இளம் பூங்கன்று ஒன்று
வாடத் தொடங்கிவிட்டது
யாருமற்ற தனிமையில்
தவிக்கும் அதன் பக்க வேர்கள்
மெல்ல பட்டுப் போக
தொடங்கி விட்டன
வலி சுமந்து நிற்கும்
இளைய பூ மரம்
தலை நிமிர்த்த முடியாத
கொடூரத்தில் மெல்ல
எட்டிப் பாக்கிறது.
அது வாழ்ந்த பசுமையான
அந்த நிலத்தில்
நீர் ஊற்றப்பட்டு
உரமிடப்பட்டு நாட்கள்
கடந்து பலவாகி விட்டன
வெடித்து பல தகடுகளாக
பிரிந்து கிடக்கும் அந்த
நிலத்தை பூங்கன்று
வெறித்து பாக்கிறது.
அதன் பசுமையான நாட்கள்
குறைந்தவை எனிலும்
நிறைவானவை
தினம் பல பத்து கைகளின்
ஸ்பரிப்புக்குள் வளர்ந்த
இளங்கன்று அது
பச்சை பசேல் என்று
செழித்து நின்றது
அந்த பசுஞ்சோலை
திட்டமிட்டு வெட்டி சரித்தது
சிங்கள கொடும் சேனை
தன் தாய் வேரில் இருந்து
முளைத்தெழுந்த புது மலரை
அள்ளி அணைத்தெடுத்த
யாரும் இன்று அருகில் இல்லை
பல மரங்களில் நிழலில்
வெட்டி எறியும் மின்னலையும்
முட்டி மோதும் இடியையும்
விழி கூச, உடல் கருக்க
பாய்ந்து வரும்
சூரிய வெப்பக் கீற்றிக்களையும்
கடந்து வளர்ந்த
ஒற்றையிளம் கன்று அது
இன்று,
தட்டிக் கேக்க யாருமற்று
தாக்கும் அத்தனையையும்
தனித்து நிமிர்ந்து
எதிர்த்து நிற்கிறது
எங்கோ இருந்து
இடைக்கிடை வீசி
எறியப்படும் சில துளி
நீர் பருக்கையை உறிஞ்சி
வளர்ந்து நிற்கிறது அந்த
தனித்து விட்ட பூ மரம்…
இடைக்கிடை கிடைக்கும்
நீர்த்துளிக்களுக்காக
எத்தனை போராட்டங்கள்
காத்திருப்புக்கள்
அழுது அழுது விழி சிவந்த
கொடுமையான எத்தனை நாட்கள்
பிறந்து ஆண்டுகள் இப்போது
ஈரைந்து ஆன போதும்
தனித்து விட்ட
பூமரத்தின் ஆணி வேர்
ஓராண்டிலே வெட்டி எறியப்பட்ட
கொடுமை யார் அறிவர்?
ஏறி மிரித்தாடும் கொலை வெறி
சிங்கள வெறிக்கெதிராய்
தன் உயிர்ப்பை இழந்து
விதைகுழிக்குள் காய்ந்து
போனதை தாங்க முடியாத
சோகத்தோடு
பார்த்துக் கொண்டு நிற்கிறது
அந்த சின்னம் சிறு
பூங்கன்று
தாய் வேரும் இரும்புத் துண்டுகளால்
அறுத்தெறியப்பட்ட போது
தாங்க யாருமற்று
தனித்து கிடந்து
தவித்து விட்டது
குருத்து விட்டு நிமிர முடியாமல்
தவித்து தன் பெற்றவரை
விதைத்த விளை நிலத்தை
எட்டி எட்டிப் பார்க்கிறது
அதற்குத் தெரியும்
அந்த விளைநிலத்தில் தான்
தன் பாதுகாவலர்கள்
உறங்குகிறார்கள்
அதனாலோ என்னவோ
அந்த நிலத்தை
அடிக்கடி பார்ப்பதை மட்டுமே
சுகமாக கொண்டு நிற்கிறது
அன்று விளைநிலம் இன்று
பாலைவனம்
ஈரமற்ற நீண்ட இரவுகள்
பலவற்றை தாண்டி
நிமிர முடியாது நிற்கும்
சின்னஞ்சிறிய மரக்கன்றினை
யாரும் அறியப் போவது இல்லை
அதன் மனதில் கீறப்பட்ட
அழகிய வாழ்க்கையின்
வரைபடத்தை யாரும்
தெரியப் போவதில்லை
இப்போதெல்லாம் அந்த
பூங்கன்று வேண்டப்படாத
ஒன்றாகவே தனித்து விடப்பட்டது
எமக்காக பூத்து குலுங்கிய
அழகிய பூஞ்சோலையின்
மரங்கள் விதையாக வீழ்ந்ததை
இப்போதெல்லாம் யாரும்
நினைப்பதே இல்லை.
அவர்களுக்கெல்லாம் இப்போது
அந்த பூஞ்சோலையும்
வீழாது தப்பித்து நிமிர
முடியாது தவித்து நிற்கும்
மரங்களும் அதன்
இளைய மரக்கன்றுகளும்
வேடிக்கை மரங்களாகி விட்டன
அவை தனித்து ஒதுக்கப் பட்டு விட்டன
அங்கங்கே
காய்ந்து, வேர் சாய்ந்து
நிலத்தை முத்தமிட காத்திருக்கின்றன
பூஞ்சோலையின்
பல பூங்கன்றுகள்….
அவற்றுக்கெல்லாம்
விதையாகிய மரங்கள் ஒன்றே
இப்போது துணையாகி கிடக்கின்றன….
கவிமகன்.இ
18-11-2017