நவம்பர் 27, ஈழத்தமிழ் மக்களின் வீரம்செறிந்த புதல்வர்களின் வியத்தகு சாதனைகளை நெஞ்சார நினைந்து உளமாற வேண்டி நாங்கள் தலைசாய்த்து வணங்கும் மாவீரர் நாள். உச்சம் தொட்ட வெற்றிகளை களங்களில் குவித்து ஈழத்தமிழரின் இருப்பை உலகறிய எடுத்தியம்பும் வரலாறு புனைந்த வலியோர்கள் புகழ் சொல்லும் உயர்வான நாள். ஈழதேசம் மட்டுமன்றி இப்புவி எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தங்கள் உரிமை தேடும் நாளாக கொண்டாடும் சிறப்புநாள். வாழ்க்கை என்பது பிறமக்களை காப்பதென்று உறுதிகொண்டு களம் புகுந்து போராடி உயிர்தந்து வெற்றிகொண்ட உயர்ந்தோரை நெஞ்சிருத்தும் புனிதநாள். கொடியதோர் அடக்குமுறையை நெடியதோர் வழி நின்று வெற்றியே எம் இலக்கு வேறெந்த நோக்குமில்லை, விடுதலையே உயிர்மூச்சு மற்றோர் பேச்சில்லை என்று போராடிய செல்வங்களை பெருமையுடன் நினைக்கின்ற சிறந்த நாள். தமிழ்மக்கள் உரிமைபெறல் தம் வாழ்வின் கடனென்று தங்களையே தானமாக தந்துவிட்ட பெரியோரை மனம் நிறைக்கும் உயர்ந்த நாள்.
பணம் தேடி, பொருள் சேர்த்து பாரினிலே வாழ்வதற்கு பாடுபடும் மக்கள் முன் நாம் வாழும் நாட்டின் நலம் ஒன்றே உண்மை என்று வாழ்ந்துகாட்டி உயர்ந்துவிட்ட வரலாற்று நாயகர்களை உலகறிய அறிவிக்கும் உயர்ந்த நாள். மனம்போன போக்கில் உலகினில் வாழ்ந்து, இன்பங்களை நுகர்தலே இனிமை என்றெண்ணி அல்லும் பகலும் அதற்கெனவே நாட்கழித்து வாழ்ந்துவிடும் எங்கள் முன்னே வழிகாட்டிகளாய் அமைந்து அடிமை நிலை வாழ்வல்ல உரிமையுடன் வாழவேண்டும் என்றுகூறி போர்முனைகள் எமக்கு பெரிதல்ல மக்கள் வாழ்வதுவே நோக்கு என உயிர் நீத்த நல்லோர்களை நாம் நினைக்கும் புதிய நாள். தாயக மண்காக்க எளிமை வாழ்வை கைக்கொண்டு களமுனையில் காத்திருந்து, இலக்கை சிரமேற்றி மற்றவற்றை புறந்தள்ளி தாயக விடுதலைக்கு தமை ஈந்த எங்கள் மண்ணின் மைந்தர்களை சிரம் தாழ்த்தி வணங்கும் பெருநாள். சொல்லும் செயலும் ஒன்றென்று கொண்டு, களமுனை வாழ்வை இன்பமாக ஏற்று, தாயக மீட்புக்காய் வீரமாய் உயிர் கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த போராளிகளின் கதைபேசும் பெருநாள். தமிழர்கள் வெற்றிப்படி ஏறி, தனியரசு நிறுவி, தரணியில் உயர்வு பெறும் நன்நாளுக்காக கல்லறைகளில் உறங்கி காத்திருப்பவர்களை நெய்விளக்கு ஏற்றி பூசித்து நெஞ்சார வேண்டி விடுதலைக்கு உரம் சேர்க்கும் புனிதநாள்.
ஈழத்தமிழினம் தமக்கென நிலம், மொழி, கலைகள், பண்பாட்டு தொடர்ச்சி, பல்வேறுபட்ட திறமைகள் கொண்டிருந்தும், தனக்கென ஒரு சிறப்பு நிலையை உருவாக்கி, சார்பு நிலை இன்றி உயர்நிலை அடைய எந்த வழியையும் உருவாக்கியிருக்கவில்லை. நாம் ஒரு தனித்த இனம். எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பெருமளவில் கொண்டிருக்கவில்லை. ஈழத்தமிழ் மக்களை வழிநடத்தியவர்களும் தனித்த வல்லமை உள்ளவர்கள் நாம் என்பதை எமக்கு இனம் காட்டவில்லை அல்லது இனம்காட்ட விரும்பவில்லை. இதேவேளை இருமொழிகள் மட்டுமே பேசப்படும் ஒருநாட்டில் தமிழர்கள் எம்மால் ஆளப்படவேண்டியவர்களே தவிர அவர்கள் தனித்த ஒரு இனம் என்று சிந்திக்கவிடாது ஆட்சியாளர்கள் பார்த்துகொண்டார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களின் ஆசீர்வதிப்புடன் தமிழர்கள் தாக்கப்படுவார்கள். இந்தவேளைகளில் பெரும்பான்மை இனத்தவர்களாலே நாம் காப்பாற்றப்படுவோம். மோசமானவர்கள் தாக்குகிறார்கள் நல்லவர்கள் எம்மை காப்பாற்றுகிறார்கள் என்று நாம் புளங்காகிதம் கொள்வோம்.
தமிழர்களை அடித்தாலும் நாங்கள்தான் அந்த வேளையில் உங்களை காப்பற்றுபவர்களும் நாங்கள்தான் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் என்ற செய்தியை ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. ஆட்சியாளர்களின் நகர்வுகள் யாவும் தமிழர்களுக்கு தனித்த பிரதேசம் என்ற ஒன்று இருக்க கூடாது, எங்கள் பேச்சிற்கு தலையாட்ட வேண்டும், தமிழர்கள் அடங்கிப் போகும் தன்மைக்கு பயிற்றப்படவேண்டும், அவர்கள் ஆட்சியதிகாரம் தொடர்பாக எதையும் கேட்கமுடியாது, நாங்கள் கொடுப்பதை வாங்கவேண்டும் என்பனவாக இருந்தது. எங்கள் கைகளால் எங்கள் கண்களை குற்றுவதுபோல எங்கள் தலைவர்களை பயன்படுத்தியே தங்கள் திட்டங்களை தமிழர்கள் மத்தியில் முன்னெடுத்தனர். குடியேற்றங்களை நடத்தினர். காவல் துறையைக்கொண்டு மக்களை அடக்கினர். எப்போதும் அடங்கிப்போகும் பயந்துவாழும் நிலைக்கு தமிழ்மக்களை உருவாக்கினர். உலகில் அடிமைநிலை இருக்க கூடாது என்று உருவாக்கப்பட்ட சனநாயகம் தமிழர்களை அடிமைகொள்ள இலங்கை ஆட்சியாளர்களுக்கு மிகவும் உதவியது. காரணம் எந்த ஒரு காலகட்டத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையான பிரதிநித்துவம் பாராளுமன்றில் பெறவாய்ப்பில்லை. ஆகவே தமிழர்கள் பாராளுமன்றில் எந்த ஒரு கோரிக்கையை முன்வைத்தும் வெல்லமுடியாது. எதிர்க்கட்சியாக வந்தாலும் அது நடக்காது. பெரும்பான்மை கொண்டோர் முடிவை ஏற்றே ஆகவேண்டும். இது ஆட்சியாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைய, பயம் ஒருபுறம், வாழவேண்டும் என்ற ஆசை மறுபுறம் தமிழர்களை உந்தித்தள்ள ஆட்சியாளர்கள் தருவதை மட்டுமே ஏற்றுவாழுதல் தமிழர்களின் நிலையாக மாறிவிட்டது.
இன்னொரு புறமாக தமிழர்கள் என்றால் இந்தியாவில் இருந்துதான் எமது வரலாற்றை ஆரம்பிப்பார்கள். தமிழ் என்றால் அதுவும் இந்தியாவில் இருந்துதான் ஆரம்பிக்கப்படும். இந்திய தமிழ் மன்னர்களைத்தான் பேசுவார்கள். இந்திய தமிழ் மன்னர்களால் இலங்கை ஆளப்பட்ட பெருமைகளை சொல்வார்கள். இந்திய மண்ணில் ஆக்கப்பட்ட காப்பியங்களைத்தான் சொல்லித்தருவார்கள். ஈழத்தமிழர்களின் தனித்துவம் ஆழமாக சொல்லப்படவில்லை. கற்றலுக்காக பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் கூட உரிமை என்றால் என்ன, கடமை என்றால் என்ன, என்று அறிந்து நடைமுறை வாழ்க்கைக்கு தம்மை தயார்படுத்தப்படவில்லை. ஒழுங்காக படித்து உயர் பதவி பெற்று ஒடுக்கமாக வாழ்ந்து நல்லவர் எனப்பெயர் கொள்ளலே வாழ்க்கை என பாடங்கள் புகட்டப்படும். நாங்கள் ஈழத்தவர்கள், எங்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு, யார் துணையும் இன்றி தனித்து வாழும் வல்லமை உள்ளவர்கள், எங்களுக்கும் தொடர்ச்சியான வரலாறுண்டு, நாம் அடங்கிப்போகவேண்டியதில்லை, எங்களுக்கும் இந்நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, நாங்கள் சார்புநிலையில் வாழவேண்டியவர்கள் அல்ல என்ற சிந்தனைகள் எம்மிடம் வேரூன்றச்செயப்படவில்லை. எங்கள் வரலாற்றுத்தொடர்ச்சி முன்னிலைப்படுத்தப்படவில்லை மாறாக வாழ்கையின் அவசியம் பிரதானமாக்கப்பட்டது. இந்தப்போக்கில் இருந்து மாறி இரு மொழிகள் கொண்ட நாட்டில் பெரும்பான்மையினர் பூரண உரிமைகளுடன் மகிழ்வுடன் வாழ நாம் ஏன் பயந்து, ஒதுங்கி, அடங்கி வாழவேண்டும் என சிந்திக்க தலைப்பட்டோரே போராட திடம்கொண்டனர். எப்படியாவது நாம் வாழ்ந்துவிடுவோம் என்று நினைத்து வாழமுடியாது. அடித்தால் அடி வாங்குவது அல்லது ஓடுவது என்று வாழ்கையை நகர்த்தமுடியாது.
எங்கள் மண்ணில் நாம் விடுதலை பெற்று வாழுதல் அவசியமானது என்பதே தமிழர் தாயகப்போரின் அடித்தளம். எந்த ஒரு இனமும் தமக்கென தனித்த உரிமைகள் இல்லாதவரை அவர்களது உயர்வுகள் சாத்தியமில்லை. இது ஈழத்தமிழனுக்கும் பொருந்தும். இந்த அடிப்படையே தமிழீழ போராட்டத்தை உந்தித் தள்ளியது. அதனை வெற்றி கொள்ளவே வீரர்கள் போராடினார்கள். மொழிப்பற்று, தேசப்பற்று, இனப்பற்று என்பவற்றை மக்களிடையே வளர்த்தனர். கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வலுவாக பற்றிவிட அறிவூட்டினார். பசுமையான நிலம் நிலைக்க தொழிற்பட்டனர். பயம்போக்கி நெஞ்சுயர்த்தி உரிமை வாழ்வு என்ன என்பதை நடைமுறையில் காட்டினர். அதன் மூலம் ஈழத்தமிழன் வாழ்வை உலகறியச் செய்தனர்.
இன்று நாங்கள் நொந்திருக்கலாம். ஈழத்தமிழனின் துயர்படுகிறான் என அறிந்தும் யாரும் உதவவில்லை. இனியும் உதவ முன்வருவார்களோ தெரியவில்லை. அமைதி, ஆயுதம் அற்ற உலகம் என்பவர்கள் அவற்றை உண்மையாக நேசிக்கிறார்களா என்பது சிந்திக்கப்பட வேண்டியது. உண்மையிலேயே அன்புடன் அமைதியாக பிறருடன் ஒத்துழைத்து வாழுகின்ற ஒரு சமூகமே ஈழத்தமிழ் சமூகம். ஆனால் அவர்கள் அவ்வாறு வாழ அனுமதிக்கப்படவில்லை. பெரும்பான்மை ஆட்சியாளர்கள் அடக்குமுறையினுள் வாழ தமிழர்களை நிர்ப்பந்தித்தனர்.
இதிலிருந்து விலகி எங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ விரும்பிய எங்களை உலகமே சேர்ந்து அடக்கிற்று. எங்களை நிலைப்படுத்தல் எங்கள் கடன், நாம் வாழ நாமே போராடவேண்டும் என்று உறுதியாக நம்பி தமிழ் ஈழமே முடிந்த முடிபு, அதை பெற்றுக்கொள்ள நாமே உழைக்க வேண்டும் என்று வழிகாட்டி, தன் வாழ்வை முற்றுமுழுதாக தமிழர்க்காய் உழைத்து நின்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் வழியில் தமிழ் ஈழ உதயம் நோக்கி முன்சென்று உயிர் கொடுத்த மாவீரர்களையும், ஈழவிடுதலைக்காக தலைவருடனேயே இணைந்து உழைத்த அவர் குடும்பத்தினரையும், தமிழர்களை நேசித்த ஏனைய மாவீரர்களையும், தமிழ் ஈழ மீட்புக்காக உயிர் ஈந்த மக்களையும் இந்நாளில் நினைவு கொள்வோம். ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடனான, விடுதலை பெற்ற, தனித்தாயக செய்தியை எதிர்பார்த்து இன்னும் மாவீரர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவிற்கொள்வோம்.
– பரமபுத்திரன்.