சொரிந்து கொண்டிருக்கிறது
தேசம் எங்கும்
மஞ்சளும் சிகப்புமாக
மகரந்த சேர்க்கையின்
பிறப்பாய் பூத்துக் குலுங்குகிறது
தேசத்தின் காந்தள் பூ
நித்தியகல்யாணிப் பூக்கள்
தம்முடல்களை சுற்றிக் கட்டப்படும்
வாழைநார்களின் இறுக்கத்தை
தாங்கிக் கொள்கின்றன
நெருப்பு கதிர்கள் தாங்கும்
சூரிய கற்றைகள் கூட
நிலவொளியாய் வெண்மை பரப்பி
தன் புதல்வர்களை
சுற்றிச் சுற்றி வருகிறது
விழி மூடித் தூங்கும்
விதைகள் நினைவெடுத்து
தேசம் முழுக்க இசைக்கவிதைகள்
முளைக்கின்றன
கோவில் மணிகள் எல்லாம்
அந்த வினாடிக்காக அமைதியாக
தம் இருப்பிடம் தெரியாது தூங்குகிறன
தேசத்தின் உரிமைக்குரல்
மாவீரங்களை வானோசையாக
காற்றோடு கலக்கிறது
நாங்களும் காத்திருக்கிறோம்
அவர்களுக்காக தம்முயிர்
போக்க போகும்
தீக்குச்சிகளோடும்
அவர்களுக்காக உயிர்
விட்ட பூக்களின் சரத்தோடும்
அவர்கள் தூங்கும் இல்லங்களில்
விழியழுது விழியழுது
களைத்துப் போய்க் கிடக்கிறோம்
அப்போதும் எங்கோ ஒரு மூலையில்
ஓய்ந்து போகாத வெடியோசை
காதில் வீழ்கிறது.
அன்றும் என்றும்
துப்பாக்கிகள் மட்டும்
ஓய்வில்லாது கனன்று
கொண்டிருக்கிறது.
தூரக்கேட்ட வெடியோசை
ஒரு விதையை வீழ்த்தி இருக்கலாம்
அவனின் நெஞ்சைப் பிரித்து
குருதி குடித்திருக்கலாம்
அவளின் குரலைப்பறித்து
கட்டளை இடும் அதிகாரத்தை
பறித்தெடுத்திருக்கலாம்
கழுத்தோடு, காலோடு, கையோடு
என்று அவையங்கள் சிதறியிருக்கலாம்
உயிர் தின்ற ரவைகள்
அமைதியாக மண்ணில்
உறங்கிக் கொண்டிருக்கலாம்.
இரத்தினம் கவிமகன்