என் அண்ணண்
தர்மேந்திராவின்
கல்லறை இருக்கும்
துயிலும் இல்லம்.
இந்த மரத்தடியில் இருந்து……
வீதியாேரம் இருந்து……..
பின் இறுதி வரிசையில் இருந்து…….
இரண்டாவது கல்லறை.
எதிரே
மன்னாரின் முதல் மாவீரன்
நிதி அவர்களின் கல்லறை.
அதற்கெதிரே
சிலவற்றின் முன்
விக்டரண்ணாவின் கல்லறை.
அதற்கருகாக
இடப்பக்க வரிசையிலே
என் பள்ளித்தாேழன்
ஜனகனின் கல்லறை.
கல்லறைகள்
எல்லாம்
எங்கள் நெஞ்சறைகளில்
கட்டப்பட்டு காலங்கள்
பலவாகி விட்டன.
மரணம் தாண்டியும்
வாழும் வீரர்களிற்கு
எங்கள் நெஞ்சறையில்
நீதியுண்டு
நிழல் உண்டு
மலர் உண்டு
பின் வரிசையில்
துயிலுமவர்களில் அநேகர்
வேவு வீரர்கள்…..
வீதி மதிலாேரம் துயில்பவர்களில்
பல வீரர்களும்
இஸ்லாம் சமயம் சார்ந்த
விடுதலை வீரர்கள்.
என் உறவினர்களும்
நண்பர்களும்
உறங்கும் இல்லம்
புனிதமாகும் வரலாறெங்கும்.
– வெற்றிச்செல்வி