வர்ணப் பூச்சுக்களிடையே
உள் நுழைந்த
அந்த கறுப்பு நிறமும்
அண்ணாந்து பார்த்து
பகட்டு சிரிப்பை
உதிர்ந்து கொண்டிருந்தது.
வானவில்லோ தன்னிடையே
புகுந்து கிடந்த கறுப்பை
அகற்ற முடியாத சினத்தில்
மழையற்ற முகில் கூட்டங்களிடையே
தன்னை மறைத்துக் கொள்ள
முயல்கிறது.
அந்த வானவில்லால் முடியவில்லை
சிறு புள்ளியாக குத்தப்பட்டிருந்த
அந்த கரும் நிறம்
கொஞ்சம் கொஞ்சமாய்
முழு வர்ணத்தையும் ஆக்கிரமிக்கத்
தொடங்கியது.
முன்பொரு காலமும்
கருமை படரத் தொடங்கிய
வானவில்லின் ஒவ்வொரு
அங்கங்களையும் தொட்டு
தம் பாதப் பதிவுகளினால்
விழி திறந்து ரசிக்க வைத்த
அந்த புனிதர்களை விழியழுது
தேடத் தொடங்கியது
வானவில்லின் வர்ணக்கலவை
நாங்களும் நாள் முழுக்க
வானவில்லை ரசிக்க முடியாது
மனக்கிடக்கைகளில் எழும்
வலிகளை சுமந்து யோசிக்க
தொடங்கினோம்.
வானவில் என்றாலே
கருமை இல்லா அழகு
எங்கள் வானம் மட்டும் ஏன்
கறுப்பை சுமந்து கிடக்கிறது என்று
எம் மனம் நித்திரையை தொலைத்து
வினாவுக்கான விடையைத்
தேடி ஓடுகிறது…
வீழ்ந்து விதையாகி
சூழ்ந்த கரும் படையை
பாய்ந்து சிதறடித்தவர்கள் எங்கே?
அவர்கள் உறங்கிய இடங்கள்
எங்கும் தேடி அலைந்து
மரணத்தின் விளிம்புக்கு வந்து
காத்திருக்கிறோம்
அவர்களின் உறங்குமிடங்களையும்
காணவில்லை
அவர்கள் வீடுகளையும் காணவில்லை
தேடித் தேடிக் களைத்துப் போன
விழிகளுக்கு
பச்சை நிறத்து அரக்கர்களின்
பாதச் செருப்புக்கள்
ஏறி மிதித்து சென்ற
தடங்கள் மட்டும் தெரிகிறது.
எங்கள் மனதின்
பக்கம் எல்லாம் சிதறிக் கிடக்கிறது
அந்த விழிகளின் காட்சி
அவர்கள் எங்கள் நெஞ்சங்களை
பிரித்து இரத்தம் குடித்த
கறுப்புக்கள்
இப்போதெல்லாம் வீழ்ந்தவர்
இடங்களில் வந்து ஏறி இருந்து
விதையாய் எழப் போகும்
குழிகளில் இருந்த விருட்சங்களை
முளையிலே கிள்ள முனைகிறார்…
கிள்ளி எறியட்டும்
என்றோ ஓர் நாள் விதைகளில் இருந்து
முளைவிடும் குருத்துக்கள்
இந்த வானவில்லின் வர்ணங்களிடையே
புகுந்து கிடக்கும் கருமையை
போக்க என்று விருட்சமாவர்
அழகிய சோலைகளிலே
வானவில்லின் வர்ணங்களை
புதுமையாக்கி மனம் மகிழ்வர்
அன்று வரை
வாழ வழி தந்து
வீழ்ந்து போன என்
வீர விதைகளோடு தினமும்
நான் பேசிக் கொண்டிருப்பேன்
அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு
பதிலிட்டு கொண்டே இருப்பேன்
ஏறி மிரித்தாளும் பச்சை நிறச்
செருப்புக்களை
குப்பையில் போடும் வரை
வித்தாகிய என் நேசத்துக்கானவரோடு
நான் பேசிக் கொண்டு தான் இருப்பேன்
அவர்கள்
மரணிக்காத மரணங்கள்
பள்ளியுடை துறந்த ஈழப்
பல்கலைக் கழகங்கள்
காலம் முழுவதும் பூத்துக் குலுங்க
காத்திருக்கும் காந்தள் மலர்கள்
விதைக்குள் விதையாகி
என் நெஞ்சக் குழிகளுக்குள் உறங்கும்
இரத்தப் பூக்கள்
எனக்குத் தெரியும்
அவர்களின் நினைவுகள் மட்டுமே
என்னை என் வாழ்வின் இலக்குக்கு
கூட்டிச் செல்லும் நீண்ட பயணச்சுட்டி
அவர்களின் மூடிய விழிகள் மட்டும்தான்
என்னை பேச வைக்கும் கருப்பைகள்
அதனால் எப்போதும்
அவர்களுடன் நான் பேசிக் கொண்டுதானிருப்பேன்
தடுப்பவன் தடுத்தாளு
முட்டித்தள்ளி முடிவு வரை
என் நாவு அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கும் ….
கவிமகன்.இ
23.11.2017