கொப்புளித்துப் பாயும்
செங்குருதிக்காட்டில்
வெஞ்சமராடிய வீரமா தேவியரை
இன்று விலைமாதர் என்று சொல்லும்
வீணர்களுக்கு
வெட்டி எறிந்துவிட வேண்டும்
சிலதை……………
தொடைவழி கசியும் குருதி
தீட்டால் வந்ததா..?
சன்னச் சூட்டால் வந்ததா..?
என்பதுகூட அறியாது
எல்லை காத்த
முல்லைக் கொடிகளே…!
எங்கள் தாய்களை விடவெல்லாம்
நீங்கள் தரமுயர்ந்த தேவியரே!!
இன்று சிகையலங்காரம்
செய்யும் சில பெண்களைப்பார்த்தால்
சிரிப்பு வருகிறது
நீங்கள் மட்டும்தான்
உலகில் நகை அணியாத நகைகள்
செந் நீர் காய்ந்தொட்டிய
தேகத்தோடு நீவீர்
களமுனை வென்று
வரும் அழகு
அழகோ அழகு அதுதான் அழகு
இங்கே நிறப்பூச்சுக்கு
அடிமையாகியிருக்கிறது நிகழ்காலம்
உங்களில் சிலர்
கால காலமாய் கட்டிக்காத்த
கற்பை கயவனிடம்
பறிகொடுத்துக் கண்மூடினீர்களே!!
ஐயோ!!
இந்த அநியாயம் எல்லாமே!!
நீங்கள் பட்ட அவலங்கள் எல்லாமே!!
எம் வாழ்வுக்கென்பதை
மறந்து வாழும் சிலரைப் பார்க்கச்
சகிக்குதில்லையே
தவப் புதல்விகளே!!
குடல் மலிந்து தொங்கும்
மேனியுள் சிவம் மலர்ந்த காலம்
நீங்கள் வாழ்ந்த காலம்
வரியுடை தரித்த புலிப்படை
உங்கள் வருகை கண்டபின்புதானே
உயிர் பெற்றது
புறநாநூறு கண்ட மங்கைகள்
மகன் புறமுதுகிட்டான் எனில்- தம்
முலையறுத்ததாய் வரலாறு!
எங்கள் பெண்புலி வேங்கைகள் – பகை
தலை அறுத்தார்கள்
இது சமகாலச் சரித்திரம்!
இன்று மண்மேடாய்க் கிடக்கும்
உங்கள் மாசற்ற கோவிலைக்கூட
காக்க மறந்த பாவியர் எம்மை
மன்னிக்க மாட்டீரா..!
காவியக் கண்மணிகளே!!
வேண்டாம்! வேண்டாம்!
எம்மை மறந்தும்கூட மன்னிக்கவேண்டாம்!!
நீங்கள் மகத்தான முத்துக்கள்!
நாங்கள் வந்த தடம் மறந்த வெற்றுக்கள்!
-அனாதியன்-