உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்ளூராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஒரு பொதுக் கொள்கையின் கீழ் அவற்றை ஒன்று திரட்டுவதற்குத் தேவையான பலம் மேற்படி பொது அமைப்புக்களிடம் உண்டா? என்றும் அச் சந்திப்புக்களின் போது கேட்கப்பட்டது. அவ் அமைப்புக்களிடம் மட்டுமல்ல தமிழ் மக்கள் பேரவையிடமும் அப்படிப்பட்ட பலம் இல்லை என்பதைத்தான் அண்மை வாரங்களாக நடப்பவை நிரூபித்திருக்கின்றன.
மேற்படி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஓரணியாகத் திரண்டு சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சந்திப்பதற்கு முன்னரேயே புதிய அணித்திரட்சிகளுக்கான பேச்சு வார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் பேரவையும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்தது. பேரவை ஒரு கட்சியாகச் செயற்படாது என்று தனக்குத் தரப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் அது தொடர்ந்தும் ஒரு மக்கள் இயக்கமாகவே செயற்படும் என்று விக்னேஸ்வரன் உறுதியாகக் கூறிவிட்டார். எனினும் பேரவையின் ஒரு பகுதியினர் தமது மறைமுக அனுசரணையோடு ஒரு பொது எதிரணி களமிறக்கப்படுவதை ஆதரித்தார்கள். இந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும், ஈபிஆர்எல்எவ்வையும் ஒரு பொது எதிரணிக்குள் இணைப்பது என்று பேரவையில் ஒரு பகுதியினர் யோசித்திருந்தார்கள். ஆனால் விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டால் பேரவையானது ஒரு கட்டத்திற்கு மேல் வெளிப்படையாகவும், அரசியல் திடசித்தத்தோடும் செயற்பட முடியவில்லை. பட்டும் படாமலும் ஓடும் புளியம்பழமும் போல பின்னணியில் இருந்து ஒரு மாற்று அணியை ஆதரிப்பது. என்று சிந்திக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் கட்சிகளை ஒருங்கிணைத்து அவற்றிற்கிடையே எழுத்து வடிவிலான உடன்படிக்கை எதையும் உருவாக்க அவர்களால் முடியவில்லை. இதை இன்னமும் செறிவான வார்த்தைகளில் பின்வருமாறு சொல்லாம். பேரவையின் பங்காளிகளாகவுள்ள இரண்டு பிரதான கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாற்று அணியாக களத்தில் இறக்கத் தேவையான அரசியல் திடசித்தமோ வெளிப்படைத் தன்மையோ அதற்கு வேண்டிய ஒரு செயற்திட்டமோ பேரவையிடம் இருக்கவில்லை.
பேரவை ஒரு நூதனமான கலவை. தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாத பிரபலஸ்தர்களையும், வெகுசன அமைப்புக்களையும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே பேரவையாகும். அது உருவாக்கப்பட்ட காலகட்டத்திலேயே ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது. பேரவைக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் வௌ;வேறு அணிகளில் நின்று தேர்தலில் இறங்கும் பொழுது பேரவை எத்தகைய ஓர் முடிவை எடுக்கும்? என்பதே அக் கேள்வியாகும். இரண்டு எழுக தமிழ்களின் போதும் ஒரு புதிய யாப்பிற்கான முன்மொழிவை ஓரணியில் நின்று வழங்கிய பொழுதும் மேற்படி கேள்வி பின்தள்ளப்பட்டு விட்டது. ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அக்கேள்வியை குரூரமான விதத்தில் மேற்கிளப்பியுள்ளது. இக்கேள்விக்கு பொருத்தமான விடை பேரவையிடம் இல்லை என்பதைத்தான் அண்மை வார நிகழ்வுகள் காட்டுகின்றன.
பேரவையின் பங்காளிகளாக ஓரணியில் நின்ற கட்சிகள் தேர்தலில் மூன்று திக்குகளில் நிற்கப் போகின்றன. இப்படிப் பார்த்தால் பேரவையின் அரசியற்கட்சித் தளம் எனப்படுவது சிதறப்போகிறது. வெகுசன அமைப்புக்களின் தளமும் சில சமயம் கட்சிகளைச் சார்ந்து உடையுமோ தெரியவில்லை. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது பேரவைக்கும் சோதனைதான். மாற்று அணிக்கும் சோதனைதான். தமிழரசுக்கட்சிக்கும் சோதனை தான். அதன் பங்காளிகளுக்கும் சோதனைதான். மகிந்தவுக்கும் சோதனைதான். மைத்திரிக்கும் சோதனைதான். ஒரு கிராமமட்டத் தேர்தல் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு சோதனையாக வந்திருக்கிறது.
பேரவையின் அனுசரணையின் கீழ் ஈபிஆர்எல்வுடன் இணைவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தயாராகக் காணப்பட்டது. ஆனால் ஆனந்தசங்கரியுடன் இணைவதற்கு அவர்கள் தொடக்கத்திலிருந்தே தயாராக இல்லை. இந்த சர்ச்சைகளுக்குள் ஆனந்தசங்கரி நுழைந்தமை ஒரு சடுதியான தோற்றப்பாடு அல்ல. ஒரு மாற்று அணியைக் கட்டியெழுப்பும் பொழுது குறிப்பாக அதன் தேர்தல் உத்தியாக ஒரு பலமான அணியைக் கட்டியெழுப்புவதென்றால் ஏற்கெனவே பிரசித்தமான ஒரு சின்னத்தை முன்னிறுத்தினால் என்ன? என்று பல மாதங்களுக்கு முன்னரே சிந்திக்கப்பட்டது. ஆனந்த சங்கரியும் அநேகமாக எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பை விடுத்து உரையாடியிருக்கிறார். ஆனால் இவ்வுரையாடல்களில் பெரும்பாலானவை திருப்பகரமான தீர்மானங்களின்றி முடிவடைந்தன. தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து சில அடிப்படையான விவகாரங்களில் சங்கரியார் விட்டுக்கொடுப்பின்றிக் காணப்பட்டார். வடக்கு – கிழக்கை இணைப்பது இப்போதைக்கு யதார்த்தமற்றது என்றும் இந்தியாவின் பாணியிலான ஒரு தீர்வையே இப்போதைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தொடர்ச்சியாக கூறி வந்தார். ஏனைய கட்சிகளை தன்னோடு வந்து இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்;. ஆனால் தனது சின்னத்தை விட்டுக்கொடுக்க அவர் தொடக்கத்தில் தயாராக இருக்கவில்லை.
ஆனால் அண்மை வாரங்களாக இடம்பெற்ற சந்திப்புக்களின் போது அவருடைய நிலைப்பாடுகளில் தளர்வு தெரிந்தது. ஒரு கட்டத்தில் கட்சியின் பொலிற்பீரோவொன்றை உருவாக்கி எல்லாக் கட்சிகளின் இவ்விரண்டு பிரதிநிதிகளை அதில் இணைப்பதன் மூலம் பொலிற்பீரோவின் அதிகாரத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்க அவர் ஒப்புக்கொண்டார். குறிப்பாக கஜேந்திரகுமார் அவரோடு சேரமாட்டார் என்பது துலக்கமாகத் தெரியத் தொடங்க சங்கரியார் மேலும் நெகிழத் தொடங்கினார். கஜேந்திரகுமாரின் எதிர்ப்பு ஒரு விதத்தில் சங்கரியாருடனான சுரேஸ் பிரேமச்சந்திரனின் பேரத்தை அதிகப்படுத்த உதவியிருக்கிறது.
இக் கூட்டை ஆதரிப்போர் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்கள். காகத்தின் கூட்டில் தான் குயில்கள் முட்டையிடுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இப்போதைய உடனடித் தேவை தமிழரசுக் கட்சியையும், அதன் பங்களிப்போடு முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையையும் ஒரு சேர எதிர்ப்பதுதான். இப் பொது இலக்கை முன் வைத்து தற்காலிக அல்லது தந்திரோபாயக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கூட்டமைப்பு என்ற ஒரு மாயையான ஐக்கியத்திற்கு எதிராக உதயசூரியனின் கீழான ஒரு பலமான கூட்டை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
சுரேஸ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரை கடந்த எட்டு ஆண்டுகளில் அவருடைய கட்சி தேய்ந்து கொண்டே போகிறது. அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட பலரையும் தமிழரசுக்கட்சி அபகரித்து விட்டது. தமிழரசுக் கட்சியின் ஏகபோகத்திற்கு கீழ் அதிகம் அவமானப்பட்டவர் அவர். கஜேந்திரகுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்து விட்டார். ஆனால் அதற்குப் பின்னரும் அவமதிப்புக்கள், புறக்கணிப்புக்களோடு கூட்டமைப்பிற்குள் சுரேஸ் நின்றுபிடித்தார். இப்பொழுது அவர் வெளியேறி விட்டார். வெளியேறிய பின் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை அவருக்குண்டு. இது காரணமாக வெல்லக்கூடிய ஒரு கூட்டு என்று அவர் கருதும் ஒரு கூட்டிற்குள் அவர் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கஜேந்திரகுமார் ஆனந்த சங்கரியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழரசுக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இன்னுமொரு பிழையான கூட்டை உருவாக்க முடியாது என்று அவர் நம்புகிறார். சங்கரியாரின் விடயத்தில் சுரேஸ் எடுக்கும் ரிஸ்க்கை தான் எடுக்கப் போவதில்லை என்று அவர் கூறுகிறார். தந்திரோபாயக் கூட்டுக்களில் அவர் நாட்டமின்றிக் காணப்படுகிறார். பேரவை முன்பு யோசித்த ஒரு கூட்டிற்குள் சுரேசுடன் இணைந்து செயற்பட அவர் தயாராகக் காணப்பட்டார். பேரவையின் பங்காளிகள் பகை நிலைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக்களைத் தவிர்ப்பதற்காக சில நலன்விரும்பிகளும் பேரவை உறுப்பினர்களும் இவ்விரு கட்சித் தலைவர்களை ஒரு சந்திப்பிற்குள் கொண்டு வந்தார்கள். பேரவையின் அனுசரணையுடன் சுரேஸோடு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வர கஜன் தயாராகக் காணப்பட்டார். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருந்த ஒரு பின்னணிக்குள் புதிய கூட்டிற்கு புதிய சின்னத்தைப் பெறுவதில் சட்டத் தடைகள் ஏற்பட்டன. அப்பொழுது ஒன்றில் தனது கட்சிச் சின்னத்தின் கீழ் அல்லது ஈபிஆர்எல்எவ் இன் கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு மக்கள் முன்னணி தயாராகக் காணப்பட்டது.ஓர் ஜக்கிய முன்னணிக்காக ஈபிஆர்எல்எவ் இன் கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு மக்கள் முன்னணி தயாராகக் காணப்பட்டது. ஆனால் தனது சொந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஈபிஆர்எல்எவ் தயாராக இருக்கவில்லை.சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிடவும் அவர்கள் தாயரில்லை. வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு பிரசித்தமான சின்னத்தையே அக்கட்சி நாடியது.
குறிப்பாக அக்கட்சியின் வவுனியா வட்டாரங்கள் உதயசூரியனின் கீழ் ஒரு பலமாக எதிர்ப்பைக் காட்டலாம் என்று நம்பிக்கையோடு காணப்படுகின்றன. ஆனந்தசங்கரியை தொடர்ச்சியாகச் சந்தித்து அவருடைய நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தியதும் மேற்படி வவுனியா வட்டாரங்கள்தான். அத்துடன் கிழக்கு வட்டாரங்களிலும் உதயசூரியனின் கீழ் போட்டியிடுவதற்கே வரவேற்பு அதிகமிருக்கிறது. கூட்டமைப்பிலிருந்து அவமதிப்புக்களோடு வெளியேறிய சுரேஸ் வெற்றியை ஆகக் கூடியபட்சம் உறுதிப்படுத்த விளைகிறார். ஒரு பொதுச் சின்னத்தின் விடயத்தில் அவரது கட்சியின் கிழக்கு வட்டாரங்களும், வவுனியா வட்டாரங்களும் உதயசூரியனை நோக்கியே அவரைத் தள்ளுகின்றன. எனவே அவர் அச்சின்னத்தின் கீழ் ஒரு கூட்டிற்குள் போயிருக்கிறார்.
பேரவைக்குள் ஓரணியில் நின்ற பங்காளிக் கட்சிகள் இரு வேறு கூட்டிற்குள் சென்று விட்டன. தொடக்ககாலப் பேச்சுவார்த்தைகளில் போட்டித்தவிப்பு, தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சிந்திக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது முன்னாள் நண்பர்களுக்கிடையே பகைதவிர்ப்பு ஒன்று தேவையா? என்ற கேள்வி மேலெழந்து வருகிறது. ஏனெனில் இரு தரப்பினராலும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் பரஸ்பரம் ஆளையாள் தாக்கும் ஒரு நிலமையை நோக்கியே செல்கின்றன. இது விடயத்தில் தனது முன்னாள் பங்காளிகளை பகை தவிர்ப்பிற்குப் போகுமாறு கேட்க பேரவையால் முடியுமா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது. இக் கேள்வியை மேலும் ஆழமாகப் பின்வருமாறு கேட்கலாம். தனது முன்னாள் பங்காளிகளை ஒரு மாற்று அணியின் நன்மை கருதி குறைந்தபட்சம் பகை தவிர்ப்பிற்குப் போகுமாறு வற்புறுத்தும் பலம் பேரவைக்கு உண்டா? என்பதுதான்.
பேரவை உருவாக்கப்பட்ட பொழுது பெரிய எதிர்பார்ப்புக்கள் தோன்றின. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் அரங்கச் செயற்பாட்டாளர் என்னிடம் பின்வருமாறு கூறினார். ‘இது ஓர் உயர்குழாத்து அரசியல். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது அடிமட்ட வெகுசன இயக்கம் ஒன்றுதான். ஆட்சி மாற்றத்தின் பின் அப்படியொரு வெகுசன இயக்கத்தை உருவாக்கக் கிடைத்த வெளியை பேரவை ‘ஹை ஜாக்ஷ பண்ணிவிட்டது. இது உண்மையான ஒரு மக்கள் இயக்கம் உருவாகுவதை ஒத்தி வைத்திருக்கிறது என்று’. பேரவை அதிகபட்சம் ஒரு பிரமுகர் இயக்கம்தான். அதில் வெகுசன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உண்டு என்ற போதிலும் அதன் முடிவெடுக்கும் உயர்பீடமானது கூடுதலான பட்சம் பிரமுகர்களையே கொண்டது. குறிப்பாக அது விக்னேஸ்வரனைச் சுற்றிக் கட்டப்பட்ட ஓர் அமைப்பு. மாகாண சபையின் பதவிக்காலம் முடியும் வரையிலும் விக்னேஸ்வரன் வெளிப்படையான கிளர்ச்சிகள் எதிலும் ஈடுபட மாட்டார். அதற்குப் பின்னரும் அவர் ஈடுபடுவாரா? என்று எதிர்வு கூறுவது கடினம். எனவே மாகாணசபையின் ஆயுட்காலம் முடியும் வரையிலும் மாற்று அணிக்குரிய ஒரு கோட்பாட்டுத் தளத்தை அவர் பகிரங்கமாக ஆதரிப்பார். ஆனால் செயற்தளத்திற்குப் போக மாட்டார். அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் பேரவையும் அப்படி ஒரு செயற்தளத்திற்குப் போவதென்றால் விக்னேஸ்வரனை உதறவேண்டியிருக்கும். அது அவர்களால் முடியுமா?
ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் தமிழ்;ப் பகுதிகளில் குரலற்ற மக்களின் குரலைவ ஒலிப்பதற்கு பெரும்பாலானவர்கள் அஞ்சினார்கள். அந்நாட்களில் மிகச்சிலரே துணிந்து குரல் கொடுத்தார்கள். பிரமுகர்களாக இருப்பவர்கள் அவ்வாறு குரல் கொடுப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக காணப்பட்டது. அவர்களுடைய பிரபல்யமும் பதவி நிலையும் சமூக அந்தஸ்தும் அவர்களைப் பாதுகாத்தன. இ;வ்வாறு ஒரு பிரமுக அமைப்பாக உருவாக்கப்பட்டதே தமிழ் சிவில் சமூக அமையமாகும். ஆனால் அக்காலகட்டத்தில் அதற்கு ஒரு தேவையிருந்தது. அதற்கொரு மகத்துவம் இருந்தது. அதன் பின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபொழுது அந்த அமைப்பு தன்னை அடுத்த கட்டத்திற்குப் உருமாற்ற வேண்டியிருந்தது. அப்படியொரு வேளையில்தான் தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது. அதுவும் ஒரு காலகட்டத்தின் தேவைதான். அதற்கும் ஓர் உன்னதமான பங்களிப்பு உண்டு. 2009 மேக்குப் பின் தமிழ்த்தேசிய நெருப்பை அணைய விடாது பாதுகாப்பதில் மேற்படி இரு அமைப்புக்களும் அதிகபட்ச பங்களிப்பை நல்கின.
ஆனால் இப்பொழுது உள்ளூராட்சி சபைத் தேர்தலானது பேரவையின் வரையறைகளை உணர்த்தியிருக்கிறது. கட்சிகளின் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய ஓர் அமைப்பாக அது இல்லை. அது அதிக பட்சம் அபிப்பிராயங்களைக் கூறும் ஓர் அமைப்புத்தான். அபிப்பிராயங்களை உருவாக்கும் ஓர் அமைப்பு அல்ல. பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதென்றால் தனது அரசியல் இலக்குகளை முன்வைத்து செயற்படத் தயாராக இருக்க வேண்டும். அந்த வழியில் அர்ப்பணிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதிகபட்சம் அரச ஊழியர்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரமுகர் மைய அமைப்பினால் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது. அடிமட்ட மக்களை ஒன்று திரட்டி கீழிருந்து மேல்நோக்கி மக்கள் அதிகாரத்தை ஸ்தாபிக்கவல்ல ஒரு வெகுசன இயக்கம்தான் கட்சிகளின் மீதும், கட்சித் தலைவர்களின் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பானது தமிழ் மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. பிரமுகர் மைய அமைப்புக்களைக் கடந்து சென்று மக்கள் மைய அமைப்புக்களைக் கட்டியெழுப்பினால்தான் தமிழ்த்தேசிய அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதே அது. அரசியல் கைதிகளின் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் போன்ற எல்லாப் போராட்டங்களும் அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறுவதற்கும் அதுதான் ஒரே வழி