மறக்கத்தகுமா? 19-11-2017
1991.கார்த்திகை திங்களின் 19 ஆவது நாள்.
தமிழீழ காவல்துறை தனது பணியை ஆரம்பித்த நாள்.
தமிழீழ தேசிய வரலாற்றில் மக்களுக்கான பணிகளில் எமது மரபுவழி இராணுவம் அடுத்த ஒரு மைல் கல்லை தொட்டு நின்ற நாள். தேசத்தலைவனால் தன் மக்களுக்காக புதிய கட்டமைப்பு ஒன்று உருவாகிய நாள். அத்தனை காலமாக அரசியல் போராளிகளே மக்கள் பிரச்சனைகளையும் சமூக பிரச்சனைகளையும் கவனித்து வந்ததும், அதை தனிச் செயற்பாட்டு அலகாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு அதன் முதற் செயற்பாட்டு அணி தமது கட்டமைப்புக்கான முழு பயிற்சியை பெற்று வெளியேறி பணி ஆரம்பித்ததுமான ஒரு வரலாற்று நிகழ்வு நடந்த நாள் இன்று
தமிழீழ காவல் துறை என்ற பெயரோடு தமது பணியை ஆரம்பித்த விடுதலைப்புலிகளின் மக்களுக்கான இந்த கட்டமைப்பு உறுப்பினர்கள் தமது செயற்பாடுகாளால் மக்கள் மீதான சட்டம் ஒழுங்குகளை நிறைவாக கடைப்பிடித்து தேசத்தை கட்டியெழுப்பும் அரிய பணியை செய்தார்கள் என்றால் அது மிகையாகாது….
1991 நவம்பர்18அன்று பயிற்சியை முடித்த தமிழீழக் காவல்துறை நவம்பர் 19முதல் இயங்கத் தொடங்கியது.
இந்த கட்டமைப்பை முதன்முதலாக பொறுப்பெடுத்து தமிழீழ தேசம் எங்கும் தன் பணியை சிறப்பாக செய்தவர். இறுதியாக தமிழீழ அரசியற் துறையின் பொறுப்பாளராக இருந்த பா நடேசன் அவரது உறுதியான உழைப்பே தமிழீழ காவல்துறை கட்டமைப்பு உயர்ந்து நிமிர்ந்தது என்பது நியம். இவர் பிரிகேடியர் தமிழ்செல்வன் வீரச்சாவடைந்த பின் அரசியல்துறைக்கு பொறுப்பாக வர தமிழீழ காவல்துறையை இளங்கோ / ரமேஷ் பொறுப்பெடுத்தார். தமிழீழ காவல்துறை மக்கள் செயற்றிட்டங்கள் மட்டுமன்றி, களங்களிலும் தமது ஆழுமையை காட்டி பல களங்களில் எதிரியை புறமுதுகிட செய்தார்கள் என்றால் அது மிகையாகாது…
காவல்துறை மாவீரர்கள் அனைவரையும் இந்த நாளில் வணங்குகிறோம்.
கவிமகன்.இ