தாய் நிலத்தின்
மேன்மை விடிவிற்காய்
தம் உயிர்களை ஈகம் செய்து
விதைக்கப்பட்ட வீரமறவர்களை
வணங்கிப் போற்றும்
எம் தேசிய வீர நாள்.
மண்ணின் காதலர்களை
மனதில் ஏந்தி
மகத்துவம் பேசும்
மகிமையின் ரூபம்
மலரும் மாவீரர் நாள்.
காவியர்களின் கல்லறை
சென்று கனவுகள் கூறி
கண்ணீரில் நனைக்கும்
கார்தைகை மாத
கனதி நாள்
நெஞ்சில் குண்டு ஏந்தி
விண்ணில் படி ஏறி
வீரம் புரிந்த வீரர்களின்
வீரியம் கொண்டெழும்
வீரியப் போரின்
வித்து நாள்.
தேவைகளை புதைத்து
தேகத்தை எரித்து
தேசியம் காத்தவர்களின்
புனிதம் பூத்திடும்
புன்னகை புதல்வர்களின்
பூர்வீக புது நாள்.
தனித்துவத்தைப் பேணி
தாயகயச்சுடர் ஏந்தி
தாய் தந்தை ஆசியில்
அண்ணன் வழி நடந்த
அக்கினித் தீபங்களின்
அண்டம் காத்திட்ட
ஆளுமையின் அழியாநாள்.
உணவின்றி நீரின்றி
உணர்வுடன் உரிமைக்காய்
களம் கண்டு நிலம் மீட்டு
மண்ணில் உறைந்து
எம் நெஞ்சில் நிறைந்த
மறவீரர்கள் நினைவு நாள்.
புயலாக வந்த போரை
மலையாக நின்றெதிர்த்து
மகுடம் சூடியே தாகம் கொண்டு
வேகம் கண்ட விவேகிகள்
விழிமூடிதுயில்கொள்ளும்
விண்போற்றும் புகழ் நாள்.
தேசிய வாழ்வே
தேவையென்றெழுந்து
அநீதியை எதிர்த்து
அன்பில் அடியெடுத்துவைத்து.
மக்கள் நலன்கருதி
தங்கள் ஆசைகளை
அடியோடு அறுத்தெறிந்து
உறவுகள் ஊர் உரிமை மீட்க
தம் உயிர்களையே அர்ப்பணித்த
உன்னதர்களின் திருநாள்.
விண் மேகம் விழிதிறந்து
செம் மொழியோடிணைந்து
வழிமீது விழிநீர் சிந்தும்
தருணம் எரியும் கார்த்திகைச்
சுடர்களின் மாவீரர் நாள்.
தாயக விடுதலை வீரர்களே
சந்தனக் காவியப் பேழைகளே
மண் காத்த மாவீரச் செல்வங்களே
மலர் கொண்டு மனதுடைந்து
உறவுகள் கூடி
உணர்வுடன் நாடி
உங்களண்டை வந்துள்ளோம்
ஒருமுறை மீண்டும் விழிகளைத்
திறந்து செவிகளில்
எம் குரல்தனை ஏற்று
கைகளை அசைப்பீர்களா?
காவியத் தேசியத்தின் காதலர்களே
உணர்வை இழந்து உருக்குலைந்து
உருமாறி தவழ்கிறோம்
ஒருமுறையெனும் உங்கள்
முகம்கான வாடுகிறோம்.
எங்கள் அகத்தில்
அக்கினி வீச்சு
அனலாய் கொதிக்கிறது
உதட்டில் மாவீரர் பேச்சு
புயலாகி புத்துயிராய் எழுகிறது
எம்மவர் விழிகளை காணவில்லை
தோழர் தோழியரே
உங்கள் கல்லறைகள்
நனைந்து கொண்டே இருக்கிறது
எம்மவரின் வீழிநீர் சிந்தும்
வலிகளின் துளிகளில்
ஆறுமணியாகிறது
நெஞ்சம் படபடத்துத் துடிக்கிறது
தலைவனுரை மிளிர்கிறது
கார்த்திகைத் தீபம்
கரும்புலியாய் எரிகிறது
எங்கும் கதறும் ஓசைகள்
செவிகளில் அம்பாய் எய்கிறது
மாவீரா உணர்வாயா
ஒருமுறை எமக்காய் மீண்டும் எழுவாயா?
காலத்தால் அழியாத
மாவீரர்த் தெய்வங்களே
பாசரையில் வந்து பாடல் ஒலிக்கிறது
எங்கே எங்கே ஒருமுறை உங்களின்
விழிகளைத் திறவுங்கள்
ஒருமுறை உங்களின்
திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள் என
மாவீரா உணர்வாயா
மலர்ந்தபடி வருவாயா
மீண்டும் மலர்ந்திடுங்கள்
மாவீரர் செல்வங்களே
அந்நாளே எமக்குப் பொன்நாள்
அதுவரை எந்நாளும் தெருநாள்
இனியும் வேண்டாம் பெருநாள்
உணர்வாயா மாவீரா
வருவாயா இன்நாள்.
– வன்னியூர் கிறுக்கன்