2017 நவம்பர் 27, மாவீரர் தினம், தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் அமைதியாகவும் மௌனமாகவும் உணர்வோடும் எழுச்சியோடும் சொல்லியிருக்கிறது. எங்கள் உணர்வுகள் புதைந்த மாவீரர் துயிலும் இல்லம் என்பது எமக்கு வல்லமையும் நம்பிக்கையும் ஊட்டும் உறுதி நிலம் என்பதை தமிழ் மக்கள் மீண்டும் உணர்த்தியுள்ளனர். புதிய அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத தடையையும் அனுமதியையும் தாண்டி துயிலும் இல்லங்கள் தோறும் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஒன்றுதிரண்டு, வடக்கு கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அழுவதற்கும் உரிமை மறுக்கப்பட்ட கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இது வரவேற்கப்படவேண்டிய விடயம், எனினும் இதற்கு அவசியமான சட்ட ரீதியான பாதுகாப்பும் அனுமதியும் அரசில் உரிமை ரீதியாகவே உறுப்படுத்த இயலும்.
கடந்த ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை வடகிழக்கு தமிழர்கள் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறோம் என்று கிண்டலாக பதில் அளித்தார். இதற்குத்தான் கடந்த நவம்பர் 27 அன்று பதிலடி கொடுத்தனர் ஈழத் தமிழர்கள். இதற்கான எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம். பின்னர் ஒவ்வொரு துயிலும் இல்லங்களாக சென்று அடர்ந்த எருக்கலைக் காடுகளை அழித்து தம் பிள்ளைகளையும் உறவுகளையும் தேடிய காட்சி எவரையும் உருக்கும். இறந்தவர்களை வணக்கவும் உறவுகளை நினைவுகூர்வதும் அடிப்படையில் மனிதப் பண்பாட்டின் வெளிப்பாடு.
மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு. அத்துடன் துயிலும் இல்லங்களில் இராணுவமுகாங்களையும் தமக்கான விளையாட்டு மைதானங்களையும் அமைத்தது இலங்கை இராணுவம். தமிழ் தாயொருத்தி கண்ணீருடன் தன் பிள்ளையின் புதைகுழி தேடி அலைய இராணுவத்தினர் அந்த புதைகுழியின்மீது பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இலங்கை இராணுவத்தின் குரூரத்தையும் தமிழ் இன வெறுப்பையும் ஆதிக்கத்தையும் காட்டும் செயல் இது.
வென்றவர்களோ, தோற்றவர்களோ மாண்டுபோனவர்களை நினைவுகூரும் உரிமை எவருக்கும் உண்டு. இலங்கையில் மாண்டவர்களுக்காய் கண்ணீர் விடவும் அழவும் உரிமை மறுக்கப்பட்ட கொடிய யுகம் ஒன்று வந்தது. 2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். கடந்த காலத்தில் மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடக்கு கிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.
2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. கடந்த 2016ஆம் ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். இவையெல்லாம் தமிழ் மக்களின் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. கடந்த ஆண்டு கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. கடந்த வருடம் மாவீரர் தினத்தின்போது, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பத்துப்பேருடன் தொடங்கிய சிரமதானப்பணியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்ததுடன் மாவீரர் நாளில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
மாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. 2016ஆம் ஆண்டில் தீபம் ஏற்றப்படாத துயிலும் இல்லங்கள் அனைத்திற்கும் தீபம் ஏற்றப்பட்டது. வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து துயிலும் இல்லங்களிலும் வீரர்களுக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன. யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு போன்ற தமிழ் ஈழத்தின் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் சுடர்களால் ஒளிர்ந்தது.
துயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை அரசால் எப்படி தடை செய்ய முடியும்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா? அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.
தாயக நிலம் மீட்கச் சென்ற எங்கள் வீரர்களின் விதை நிலம் மீட்கச் செல்லும் ஒரு காலத்தை நாம் சந்திருக்கின்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.
இதேவேளை இன்னமும் விடுவிக்கப்படாத துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும். தேராவில் துயிலும் இல்லம், முள்ளியவளை துயிலும் இல்லம் போன்ற பல துயிலும் இல்லங்கள் இன்னமும் இலங்கை இராணுவ முகாங்களாக உள்ளன. யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலும் இல்லம் மாபெரும் இராணுவ தலைமை அலுவாகமாக உள்ளது. மாண்டவர்களின் புதைகுழிகளை விட்டு அதனையும் ஆக்கிரமிக்காமல் இலங்கை அரச படைகள் வெளியேற வேண்டும். தமிழ் மக்களுடன் இணக்கம் கொள்ளுவதாக இலங்சை அரசு கூகூகின்றது. முதலில் தமிழ் மக்களின் வணக்கிற்குரிய கல்லறைகளைகளுடன் பிணக்கம் செய்யாமல் அவற்றை விட்டு வெளியேற வேண்டும்.
கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்கான பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதற்காக பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் குடும்பத்தை சார்ந்தவன் என்ற அடிப்படையில் நானும் அக் குழுவில் உறுப்பினராக உள்ளேன். கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தை புனரமைக்கும் பணிகளை இலங்கை அரசு தடுத்து வைத்துள்ளது. அதற்கான நிதி விநியோகத்தை துண்டித்து வைத்துள்ளது. இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயத்தில் மௌனமாக இருந்து கொண்டு, இராணுவத்தை வைத்து கண்காணித்துக் கொண்டு, துயிலும் இல்லத்தை புனரமைக்கும் பணியை இலங்கை அரசு தடுப்பது இன்னமும் இனவெறுப்பையும் ஆதிக்கத்தையும் காடடும் செயல்.
மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த தாகத்துடன் மாண்டவர்களின் கல்லறைகளுக்கான இடத்தை விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கை அரசு துயிலும் இல்லங்களை அழிப்பதன் மூலம் தாம் நிகழ்த்திய மாபெரும் இன அழிப்புக்கு ஒப்பான இன நினைவழிப்பை மேற்கொள்ள முனைந்தது. அந்த நினைவழிப்பே வராற்றில் ஒருபோதும் அழிக்க முடியாத இன அழிப்பு வடுவாக நிலைத்துவிட்டது. இனியேனும் ஈழத் தமிழ் மக்களையும் அவர்களின் தாகத்தையும் இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும். எல்லா அழிப்புக்களும் மீண்டும் மீண்டும் இலங்கை அரசின் கொடூரத்தையும் வரலாற்றில் பதிவு செய்துள்ளது. தமிழ் மக்கள் தமது நிலத்தில் சுய மரியாதையோடும் சுய நிர்ணய உரிமையோடும் வாழ விடுதலையளிக்க வேண்டும். சிங்கள மக்களையும் சிங்கள அரசையும் உலகையும் நோக்கி துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்துரைத்துகின்றன. இந்தக் கல்லறைகளின் மொழியை செவி சாய்ப்பதே இந்த தீவில் இனியும் அழிப்பையும் இழப்பையும் முடிவுக்கு கொண்டுவரும் அர்த்தமுள்ள செயலாகும்.
தீபச்செல்வன்