விதையிட்டு விடைபெற்று
மறைந்தது யாரோ?
பெத்திட்டு தவிக்கவிட்டது
கடந்தது யாரோ?
கருவானது தாய் வயிற்றில்
உடல் மிதக்குது விதி பிடியில்
உயிர் வாழ்வது தெரு மடியில்.
பெற்றெடுத்த நீயே
பற்றைக்குள் வீசுகையில்
தத்தெடுத்த தெரு கூட
தவிக்க விட்டுப் பார்க்குதம்மா.
விதையிட்ட நீயே
வித்திட்டு சொல்லுகையில்
விதிகூட மதியிழந்த
என்னிடம் சதி தானே செய்யுதப்பா.
ஒருவேளை உணவில்லை
மறுவேளை இடமில்லை
உடுத்திட ஆடையில்லை
உறவென்று யாருமில்லை
உணர்வென்று எதுவுமில்லை
உடல் மெலிந்து போகுதம்மா.
கடையோர வாசலெல்லாம்
தட்டோடு தினம் நடந்து
கையேந்தி மன்றாடி
பசி தீர்க்க முடியாமல்
பட்டினியே பொழுதாகி
தினமிங்கு விடியுதப்பா.
இரவுகளில் தூக்கமில்லை
அழுக்கு உடை துவைக்கவில்லை
குப்பைத் தொட்டியில்
நானோ மூத்த பிள்ளை
பலர் துப்பி விட்ட கழிவுகளே
எனை உருவாக்கி விட்டதம்மா.
காலையில் எழுந்துவிட்டால்
கனவுகள் தொலைந்து விடும்
அண்ணன் தங்கை
தம்பி தமக்கையோடு
தாய் தந்தை தாலாட்டு
அன்பெனும் விளையாட்டு
இவையெல்லாம் எனக்கு
கானல் நீர் தானே.
இச்சைக்கு உறவாடிவிட்டு
ஏன் மிச்சம் வைத்தீர்கள்
பலர் கொச்சித்துப் பேசி
அநாதைப் பட்டம் தந்து
எமை வீதியில் விட்டு
வேடிக்கை பார்ப்பதற்கா?
இனியும் வேண்டாம்
என்னைப் போல் அநாதை
அதன் வலி காலம் முழுவதும்
விச முட்களாயிருக்கும்
புரிந்திடுங்கள் அம்மா
இதை அறிந்திடுங்கள் அப்பா
அநாதை என் வழியதை.
– வன்னியூர் கிறுக்கன்