புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார்.
மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி.
அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான்.
வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது.
அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான்.
கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 )
செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது.
இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும்.
ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது.
தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்…
கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான்.
சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண…
கவிமகன்.இ
17.11.2017