கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான மூலக்கூறாக அமைந்துள்ளது. கற்றலோனியரின் தனிநாட்டுக்கான அணுகுமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை அலசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி முடிவுகளை அவதானிப்போம். கற்றலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தினை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ அறிவித்தார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கற்றலோனியா வருவதாகவும், கற்றலோனிய அமைச்சரவையும் கலைக்கப்படுவதாகவும் விரைவில் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய அரசு கற்றலோனியாவில் அமைக்கப்படுமெனக் குறிப்பிட்டார். ஆனால் இத்தகைய நடைமுறைக்கு ஸ்பெயின் நாட்டின் 155வது அரசியலைப்பு பிரிவு நெருக்கடி நிலையில் நேரடி ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான அனுமதியை நாடாளுமன்றத்தின் பெறவேண்டிய நிலையில் 214 வாக்கு ஆதரவாகவும் 47 வாக்கு எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே நேரடி ஆட்சிக்குரிய நடவடிக்கையை ஸ்பெயின் அரசு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதே நேரம் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 70 வாக்கும் எதிராக 10 வாக்கும் கற்றலோனியா நாடாளுமன்றத்தில் நிகழ்ந்துள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் கற்றலோனியாவை தனிநாடாக பிரிந்து செல்வதை அனுமதிக்காமைக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளதாக தெரிய வருகிறது.
பிரதானமாக ஸ்பெயின் பொருளாதாரத்தில் 20 விழுக்காட்டினை நிரப்பீடு செய்கின்ற பிராந்தியமாக கற்றலோனியா உள்ளது. குறிப்பாக பர்சிலோனா முக்கியமான நகரமாக அமைந்திருப்பதுடன் ஜரோப்பிய நகர சனத் தொகையில் ஏழாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை இழப்பதென்பது ஸ்பெயினின் பொருளாதார இழப்பாகவே அமையும். நகரமயவாக்கம் என்பதுடன் தொழில்சார் நகரமாகவும், உற்பத்தியின் பிரதான மையமாகவும் பர்சிலோனா காணப்படுகின்றது. இதன் பொருளாதார வலுவே ஸ்பெயினின் பொருளாதாரப் பலமென்பதை ஸ்பெயின் அரசாங்கம் உணர்ந்துள்ளது. ஏற்கனவே பர்சிலோனாவை விட்டுத்தருமாறு ஸ்பெயின் அரசாங்கத்தின் முகவர்கள் வாயிலான உரையாடல் நிகழ்ந்துள்ளது. அதற்கான வாய்ப்பினை கற்றலோனிய தனிநாட்டு ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். முழு மொத்த சனத்தொகையில் 16 சதவீதமானவர்கள் கற்றலோனியாவில் வசிக்கின்றனர். இதனாலும் ஸ்பெயின் கற்றலோனியாவை இழக்க தயங்குகிறது.
அதனைக் கடந்து ஸ்பெயினின் பிரிவினை அந்த நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டினை பாதிக்கும் என்பதோடு ஜரோப்பிய யூனியனின் அங்கம்வகிக்கும் ஸ்பெயினின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குலைவடையுமென ஸ்பெயின் அரசாங்கம் அச்சப்படுகிறது. ஜரோப்பாவின் பொருளாதார பதற்றம் ஸ்பெயினின் எதிர் காலத்தை பாதிக்குமென கருதுவதுடன் கற்றலோனியா பிரிவதென்பது அத்தகைய உறுதிப்பாட்டினை மேலும் பலவீனப்படுத்துமென கருத இடமுண்டு.
எல்லாவற்றையும் விட ஜரோப்பாவுக்கும், ஏனைய கண்டத்து நாடுகளுக்கும் உள்ள பிரதான அச்சுறுத்தலாக உள்ளமை அமைதியான வழியில் தனிநாட்டை அமைப்பதற்கான வழிமுறையாகும். இத்தகைய அனுபவத்தினை ஜரோப்பாவுக்குள் வாழும் அதிருப்தியுற்றுள்ள தேசிய இனங்கள் பயன்படுத்த முனைவதுடன் உலகிலுள்ள அடிமைப்படும் தேசிய இனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமென கருதுகின்றன. ஜரோப்பாவுக்குள் ஏற்பட்டுள்ள பிரதான பொருளாதார நெருக்கடியான தேசிய இனங்களின் பிரிவினைக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமென கருதுகின்றன. இதில் ஜரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியாவின் பிரிவினை வலுவான காரணமாக கொள்ளப்படுகின்றது. அதனைப் பின்பற்றியே கற்றலோனியரது வாக்கெடுப்பு சாத்தியமானது. இதற்கு முதல் பல தடவை முயன்று கைவிட்ட வாக்கெடுப்பினையே கற்றலோனியர்கள் செயல்படுத்தி வெற்றி கண்டனர்.
இது ஜரோப்பிய அரசியலில் புதிய சகாப்தமாகவே பார்க்கப்படுகின்றது. வெறுமனமே கயிற்றலோனியர் பிரிவினையல்ல இச்சம்பவம். ஒட்டுமொத்த தேசிய இனங்களினதும் உரிமைக்கான அணுகுமுறையாகும். முதலாளித்துவத்தின் உச்ச வளர்ச்சியின் போது சோஸலிஸவாதிகள் தேசிய இனப்பிரச்சனைகளுக்கு ஆயுதப் போராட்டம் ஒரு வழிமுறையாக பின்பற்றத் தூண்டினர். இதனால் சோஸலிஸம் வலுவான போது பிரிந்து செல்வதெல்லாம் தேசிய இனங்களின் விருப்புரிமையாகவே ஆதரிக்கப்பட்டது. சோஸலிஸ்டுகளின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாகவே பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான முடிவினை உரிய தேசிய இனம் மேற்கொள்ள முடியுமென்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது.
சோவியத் யூனியனின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட பிரிந்து செல்வதற்கான உரிமை அந்தந்த மாநிலங்களுக்குரியதென்பது அரசியலாகப் பார்க்கப்பட்டாலும் தேசிய இனங்களுக்கு ஆரோக்கியமானதாகவே அமைந்திருக்கின்றது. மாநிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களால் வடிவமைக்கப்பட்ட நாடுகளுக்கு அதிக நெருக்கடியை இத்தகைய அணுகுமுறை ஏற்படுத்தியிருந்தது. எதுவாயினும் சோஸலிஸம் தனித்துவத்தை பாதுகாக்கும் சூழல் வரை உலகிலுள்ள தேசிய இனங்களுக்கான காப்புரிமை உத்தரவாதப்படுத்தப்பட்டது. பல தேசிய இன அரசுகள் அனைத்தும் பிரிந்து சென்று தனியரசுகளை தேசிய இனங்களே அமைத்துவிடும் என்ற எண்ணத்தில் செயல்பட்டன. இதனால் அதிகாரப்பகிர்வு மிக சிறப்பாக அமைந்திருந்தது. அதனால் மத்திய அரசு பலமானதாகவும் உறுதி மிக்கதாகவும் பேணியது. தவறிய மத்திய அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்திற்கு சோஸிலிஸ அணி ஆதரவளித்தது. அவ்வகைப் போராட்டங்கள் நிலைத்திருக்கவும் பிரிந்து செல்லவும் காரணமாக சோஸலிஸ அணியின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் அமைந்தன.
சோஸலிஸ அணி தகர்ந்த போது முதலாளித்துவ அணி சோஸலிஸ அணி மீது அத்தகைய பிரிந்து செல்லும் உரிமையைப் பாவித்து சோவியத் யூனியனையும் அதன் ஆதரவு நாடுகளையும் தகர்த்தது. குறிப்பாக கிழக்கு ஜரோப்பாவை வேகமாக துண்டாடியது. இது முதலாளித்துவத்தின் உச்சமான அரசியல் உத்தியாக அமைந்தது. சோஸலிஸ முகாம் தகர்ந்து முதலாளித்துவம் தனியாதிக்க அரசியல் எழுச்சியான பின்பு முதலாளித்துவமே தனது நலனுக்கு தேசிய இனப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எழுத ஆரம்பித்தது. தேசிய இனங்களின் ஆயுத விடுதலைப் போராட்டங்களை தனது நலனுக்கு எட்டிய விதத்தில் கையாளக் தொடங்கியது. அனேக தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயம் வழங்குவது போல் முதலாளித்துவம் செயல்பட்டாலும் அதில் முதலாளித்துவத்தின் இலாபம் மேலோங்கியிருந்தது. அது தனது இலாபகரமானதென கருதிய பிராந்தியங்களை கையாளவும், நாடுகளைத் துண்டாடவும் தேசிய இனப்பிரச்சினைகளை இனப்பிணக்குகளாக முதன்மைப்படுத்தி செயல்படத் தொடங்கியது. அதனையும் கிழக்கு ஜரோப்பாவுக்குள்ளும், ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குள்ளும் பிரயோகித்து வந்தது.
மேற்கு ஜரோப்பாவுக்குள் அயர்லாந்து விடயமும் கற்றலோனிய விவகாரமுமே முதலாளித்துவத்தின் தனித்தன்மை நெருக்கடியான விடயம். இத்தகைய சவாலை எதிர்கொள்வதென்பது முதலாளித்துவத்தின் மேற்குறித்த உபாயத்திற்கு விரோதமானதேயாகும். காரணம் அது மேற்கு ஜரோப்பா சார்ந்த விடயம். சோஸலிஸம் போன்று முழு உலகத்திற்குமான தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு எதனையும் முதலாளித்துவம் கொண்டியங்கவில்லை.
இதனால் மேற்கு ஜரோப்பாவுக்குள் ஏற்படும் தீர்வுகள் முழு மேற்குலகத்தையும் அதிருப்தியுடன் வாழும் தேசிய இனங்களிடையேயும் அதிக பாதிப்பினை ஏற்படுத்துமென மேற்குலகம் அச்சமடைகிறது. தேசிய இனங்கள் தனியரசுகளை அமைக்குமாயின் முதலாளித்துவத்தின் உறுதிப்பாடு சோஸலிஸம் போன்று பலவீனமடையுமென கணக்குப் போடுகிறது. இதனால் முதலாளித்துவத்தின் அதுவும் மேற்கு முதலாளித்துவத்தின் தமது உலக ஆளுகை கேள்விக்குரியதாகுமென அச்சமடைகின்றன. இதனை தவிர்ப்பதற்கே கற்றலோனியா மீது நெருக்கடியைப் பிரகடனப்படுத்தியுள்ளன.
குறிப்பாக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் கற்றலோனியா விவகாரத்தினை முற்றாக நிராகரிக்கின்றமை குறிப்பான விடயமாக பேசப்படுகின்றது. அனைத்து நாடுகளும் தமது நலன்களுக்கு உட்பட்டவிதத்தில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை கற்றலோனியாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மேற்கு ஜரோப்பிய நாடுகளுக்குள் முரண்பாட்டை எதிர்கொள்ள தயாராக இல்லை என்பதை உணர்ந்துள்ளது. மேலும் மேற்கு ஜரோப்பாவுக்குள் நிலவும் முடிவினால் பிற பிராந்தியங்களிலும் அத்தகைய முடிவுகளை நோக்கிய நிலை ஏற்படும். கிழக்கு ஜரோப்பாவின் பிரிவினை என்பது ரஷ்சியாவை பலவீனப்படுத்துவதாகவே அமைந்ததனால் அதற்கு அமெரிக்கா ஆதரவளித்தது. ஆனால் மேற்கு ஜரோப்பாவை பலவீனப்படுத்துவதென்பது அமெரிக்காவை பலவீனப்படுத்துவதாக அமையும். அதுமட்டுமன்றி மிக நீண்டகாலமாக ஸ்பெயினுடனான உறவினை அமெரிக்கா பேணவேண்டிய நிலையிலுள்ளது.
பிரித்தானிய ஜரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம் ஏற்கனவே சர்ச்சையை மேற்கு ஜரோப்பாவிற்குள் ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் விடயம் தேசியவாதத்தை மேற்கு ஜரோப்பாவுக்குள் தூண்டியுள்ளது. இதனை மேலும் முரண்பாடு அடையச் செய்ய அமெரிக்கா முயலாது. அவ்வாறே ஏனைய மேற்கு ஜரோப்பிய நாடுகளதும் நிலைப்பாடுமாகும். எல்லா அரசுகளும் தேசிய இனங்களுடன் முரண்பாட்டைக் கொண்டிருப்பதனால் கற்றலோனியாவை ஆதரிப்பதென்பதை கடினமான முடிவாக கருதுகின்றன.
இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு கற்றலோனியா போன்ற முடிவை எட்டிவிட்டால் ஆபத்தானதென கருதுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அத்தகைய முனைப்பினை காட்டியுள்ளமை ஆபத்தானதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் தீவிர தமிழ் அரசியல் வாதிகளும்,புலமையாளர்களும் பொது வாக்கெடுப்பு அவசியமானதாக உணர்கின்றன. இதனால் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே இந்த விடயத்தில் தனது மறுப்பினை தெரியப்படுத்தியுள்ளமை தென் இலங்கை தீவிரகோட்பாடுகளையும் திருப்திப்படுத்துவதாக அமையும்.
ஆனால் கற்றலோனியரின் தீர்மானம் போராடும் தேசிய இனங்களுக்கு முன்னுதாரணமானது. ஜனநாயக மரபுகளுக்கும் சட்ட வரைபுக்கும் உட்பட்ட விதத்தில் பொதுவாக்கெடுப்பினை நிறைவு செய்துள்ளன. இத்தகைய முடிவுகள் தேசிய இனங்களின் நலனுக்கமைவானது மட்டுமல்ல ஜனநாயக கோட்பாட்டு வரைபுக்கும் நியாயமானதாகும். மேலும் ஆயுதப் போராட்ட வழிமுறையூடான விடுதலைப் போராட்டங்களும், பிரிவினைகளையும் உலகம் நிராகரிக்கும் போது மிதவாத அணுகுமுறை மிகச்சிறப்பான முடிவாக உள்ளது. இதனை போராடும் தேசிய இனங்கள் கடைப்பிடிப்பது, அதனை நோக்கி தேசிய இனங்களை நகர்த்துவதும் தவிர்க்க முடியாததாகும்.
எனவே கற்றலோனியரை உலகம் அங்கீகரிக்காது விடலாம். அத்தலைவர்களை தேசத்துரோகமிளைத்தவராக கருதலாம். ஆனால் தேசிய இனங்களின் விடுதலைக்கு மிகச் சிறந்த உத்தியாக பிரிந்து செல்வதற்கான உபாயமாக பொதுவாக்கெடுப்பு அமைந்துள்ளது.