கால் மிதிக்கும் தேசமெங்கும்
கார்த்திகைப் பூவாசம்
நான் வாழும் நாட்டினிலோ
கஞ்சாவே பாட்டிசைக்கும்..!
வாள் வெட்டே தினம் பேசும்
அநீதியே நிதம் வீசும்.
இதனால் இல்லை நேசம்
நிறைவாக உண்டு வேசம்..!
விழி மூடி துயில்
கொண்டால் மாவீரர் கனவு
விழி திறந்து வழி கண்டால்
வழிந்தோடும் குருதியே
நடைபாதை நினைவு..!
கார்த்திகைச் செடி
வீரத்தை விவரித்து ஒருபுறம்
கஞ்சாச் செடி
காலத்தைக் குலைத்து
மறுபுறம் மலருமா தேசம் ?
கார்த்திகை நாள் வந்தால்
கதறும் உதடுகள் இன்று
கறள் பிடித்து விட்டன
பீடிப் புகையிலும்
வெற்றிலைச் சாயத்திலும்..!
கண்களும் கலங்குவதில்லை
திரையரங்குகளில் அழுது
கண்ணீரும் வற்றிவிட்டது
காலத்தின் தேவைக்கே
சிலருக்கு கார்த்திகை மாதம்..!
புரிகிறதா பலருக்கு ?
நாங்கள் புலியாய் பாய்ந்தாலும்
பூனைக்கு ஒப்பிடும்
குள்ளநரிக் கூட்டங்களே..!
இது கார்த்திகை மாதம்
காவியர்களோடு கனவில்
பேசும் உன்னத நேரம்
ஊர்கூடி தேரிழுக்க வேண்டாம்..!
– வன்னியூர் கிறுக்கன்