மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள்.
குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள்.
அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள்.
மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான்.
“ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள்.
அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது.
சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி.
அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.
சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது.
இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்…
கவிமகன்.இ
22.11.2017