உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தவிசாளர் பதவி பெறும் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சிக்கு அந்தச் சபையில் 60 வீதமான வேட்பாளர்களை நியமிப்பது என்றும் ஏனைய இரு கட்சிகளும் தலா 20 வீதம் என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தன.
அதில் 60:40 என்ற இணக்கபாடு எட்டப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தேர்தலில் வென்ற பின்னரே தவிசாளரைத் தீர்மானிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தவிசாளர் நிறுத்தப்படும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்களின் சதவீதம் 60 ஆகக் இல்லாவிட்டால் விகிதாசார அடிப்படையில் கிடைக்கும் நியமன ஆசனங்களைத் தவிசாளர் தெரிவாகும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
தவிசாளர் பதவி ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டால் மற்றைய கட்சிக்கு உப தவிசாளர் பதவி வழங்கப்படும். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றிக்கு மூன்று கட்சிகளுமே இணைந்து பாடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.