மாலை ஐந்து மணியானதும் வீட் டிற்கு கிளம்பிவிட வேண்டும் என்பது அவரது ஆசை மனைவியின் கட்டளை. அவரது மனைவியின் வார்த்தைக்கு எப்போதுமே மதிப்பு அளிப்பதில் பெரியதொரு உவகை தனக்குள் உருவாகுவதை கடந்த இருபத்து ஐந்து வருட தாம்பத்திய வாழ்வில் உணர்ந்திருந்தார் பரமசிவம்.
லட்சுமியும் பரமசிவமும் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான். அவர்களுடைய காதலுக்கு சாதி மதம் பணம் என்று எவையுமே குறுக்கே நிற்கவில்லை.காதலிக்கும்போது கூட சரியான இடத்தை தெரிவுசெய்துதான் நீ காதலிக்கவேண்டும் என்று பரமசிவத்தின் தந்தை எப்போதும் சொல்லிக்கொள்ளுவார். பரமசிவத்தின் தந்தையின் வாக்கு இளம்வயதில் இருந்து ஆழ பதிந்ததாலோ என்னவோ பரமசிவத்துக்கும் காதல் கூட அந்தஸ்து வசதி சாதி மதம் பார்த்தே உருவாகியது. அவர்களது திருமணமும் எந்தவிதமான சிக்கலும் இன்றி மிகவும் கோலாகலமாக நிறைவேறியது.
பரமசிவத்துக்கும் லக்சுமிக்கும் திருமணம் இப்போது தான் நடந்தது போல இருக்க இருபத்தைந்து வருடம் ஓடிவிட்டதா என்று அவருக்கு எப்போதும் பிரமையாக இருக்கும். வீட்டில் இருக்கும் ஓய்வு நேரத்தில் மனைவி சொல்லும் விடயங்களை அவதானமாக கேட்கவும் அவளின் விருப்புக்கு இணங்க சமையலறையில் ஒத்தாசையாக இருக்கவும் அவருக்கு எப்போதுமே பிடிக்கும்.
லக்சுமி அவரது ஆசை மனைவி அவளை எப்போது பார்த்தாலும் அவளே உலக தேவதை போல அவருக்கு தோன்றுவாள். பரமசிவத்தின் மகன் கார்த்திக்கூட பலதடவை பரமசிவத்தையும் லக்சுமியையும் கிண்டல் பண்ணினாலும் அவர் எப்போதும் அவனது கதையை காதில் போட்டுக்கொள்வதே இல்லை.என் மனைவியை நான் எதுவேண்டும் என்றாலும் செய்வேன் உனக்கு எதற்கு வலிக்கின்றது என்று கிண்டலாக கேட்டு அவனுடன் சண்டை பிடிப்பதில் எப்போதுமே பரமசிவத்துக்கு தனி சுகம் உண்டு.
மனைவியின் மீதுள்ள காதல் திருமணத்திற்கு பின்னரே மிகவும் அதிகரித்து இருக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொள்வார் பரமசிவம். முதல் முதலில் லக்சுமியை பார்க்கும்போது அவளது அழகு மட்டுமே அவரை கொள்ளை கொண்டாலும் அவளை திருமணம் செய்த பின்னர் அவரது முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்த அவளது தூய்மையான அன்பும் அர்பணிப்புமே அவளின் மீதான காதலை அவருக்கு அதிகரித்தது என்றால் தப்பில்லை.
மனைவியை பற்றி சிந்தித்தாலே நேரம் போவது கூட தெரியாமல் நினைவலையில் மூழ்கிவிடுவார் பரமசிவம். தனது தலையை உலுக்கி நினைவலைகளில் இருந்து மீண்டு அவசரமாக அவரது காரை நோக்கி நகர்ந்தார் பரமசிவம்.
மாடிப்படியில் இருந்து வேகமாக உருண்டுவந்த லக்சுமி சடாரென்று தலை தரையில் அடிபட மயக்கமடைந்தாள்.பலத்த சத்தம் ஒன்று ஹுலுக்குள் கேட்டதை உணர்ந்த மீனாச்சி வேகமாக சமையல் அறையில் இருந்து ஹாலை நோக்கி விரைந்தாள்.
ஹாலின் நடுப்பகுதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது எஜமானியை கண்ட மீனாட்சி
”அம்மா” என்று கத்தியபடி ஹாலுக்குள் நுழைந்தாள். சமையல்காரி மீனாச்சியின் சத்தம் கேட்ட சங்கரன் ”ஐயோ என்ன ஆச்சு மீனாட்சி?” என்று பதறியபடி வேகமாக ஹாலுக்குள் வந்தார்.
”எனக்கு தெரியாது சங்கரன் அண்ணா, அம்மாவின் சத்தம் கேட்டு நானும் இப்போது தான் ஓடி வருகின்றேன்” என்ற மீனாட்சியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
”மீனாட்சி துரிதமாக செயற்படவேண்டிய நேரத்தில் கண்ணீர் சிந்துவதில் பயனில்லை. முதலில் அம்மாவை ஆஸ்பத்திருக்கு கொண்டு போக வேண்டும்” என்று கூறியபடி உடனடியாக பரமசிவத்திற்கு தொலைபேசி எடுத்தார் சங்கரன்.
வீட்டில் இருந்து நேரம் வழமைக்கு மாறான நேரத்தில் தொலைபேசி வருகின்றது என்றவுடன் பரசிவத்துக்கு நெஞ்சம் பதறியது. வாகனம் ஓட்டும் போது தொலைபேசி வந்தாலும் எடுத்து பேசக்கூடாது என்ற மனைவின் அதட்டல் அவரது காதுக்குள் ஒலித்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு தொலைபேசி எடுத்து பேசினால் என்ன? என்ற எண்ணம் தோன்றியபோதும் ஒரு இடத்தில் 2 நிமிடம் காத்திருந்தாலும் தான் வீதியில் நிற்கும் நேரம் அதிகரிக்கும் என்பதனை நன்றாகவே அறிந்து வைத்து இருந்தார் பரமசிவம். மாலை நேரம் அலுவலகங்கள் முடிந்து முண்டியடித்தபடி மக்கள் கூட்டம் தத்தம் வீடு நோக்கி விரைந்து கொண்டு இருக்கும்போது மனித நேயமும் குறைந்து போயிருக்கும். ஒரு நிமிடம் கூட வீணாக கூடாது என்ற மனநிலையே அனைவரும் நிறைந்திருக்கும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீண்ட நேரம் வீதியில் நிற்கும் அளவை கூட்டிவிடும் என்பதால் தனது தொலைபேசி அழைப்பை கவனத்தில் எடுக்காமல் வீடு நோக்கி காரை செலுத்திக்கொண்டு இருந்தார் பரமசிவம்.
நிதானம் தவறிய கார்த்திக் வேகமாக தனது காரின் அருகில் வந்தான். அப்போது அவனது முதுகுப்புறம் கை ஒன்று
”ஹாய் கார்த்திக்” என்றது
திரும்பி பார்த்த கார்த்திக் தனது நண்பன் விமல் நிற்பதை கண்டான்.
”என்னடா விமல் இந்த பக்கம்” என்றான் கார்த்திக்.
”மச்சி என்ன? நீ உன் ஆளையே காரால் முட்டி விழுத்திவிட்டு கவனிக்காமல் போனாய் என்று ஆதவன் சொன்னானே” ஏன்டா அப்படி செய்தாய்? என்று கேட்டான்
”இல்லடா மச்சி” அவள் தான் என்று எனக்கே இப்போது தான் தெரியும்
அவளுக்கு ஏதும் ஆபத்து இல்லையா? என்று கேட்டான் கார்த்திக்
”இல்லடா லேசாக அடிதான் தலையில், பெரிதாக ஏதும் இல்லை” என்று அவளது அண்ணா சொன்னவன். என்ற அவன்
தெரியும் தானே உனக்கு? எங்கள் வகுப்பில் படித்த சரவணன் தங்கை தான் அவள்.
”அவர்கள் எங்கோ வேறு இடத்தில் இருந்து இப்போது தான் இவனுடன் வந்து இருக்கின்றார்கள், அவளுக்கு ஏதும் இல்லடா, எல்லாம் ஓகே டா நீ ஏதும் கவலைப்படாதே” என்றான் விமல்.
ஓ அவனின் தங்கையா அவள்.. ”ஆ ஆ சரிடா சரி” என்ற கார்த்திக்கின் மனம்
”ஐயோ அவளை நான் நேசிப்பது இவ்வளவு வெளிப்படையாக தெரியும்படி தான் நடந்திருக்கின்றேன் என்பதை நினைத்து ஒரு கணம் தலையை குனிந்தான் கார்த்திக்.
ஆண்கள் என்றாலே வீரம், கர்வம், கோபம் என்று மட்டும் தான் இந்த உலகம் நினைத்துக்கொண்டு இருக்கின்றது. அவர்களின் மனதுக்குள் ஒரு குழந்தை மனம் உண்டு என்றும் பெண்கள் என்ற ஒரு சின்ன வாசகத்தில் அவர்களின் மனது பஞ்சாக மாறி குழந்தையாக தவழ ஆசைப்படும் என்பதையும் இந்த சமுதாயம் ஏற்பதில்லை என்றும் எண்ணிக்கொண்டான் கார்த்திக்.
சரிடா கார்த்தி அம்மா எப்படிடா இருக்காங்க? கேட்டதாக சொல்லு என்று விமல் தனது மிதிவண்டியை செலுத்த தொடங்கினான்.
”அம்மா” என்ற சொல் காதில் விழுந்தபோதுதான்
அவனது அம்மா அவனை கூப்பிடுவது போல ஒரு பிரமை கார்த்திக்கு ஏற்பட்டது.
நிலைதடுமாறி தான் ஓடியபோது அம்மா தன்னை கூப்பிட்டது இப்போது அவனது மனக்கண்ணில் தெரிந்தது.
மாடியில் இருந்து அம்மா கூப்பிட கூப்பிட ஏதும் கேட்காதது போல ஓடிய தன்னில் ஏற்பட கோபத்தை அடக்க முடியாமல் வீட்டை நோக்கி விரைந்தான் கார்த்திக்.
அவனது வீட்டு தெருமுனையை அண்மித்த போது அவசர ஊர்தியின்
சத்தம் காதில் ஒலித்தது. அந்த சத்தத்தை கேட்டவுடன் ஏனோ கார்த்தியின் மனமும் வேகமாக துடிக்க தொடங்கியது. என்ன ஏதாவது ஆகி இருக்குமா என் அம்மாவுக்கு? என்று ஒரு நொடி எண்ணிக்கொண்டான் கார்த்திக்.
”மறுநொடி சீ சீ எதனால் நான் இப்படி பைத்தியம் போல சிந்திக்கின்றேன் ”என்று தன்னை தானே நொந்துகொண்டான் அவன்.
”குழப்பம் நிறைந்த மனம் குப்பைகளை மட்டுமே சேமித்துக்கொள்ளும் போலும்” என்று எண்ணிய அவனுக்கு தனது மனம் இவ்வாறு பித்துப்பிடிக்கும்படி எப்படி அவளால் முடிந்தது என்று எண்ணி ஆச்சரியப்பட்டான்.
”ஒரு பெண்ணால் ஒரு ஆணை எவ்வளவு தூரம் வசியம் செய்ய முடியும் இவளால் முடிந்திருக்கின்றது என்றால் இவளிடம் ஏதோ சக்தி இருக்கின்றது தான். அவளுடன் ஒரு நாள் கூட பேசியது கூட கிடையாது அவள் பெயர் கூட தெரியாது, ஆனாலும் என்னை இப்படி கூறு போட்டு சென்ற மாயக்காரி இவள் என் செல்ல தேவதை ”என்று ஆசையுடன் மனதுக்குள் அவளுடன் பேசிக்கொண்டான் கார்த்திக்.
”திருடி என்னை திருடிவிட்டு எதுவும் தெரியாத அப்பாவியாக எங்கே இப்போது இருக்கின்றாய்” என்று கேட்டுக்கொண்டான் அவன்.
அவளது அழகிய கண்ணும் சிரிப்பும் அவனின் நினைவுக்குள் வந்ததும் மனமும் கனிந்து கொண்டது.
”அவளை எப்போது பார்ப்பேன்” என்ற எண்ணம் மேலோங்க வீடு நோக்கி நடந்தான் கார்த்திக்.
அவன் வீட்டை அண்மிக்கும் போது அவசர ஊர்தி ஒன்று அவனது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்தததை கண்ட அவனுக்கு சொல்லிட முடியா உணர்வு மேலோங்க, பதைபதைத்த பாதங்களுடன் வீட்டை நோக்கி முன்னேறினான் கார்த்தி.
தொடரும்
காவியா