உன் நினைவுகள் சுமந்து
நிதம் பாய்கின்ற என்
வீட்டுக்குப் பின்னால்
சம்புப் புல்லுகளால்
நிறைந்து கிடக்கும்
வாய்க்கால் கரை
ஓரத்தில் தினம் குந்தி
இருந்து வானத்தை
வெறித்து பார்க்கிறேன்
தெரியும் நட்சத்திரங்களில்
தனித்து நிற்பது நீயா?
அன்று கவிக்கு கருத்தந்த
என் தந்தையா?
தினம் தினம் அந்த
வினாவுக்கான விடையை
தேடியே நான் வெற்றுத் தரையில்
ஒற்றை நட்சத்திரத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறேன்
உன் மூச்சுக்காற்று
நின்ற போது
என் மூச்சுக்காற்றாக
உன்னைத் தானே சுவாசித்தேன்
நெஞ்சு பிரிந்து
சிந்திக் கிடந்த உன் குருதி
குளித்த என் மடி
உன்னைத் தானே தேடுகிறது
என் கரம் பற்றி
“அம்மாவை பார்த்துக்கொள் …” என்ற
உன் இறுதி உதட்டு மொழியை
தொலைக்க முடியாது
என் மனம் திணறுகிறது
கனத்து போய்க் கிடக்கும்
பசுமையான நினைவுகளை
கடந்து போக முடிந்தாலும்
அடி எடுத்து நடக்க முடியாது
நிலைத்து கிடப்பது
நட்பெனும் தியாகத்தின்
உச்சம் தானே நண்பா…
என்னை காத்து
வித்தாக நீ வீழ்ந்த
கணப் பொழுதை
எப்படி விட்டுச் செல்ல முடியும்?
அப்போதெல்லாம் நாங்கள்
இரு மரங்களாக தினம்
நிமிர்ந்து கிடக்கும்
அந்த ஈரக்கரையோரம்
உன்னை மட்டும் காணாது
சலசலத்து அழுது
ஓடிக்கொண்டிருக்கும்
வாய்க்காலின் கண்ணீருக்கு
நான் என்ன சொல்வேன்…?
உனக்கும் எனக்குமான
ஆயிரம் தாண்டிய கதைகள்,
ஆசைகள், விருப்பங்களை
பூத்துக் கிடக்கும் அல்லிக்
கொடிகள் மட்டும் தானே
அறியும் தோழா
அவையும் இப்போதெல்லாம்
உனைக் காண முடியா நினைவில்
என்னை பார்த்து சிரிப்பதில்லை
நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை
தலை கவிழ்ந்தே கிடக்கின்றன…
சண்டைக்களம் கண்டு
விழுப்புண் வயிற்றில் கொண்டு
வந்த போது கட்டில்
படுக்கை தொலைத்து
கரமழைந்து நீ படுத்த
மணல் படுக்கை
உனை காணாது
இன்றும் அழுது கொண்டு
கிடக்கிறது…
என் தேசமெங்கும் பரந்து
கிடக்கும் பச்சை விசச் செடிகளை
வெட்டி விட முடியாது நான்
கோழையாகி வந்ததற்கு அவை
என்னில் கோவம் கொண்டருக்கலாம்
தங்கள் மேனிகள் மீது
மிதிக்கும் இராணுவச் சப்பாத்துகளை
எரித்தழிக்காது ஓடி வந்ததுக்காக
அவை என்னை சபிக்கலாம்
நீ தந்த குப்பியை எங்கோ
தூக்கி எறிந்த பயந்தவனை
பார்த்து கேவலமாக நினைக்கலாம்
நீ வீழ்ந்த இடத்தை கூட
மறந்து உயிர் காத்து அடிமையாகிய
என்னைப் பார்த்து
அவர்களுக்கு சினம் வந்திருக்கலாம்
என்ன செய்ய நண்பா
நீயற்ற ஒவ்வொரு வினாடியும்
அழகற்ற குறுக்கு
கோடுகளாக கிறுக்குப்பட்டு
கிடக்கிறது
நீ வரைந்த ஈழக் கனவை
மட்டும் என் மனது
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
நனவாக்க என்றோ ஒரு நாள்
தனித்து ஒளிரும் அந்த
நட்சத்திரம் எனக்கு துணையாகும்
அதுவரை தினமும் அதனுடனே
பேசிக் கொண்டிருப்பேன்
உன் நினைவுடனே…
கவிமகன்.இ
13.11.2017