நீ அமைதியாய்
உறங்கு செல்லம்
நீ ஓடித் திரிந்து விளையாடிய
கடற்கரை மணல்
தன்னை படுக்கையாக
தந்து அணைத்து கொள்கிறது
நின்மதியாக உறங்கு
என்று தாலாட்டு பாடுகிறது
பொங்கிடும் கடற்கரை
நுரைகளோடு நீ விளையாடிய
கணப் பொழுதுகளை
உண்டு ஏப்பம் விட்ட
காலத்தை என்னால்
கண்டிக்க முடியவில்லை
காலம் கூட உனக்கு காலனாகி
தூக்கம் தந்ததை ஏற்றுக்
கொள்ள முடியவில்லை
உயிரற்று கடல் மடியில்
தவழும் உன்னை கொஞ்சவே
என்னால் முடிகிறது
வானத்தில் வாழும்
வட்ட நிலா தன்னை
இருட்டுக்குள் மறைத்துக்
கொள்ள முனைகிறது
உன் வதனத்தில்
தான் அமர்ந்து இத்தனை
நாட்களாக தந்த வெள்ளொளி
இழந்து கிடப்பதை தாங்காது
தன் குளிர்மையை
தொலைத்து அழுகிறது
வாடிக்கரையோரம் பூத்திருக்கும்
ஒற்றைத் தென்னை மரத்தில்
ஆண்டாண்டு காலமாய்
வாழ்ந்த கூட்டை இழந்த
ஒற்றைக் கிளி விழி
சொரிந்தழுகிறது செல்லம்
நீ தேடித் தேடி ஓடிக்
களைத்த உன் கால்கள்
கலந்து முடித்த வண்ணக்
கலவைகள் நிறைந்த
நண்டுகளின் கோடுகள்
பூங்காற்றின் வேகத்தால்
அடிபட்டு காணாமல்
ஆக்கப்பட்டு விட்டது
உன் கைகள் கட்டிய
மணற் கோபுர வாசல்கள்
உன் உடல் வீழ்ந்து அழிந்து
அங்கங்கே மணல் மேடுகளாய்
கிடக்கின்றன
நீ ஓட்டிய டயர் வண்டில் கூட
செத்துப் போய் ஓரமாய்
தூக்கி எறியப்பட்டுக் கிடக்கிறது
எனக்கு எழும்
கோவத் தணல்களால்
கிழக்கில் எழும் சூரியனை
அப்பிடியே சாவுக்கிடங்கில்
தள்ள வேண்டும் போலிருக்கிறது
காற்றாக எழுந்து வந்த
காலனை கட்டிப் போட்டு
சிறையில் தள்ள மனம் எழுகிறது
எதையும் செய்ய
முடியாத நாங்கள்
மகிழ்ந்திருந்த
காலங்களை எல்லாம்
கணக்கற்றதாக்கிவிட்டு
சிரிக்கிறது எங்கள் நிலத்தில்
கறுப்பு மேகம்.
உனக்காக ஒரு தாலாட்டு
பாடுவதை தவிர வேறெதுவும்
செய்ய முடியவில்லை
உறங்கடா கண்மணியே
விழி மூடி நின்மதியாய் உறங்கடா
உன் உயிர்ப்பற்ற
உயிரிணையை என் மடி தாங்கி
தாலாட்டு பாடுகிறேன் மகனே
விழி மூடி தூங்கு செல்லம்
அமைதியற்ற புயலுக்குள் நீ
அமைதியாய் தூங்குடா….
கவிமகன்
08.12.2017
குமரிக்கடலில் வீழ்ந்து கிடக்கும் ஒரு செல்லக் குழந்தைக்காக