நாம் வாழும் உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரியும் தனக்கென தனித்த சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றது. புவியில் வாழும் உயிரிகளில் மனித இனம் என்பது விருத்தியடைந்த ஒரு விலங்கினம். இந்த மனித இனமானது தனெக்கென பல சிறப்பியல்புகளை கொண்டு வாழ்கிறது. அதில் முக்கியமானதும் முதன்மையானதும் என்று கூறக்கூடியது மனிதர்களால் பேசப்படும் மொழி என்றே சொல்லமுடியும். ஆனால் மொழி என்பது எல்லா மனிதர்களாலும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை புவியில் வாழும் சகல மனிதர்களும் ஒரே மொழியை பயன்படுத்தவில்லை. மனிதர்கள் வாழ்ந்த பிரதேசம் அவர்களின் தேவைகள் என்ற அடிப்படையில் மொழிகள் தோற்றம் பெற்றுள்ளன.
மொழியானது மக்கள் தங்களின் தொடர்பாடலுக்காக அல்லது தங்களது செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் பேசுவது மட்டுமன்றி, மொழியின் ஒலிக்கு ஏற்றவகையில் குறியீடுகளை கண்டறிந்து அதற்கு வரிவடிவம் கொடுத்து செய்திகளை எழுதிவைக்க ஆரம்பித்தனர். இவ்வாறு எழுதிய செய்திகளே பின்னாளில் வரலாறு எனப்பட்டது. இந்த வகையில் பேசும் மொழியின் அடிப்படையில் மனிதர்களிடையே இனங்கள் என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதுவரை மனிதர்கள் எனப்பட்டவர்கள் மொழிகள் தோற்றம் பெற்றதும் தங்களை பாகுபடுத்திகொண்டனர். அதனை பெருமை என்றும் கொண்டனர். அந்தவகையில் தமிழ்மொழி பேசும் மக்கள் தமிழர்கள் என்ற வகுதிக்குள் வந்தனர். தாங்கள் பேசும் மொழியும், தாம் வாழும் பிரதேசமும் தங்களுடையது என்ற எண்ண நிலைப்பாடு அவர்களிடம் தோற்றம் பெற்றது . இது தமிழர்கள் மட்டுமல்ல எல்லா இனங்களுக்கும் பொருந்தும். ஆனாலும் இந்த உலகில் உள்ள பிறந்த மனிதர்கள் எல்லோரும் ஒரே கொள்கை, நல்ல சிந்தனை, நல்ல நோக்கு என்பவற்றுடன் வாழவில்லை. ஆரம்பத்தில் காடுகளில் வாழ்ந்த மனித இனம் உணவு தேடி பகுத்துண்டு வாழ்ந்துள்ளது. எனினும் காலப்போக்கில் மனிதக் குழுக்களுக்கிடையே வாழும் இடம், உண்ணும் உணவு, பயன்படுத்தும் நிலம் என்பவற்றுக்கிடையே போட்டிகள் வரத்தொடங்கின. இதனால் சண்டைகள் மூண்டன. மனிதனுடன் மனிதன் மோத ஆரம்பித்தான், மனிதனை மனிதனே கொல்லத்துணிந்தான். சக மனிதன் செத்து வீழ்தல் கவலையை தரவில்லை. மாறாக வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்தது. கொண்டாடி மகிழ்ந்தான். மனிதர்களிடையே காணப்பட்ட இந்த இழிந்த இயல்பை பயன்படுத்தி புவிவாழ்க்கையை கட்டுப்படுத்த அல்லது வெற்றிகொள்ள ஒருசிலர் சிந்தித்தனர். சிந்தனையை நடைமுறைப்படுத்தினர். மனித குழுக்களிடையே ஆரம்பித்த இந்த சண்டைகளே பின்னர் யுத்தம், போர் என்பவற்றுக்கான அடிப்படையாக அமைந்தது. இவை பின்னர் மேலும் விரிவடைந்து நாடு, இனம், மதம் என்ற பேதங்கள் ஊட்டப்பட்டு, போராட்ட எண்ணம் முதன்மைப்படுத்தப்பட்டு, போருக்காக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதனை மனிதனே கொல்லும் புதிய நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, மனிதனை மனிதன் ஆக்கிரமித்தல் பெருமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் வளர்ச்சி தனிமனிதனைக் கூட அடிமைப்படுத்தல் உயர்வென்றும் , சித்திரவதைப்படுத்தல் சரியானது என்றும் கற்பிதம் செய்யப்பட்டது. மேற்சொன்ன செய்திகள் மனிதனின் அடக்குமுறை இயல்பு எவ்வாறு பரம்பலுற்றது என்பதற்கான சிறிய அறிமுகம் மட்டுமே. அது இன்னும் விரிவாக பேசப்படக்கூடியது. ஆனால் நாம் ஈழத்தமிழர்கள் தொடர்பாகவே சிந்திக்கப்போகிறோம். ஈழத்தமிழரான நாங்களும் எங்களை நிலைப்படுத்த போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைப்பாடு உண்மையானது என்பதற்கான ஆதாரமே மேற்காட்டப்பட்ட செய்திகள். ஈழம் தொடர்பாகச் சொல்லும் போது ஈழத்தில் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியான செய்தி. எனினும் ஈழத்தில் வாழ்ந்த தமிழினம் தாம் வாழ்ந்த நிலம், தங்கள் மொழி, தங்கள் பண்பாடு, கலாசாரம் என்பவற்றை வலுவாக நிறுவும் நோக்கில் குறிப்புகளை ஆக்கவில்லை அல்லது ஆக்கியது போதாது என்றே சொல்லமுடியும். இக்குறிப்பை சொல்லக்காரணம் காரணம் ஈழத்தமிழர்கள் தொடர்பான தனித்த ஆதாரங்கள் குறைவாகவே உள்ளது என்பதுதான். உடனே உனக்குத்தெரியாது, யாழ்ப்பான வைபவ மாலை உண்டு, அதில் செய்திகள் உண்டு, அறியாத மூடன் நீ என்று அவசரமாக சொல்லவேண்டாம் அல்லது தொடங்கவேண்டாம். அவ்வாறு யாராவது தொடங்கினாலும் நான் மகிழ்ச்சியுறுவேன் காரணம் ஈழத்தமிழர் தொடர்பான செய்திகள் பரம்பலடைய அதுவும் ஒருவழிதான். உண்மையில் ஈழத்தமிழரின் பின்னடைவுக்கான பிரதான காரணமாக அமைந்தது சார்புநிலையில் வாழ ஆரம்பித்தது அல்லது வாழுவது. இதை நான் கூறக்காரணம் எப்போ வந்தோம், எப்படி வந்தோம் ஈழத்துக்கு என்று யாருக்கும் சரியாகத்தெரியாது அல்லது எங்கள் மக்களின் நினைவுக்கு முந்திய காலம் அது. இன்னும் நாம் ஏன் அந்தக்காலத்தை ஞாபகப்படுத்தவேண்டும். மகாவம்சம் சிங்களர் வந்த கதையை சொல்கிறது. ஆனால் சிங்களர் சிறீலங்கா தங்கள் நாடு என்று முழு உறுதியுடன் சாதிக்கின்றனர். அந்நாடு தங்களுக்கே உரித்தானது என்கின்றனர். தமிழர்கள் வந்தேறிகள் என்கின்றனர். அவர்களிடம் தமிழன் தங்களால் ஆளப்படவேண்டியவன், சிங்களர்க்கு அடங்கிப்போகவேண்டியவன் என்ற எண்ணமே விதைக்கபட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு ஆளும் எண்ணத்திலும் அடிமை எண்ணம் மேலோங்கச் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிமை மனநிலை போராடும் வேட்கையை தடுத்து சுகமாக வாழும் தந்திரத்தை தேட வைக்கிறது. இந்த இயல்பின் அடிப்படையில் நாங்கள் வளர்ந்தமையால் தனித்த எனது வாழ்வு தான் முக்கியமானது என்று வாழவைக்கிறது. பிரித்தானிய அரசிற்கு உழைக்கும் நம்பிக்கைக்கு உரிய முறையில் புகுத்தப்பட்ட கல்விமுறையின் அடிப்படையில் எமது வளர்ச்சி அமைந்தமையால் இன்றும் கூட எங்கள் மக்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் வளரவில்லை. இது அனைவருக்குமானதல்ல ஆனால் பெரும்பாலானவர்க்கு பொருந்தும். இங்கு எழுதப்படும் செய்திகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவதை தவிர்த்து நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று சிந்தித்தலே சிறப்பு. எனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சொன்னார் சில பொதுப்போட்டிகளுக்கான கவிதைகள் கட்டுரைகள் திருத்தும் போது புரட்சிகரமான அல்லது ஈழத்து விடுதலை தொடர்பாக எழுதப்பட்ட ஆக்கங்களுக்கு எதிர்ப்பு காட்டி புள்ளியிட்டு அவர்களை தோல்வியடையச் செய்வர். இது தவறானது. விடுதலையில் எமக்கு விருப்பம் இல்லாது இருக்கலாம் ஆனால் எழுத்தின் சிறப்பை மதிக்கவேண்டும் என்றுசொல்வார். அதேவேளை அவ்வாறான எழுத்துக்கள் கொண்டிருக்கும் சிறப்பை மற்ற எழுத்துக்கள் கொண்டிருப்பதுமில்லை என்றும் சொல்வார். சிந்தித்துப் பார்த்தால் எம்மவர்களை நாமே நோகடித்த உண்மை விளங்கும். இனி முக்கிய செய்தியை அவதானிப்போம்
நாங்கள் சிங்களவரின் பின்பு வந்திருந்தால் அவர்கள் முதலில் போகட்டும் அதன்பின்பு நாங்கள் போகிறோம், இல்லை அவர்களின் முன்பு நாங்கள் வந்திருந்தால் வந்தோரை வாழவைத்தல் தமிழர் பண்பாடு வாழ்ந்துவிட்டு போங்கள் என்ற பலமான சிந்தனை எங்களுக்கு விளக்கப்படவில்லை. ஈழம் எங்கள் நாடு, அடிமையாக நாம் வாழத்தேவையில்லை, உரிமையுடன் வாழவேண்டும் என்ற நிலைப்பாடு முன்பே கருகொண்டாலும் விடுதலைப்புலிகளின் வருகையின் பின்பே வலுக்கொண்டது என்பது ஈழத்தமிழர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. அடிமை நிலையிலிருந்து மீளமுடியாதவர்களும், ஈழத்தமிழர்கள் எழுச்சியுற்றால் அது எங்கள் இருப்புக்கு ஆபத்தானது என நினைத்தோரும் அப்போராட்டத்திற்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தனர். விடுதலைப்புலிகள் தவிர வேறு பல அமைப்புகளும் போராடத் துணிந்தன எனினும் காலப்போக்கில் கொள்கைகளை மாற்றின. விடுதலைப்புலிகள் நோக்கும் இலக்கும் மட்டுமே முதன்மையாக கொண்டனர். விடுதலைக்கும், உரிமை பெறுதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். தனியரசு அமைந்தாலே இது சாத்தியம் என நம்பினர். நிலைமைக்கேற்ப நோக்கை மாற்றுவதை தலைமை விரும்பவில்லை. விடுதலைப்புலிகளின் போராட்டம் தொடர்பாக மாற்று எண்ணம் கொண்ட தமிழ்களும் வாழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கும் விடுதலை வேண்டியே புலிகள் போராடினர் என்பது மறுக்க முடியாதது. ஈழதமிழர்களை பொறுத்தவரை அவர்கள் கல்வியில் மேம்பட்ட காலம் என்பது வெள்ளையர் வரவின் பின் என்றே கூறமுடியும். ஆனால் சிங்களவரை பொறுத்தவரை அவர்களது பிரிவெனாக்கள், விகாரைகள் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளதாக இலங்கை கல்வியியல் வரலாறு காட்டுகிறது. சித்தாத்தரின் வருகையின் பின் பௌத்தம் தோன்றியதால் பௌத்தம் பரவிய இடங்களில் கல்விநிலை உயர்ந்துள்ளமை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஈழத்தில் அந்நியர்களைப் பொறுத்தவரை தமிழர்களை மேம்படுத்த கல்வி வழங்கவில்லை. தங்களை மேம்படுத்தும் கருவியாக தமிழரை பயன்படுத்த தமிழர்க்கு கல்வியை வழங்கினர் என்பதே உண்மை. அந்நியர்களின் கல்வி வடிவமைப்பானது தமிழர்களை கற்றவர்களாக உயர்த்தியதே தவிர, தமிழர்கள் தங்கள் சமூகத்தை உயர்த்தும் நோக்கில் அல்லது சமூகத்துக்கு உதவும் நோக்கில் செயற்பட கல்வி வழிகாட்டவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் பெருத்த ஒரு குறைபாடு உண்டு. அதாவது எதைச்சொன்னாலும் அதற்கு ஆதாரம் கேட்பது அல்லது எதிர்ப்பது இல்லையேல் விவாதிப்பது. உண்மையில் இது ஒரு ஏற்றுக்கொள்ளாமை அல்லது ஒவ்வாமை மனநிலை. அத்துடன் தாங்கள் திறமையானவர்கள் எனக்காட்டும் தன்முனைப்பு. இந்த ஏற்றுக்கொள்ளாமை அல்லது ஒவ்வாமை மனநிலைதான் ஈழத்தமிழனின் முற்றுமுழுதான வீழ்ச்சிக்கு முதன்மைக்காரணம் என்பது எங்களால் இன்னும் சரிவரப்புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது புரிந்தாலும் “எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும்” என்கின்ற எண்ண நிலைப்பாட்டில் வாழ்வதால் தோல்வியை விரும்புதல். இதற்கும் மேலாக எங்கள் முன்னவர்கள் சொல்லித்தந்த அதிகமான செய்திகளை நாங்கள் பயன்படுத்த விரும்புவதில்லை. அதாவது தமிழர்களிடையே காணப்படும் ஓர் சொற்தொடர் “ஆர் குற்றியும் அரிசியாகட்டும்” இதன் கருத்து யாரால் செய்யப்படுகின்றது என்பது முக்கியமல்ல செயல் செய்து முடிக்கப்படவேண்டும் என்பதே முக்கியம். ஆனால் எங்களிடம் மலர்ந்த கல்விவளர்ச்சி மாறான சிந்தனைகளை எம்மத்தியில் விதைத்துள்ளது, அதாவது எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கான எமது சிந்தனையையும் எங்களிடம் தவிர்த்துவிட்டது. இதனாலேயே நாம் தமிழர்கள் என்ற ஆழமான எண்ணமும் இன்றி, ஈழம் எங்கள் நாடு என்ற நாட்டுப்பற்றுமின்றி, தமிழ் மக்கள் எங்கள் மக்கள் என்ற நேசமும் இன்றி பணத்தையும், நான் பெரியவன் என்ற எண்ணத்தையும், தனித்த எனது உயர்வே உயர்வு என்ற கொள்கையையும் இறுக்கமாக பற்றி எங்கள் சமூகத்துக்கு உதவாமல் வாழத்தலைப்பட்டோம். இப்போது உங்கள் கேள்வி எனக்குப்புரிகிறது. நீ ஊரைவிட்டு போய் உல்லாசமாக வாழ்ந்துகொண்டு இப்போது எழுதுவாய் தானே என்பீர்கள். தாய்நிலம் விட்டு வந்து மேலைநாட்டில் பெருவாழ்வு வாழ்கின்றேன் என்று ஒருவன் சொன்னால் அது அவனின் அறியாமையே தவிர வேறொன்றுமில்லை. ஓய்வாக இருந்து நன்றாக யோசித்தால் எங்களின் அர்த்தமற்ற வாழ்வின் உண்மை புரிந்துவிடும். உண்மையில் உயிர் என்ற ஒன்றை தக்க வைக்க வெளிநாடுகள் எமக்கு உதவிற்று. எங்கள் நாடு உயிர்களை பறிக்கவே முன்னின்றது. இது தனித்து சிங்களத்தால் நிறைவேற்றப்படவில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எங்களது வெளிநாட்டுப் படையெடுப்பும் சிங்களத்தின் நோக்கிற்கு பேருதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.
தொடரும் ———-
பரமபுத்திரன்