நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு. ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகள். பத்திரிகையாளர்களோடு சந்திப்பு என்று உறங்குகின்ற நேரத்தையும் ஓய்வெடுக்கின்ற நேரத்தையும் குறைத்து அதற்காக செலவிடுவதையே விரும்பி செய்தேன். அன்றும் அப்படித்தான். முதல் இரவு 11.00 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் அதன் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்), அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு என்னோடு நிகழ்த்திய உரையாடல் முடிவதற்கு நள்ளிரவைக் கடந்துவிட்டது. அதன் பிறகு புலிகளின் குரல் நண்பர்களுடன் கலந்துரையாடிவிட்டு தங்கும் விடுதிக்கு வந்து உறங்கச் செல்லும் போது அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது.
சில மணிநேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து, வழக்கமான நடைபயிற்சியை முடித்து, புதுக் குடியிருப்பிலும் முல்லைத் தீவிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கும், நிகழ்விற்கும் டான்க் வியு விடுதியை விட்டு எனக்கான பசுரோ வாகனத்தில் புறப்பட்டேன். வாகனத்தில் ஏறியதும் கவனித்தேன் என்றும் இல்லாத வாறு ஓட்டுனர் போராளியிடம் துப்பாக்கி இருந்தது. கூடுதலாக ஒரு போராளியும் துப்பாக்கியுடன் வந்தார். வாகனம் டான்க் வியுவிலிருந்து மாலதி சிலையைக் கடந்து ஏ9 சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போதே சாலைகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் இளைஞகர்களும் குழந்தைகளும் திரளாக நின்று சாலையில் செல்வோரை வழிமறித்து சர்க்கரை பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வாகனத்தையும் நிறுத்தக் கைக் காட்டினார்கள். ஆனால் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்த போராளி நிறுத்தவில்லை. நான் அந்தப் போராளியைத் பார்த்தேன், “தலைவருடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகின்றார்கள் மாஸ்டர்” என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கிளிநொச்சியைக் கடந்த போது அங்கிருக்கும் முருகன் கோயிலடியில் மக்கள் திரள் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கேயும் மக்கள் என் வாகனத்தை நிறுத்த முயற்சித்தார்கள் … வாகனம் நிற்கவில்லை. எனக்கு முன்னாள் சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்று மக்கள் தரும் சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதில் சில இயக்க வாகனங்களும் உண்டு.
பரந்தன் சந்தியை நெருங்கியபோது மக்கள் திரள் இன்னும் அதிகமாகவே இருந்தது. யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து வருகின்றவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வருகின்றவர்கள் அல்லது அந்த பகுதிகளுக்குச் செல்கின்றவர்கள் என்று அனைவருடைய வாகனங்களும் நின்று சென்றதால் என் வாகனம் யாரும் நிறுத்தாமலே நிற்கவேண்டிவந்தது. என் வாகனத்தை நோக்கி கையில் சர்க்கரைப் பொங்கலோடு ஓடி வந்தார்கள்….. அதற்குள் ஓட்டுனர் போராளி கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தினார், முன் நின்ற வாகனத்தைக் கடந்து வலது புறம் திரும்பி புதுக்குடியிருப்பு சாலையில் வேகமெடுத்தது வாகனம்.
எனக்கு வருத்தமாக இருந்தது….. மக்கள் எவ்வளவு அன்போடும் மகிழ்வோடும் ஓடிவருகிறார்கள்… அதை நாம் மதிக்க வேண்டாமா….. என்ற உணர்வோடு ஓட்டுனர் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன்…. என் உணர்வை புரிந்துகொண்டவராக “மாஸ்டர் இன்றும் நாளையும் நாம் உங்களை கவனமாக பாதுகாக்க வேண்டியிருக்கிறது மாஸ்டர்” என்றார். கூடுதலாக போராளி வந்தபோதே நான் புரிந்து கொண்டேன் என்றேன்.
வழிநெடுகிலும் இதுபோன்றக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டே சென்றேன். வழியில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்றேன். மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்டேன்.
விசுவமடுவைக் கடந்து புதுக்குடியிருப்பின் நுழைவு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மக்கள் நின்று வாகனங்களை நிறுத்தி பொங்கல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இயக்க வாகனங்களும் சில நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றிரண்டு முக்கியப் பொறுப்பாளர்கள் தளபதிகளுக்குரியது என்று புரிந்தது. தளபதிகள் பொறுப்பாளர்கள் கூட நிறுத்தியிருக்கிறார்களே… என்றேன். “ஆம் மாஸ்டர் அது அவர்கள் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது என்றால் நாங்கள் தான் பொறுப்பு” என்றார் கூடுதல் பாதுகாப்பிற்கு வந்த போராளி. உண்மைதான்.
வழியெங்கும், மக்கள் மிகவும் உணர்வோடும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் ஈடுபாட்டோடும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் அமைதியோடும் கட்டுப்பாட்டோடும் தாங்கள் மிகவும் நேசிக்கும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
மக்களின் விடுதலையை மட்டுமே நேசிகின்ற ஒரு தலைவனை மக்கள் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண்பதற்கும் உணர்வதற்கும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு அது. அவர் பிறந்த நாளை அவர் ஒருபோதும் கொண்டாடியதில்லை. தமிழீழ மண்ணில் அவர் பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்பட்டது.
இன்று…. உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. என்றும் கொண்டாடப்படும்.
ஓவியர் புகழேந்தி.