முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று சனிக்கிழமை காலை கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
முள்ளிக்குளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணியளவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்தில் நன்றி திருப்லியை ஒப்புக்கொடுத்தனர்.
முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தலைமையில் முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தை சுகீன் அடிகளார் (ஓ.எம்.ஐ) ஆகியோர் இணைந்து திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
பின்னர் திருப்பலி நிறைவடைந்த நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது நிலங்களை பார்வையிட்டனர்.
மேலும் முள்ளிக்குளம் மக்கள் அனைவரும் ஒன்றாக சமைத்து உணவு உண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கடற்படையினர் முதற்கட்டமாக 100 ஏக்கர் காணியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் சில தினங்களில் குழு ஒன்றை அமைத்து மக்கள் கடலுக்குச் சென்று வரும் பாதை உள்ளிட்ட பல்வேறு விடையங்களை கடற்படையூடாக நடை முறைப்படுத்தப்பட உள்ளதாகவும்,முள்ளிக்குளம் கிராமத்திற்கு வந்துள்ள மக்கள் ஆலயத்தில் தங்கியிருந்து கட்டம் கட்டமாக தற்காலிய வீடுகளை அமைத்த பின் தமது இடங்களுக்குச் செல்வார்கள் என முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.
முள்ளிக்குளம் மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 வருடங்களின் பின் மீண்டும் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் குறித்த மக்களை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் செயலாளர் கெனடி உற்பட பலர் சென்று குறித்த மக்களுடன் கலந்துரையாடி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.