தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாகவும் மாற்றுத் திறனாளிப் போராளியாகவும் விளங்குபவர். மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர், மாற்றுத் திறனாளிகளுக்கான அதிலும் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கான நலனோம்பு வேலைகளை செய்துவரும் வெற்றிச்செல்வியின் உரையாடல் இன்று, மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு.
- போர் முடிவுக்குகொண்டுவரப்பட்டுஆறுவருடங்கள் ஆகியுள்ள நிலையில் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் உருவாகியுள்ளதா?
லட்சியங்கள் காணாமல்போனதால் லட்சங்களில் மட்டுமே வாழ்க்கை உள்ளதாக இளையதலைமுறையின் பாதிப்பேர் பொருளாதாரத்தைத் தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். இருந்த,பிறந்த, இடங்களிலிருந்துபுலம்பெயர் நாடுகளில் புகழிடம்தேடிக்கொண்டார்கள்,தேடிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள். பலருக்கு இந்தமண் என் சொந்த மண்ணில்லை என்ற வெறுப்பு. பொருளாதாரத்தைவளப்படுத்தும் முயற்சியில் வாழ்க்கை தேய்வதால் யாராலும் தம் வாழ்க்கையை தமக்காக வாழ முடியாத தவிப்பும் வெப்பியாரமும். போரின் எச்சங்களென வாழ்பவர்களின் வாழ்க்கை போராட்டமாகவே தொடர்கிறது.
- முன்னாள் போராளிகளின் தற்போதையநிலைஎன்ன?
வழிகளை தமக்காக உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள். உலகம் முழுதும் கால்களை ஊன்றி விட்டவர்களாயும் தமது சுய உழைப்பால் உயர்பவர்களும்,சொந்தமாய் தொழில் புரிபவர்களும்,குடும்பமும் குடித்தனமுமாய் வாழ்பவர்களும் தாம் நேசித்தசனங்களுக்காக இப்போதும் தமது உழைப்பையும் உணர்வையும் அர்ப்பணிப்பவர்களுமாககாண்கிறேன். ‘ஐயோபாவம் என்றுயாரும் இரங்கவேண்டியவர்களாயும் போர்க்காயங்களால் அவையவங்களை இழந்தவர்களில் சிலரும் இருக்கிறார்கள்.முன்னாள் போராளிகள் மட்டுமல்லஅவர்களின் குடும்பங்களும் புலனாய்வுப்பிரிவினரின் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை இல்லாமல் இல்லை.
- முன்னாள் போராளிகளுக்கான இலங்கைஅரசின் புனர்வாழ்வுஎன்பதன் அர்த்தம் என்ன?
அரசாங்கம் பலதிட்ட முன்மொழிவுகளை வைத்து திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொண்டது. ஆயிரம் பேருக்குமுன்மொழிந்ததிட்டத்தில் 300 பேருக்குபயிற்சிவழங்கியது. வயல்நிலங்களில் வேலை செய்யத்தக்க வாலிபர்களுக்கு சிரட்டையில் கைவினைப்பொருள் செய்யவும் கராத்தே கற்று முடித்த பெண்களுக்கு மணப்பெண் அலங்காரப் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆக தச்சுத்தொழில்,தையல் தொழில் பயிற்றுவிக்கப்பட்டசிலருக்குமட்டும் புனர்வாழ்வு ஓரளவுதொழில் வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பேன். ஒட்டுமொத்தமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் என்பதற்கு தடுத்துவைத்திருக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்பதே அர்த்தம்.
- முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் இருக்கும் சவால்கள் என்ன?
அவர்கள்தான் அவர்களுக்கான சவால்கள். அரசியல், இராணுவக் கெடுபிடிகள் காரணமானவர்கள் தவிர மற்றெல்லோரும் தமது வாழ்வை தமக்கே சவாலாக்கிக் கொண்டு கஸ்ரப்படுகிறார்கள் என்பேன். ஒருசின்ன இலகுவான உதாரணம், கடற்புலிகள் அமைப்பில் படகுக் கட்டுமாணப் பகுதியில் கடமையாற்றிய ஆண்பெண் போராளிகளெல்லாம் தற்போது என்ன செய்கிறார்கள்? கடற்கரைகளில் உடைந்தபடகுகளைச் சீரமைக்கும் தொழிலுக்குஉதவினாலேஉதவு தொகையாக வருமானம் ஈட்டலாம்.
போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு துப்பாக்கிபிடிக்கமட்டும்தான் கற்றுக்கொடுக்கப்பட்டதாக பலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு வாழத் தகுந்த தொழில்கள் தெரியும். சவால்களையெல்லாம் தமது வெற்றிப் படிகளாக மாற்றும் வல்லமை அவர்களிடம் உண்டு என்று நான் இப்போதும் நம்புகிறேன். வன்னியில் போராளியாக வாழ்ந்த நாட்களில் தாய்போல பிறர் நலனுக்காகன பணிகளை ஏற்றுச் செயற்பட்டவர்களில் பலர் இப்போதும் தமது பணிகளைவிடாமல் தொடர்வதை அறிவேன். மனநலத்தைவலுவூட்டும் இல்லத்தின் தலைவியாக செயலாற்றிவரும் போராளிகள் தமதுதியாகப் பயணத்தைவிட்டுவிடவில்லை.
மருத்துவத்துறையில் வீரம் கிழித்தகாயங்களை ஆற்றுவதேதம் பணியாக இருந்தவர்கள் இன்று மருத்துவமனையிலும், தனியார் மருந்தகங்களிலும் தொழில் அனுபவம் மிக்கவர்களாகதொழில் புரிகின்றார்கள். தொணடு அமைப்புகளால் வழங்கப்படுகின்ற மருத்துவப் பணிகளில் தோளோடு தோள் நின்று உழைக்கிறார்கள். பெண்களுக்கான செயற்பாட்டாளர்களாக செயலாற்றியவர்கள் இப்போதும் மாதர் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற உண்மை உழைப்பாளிகளாக வாழ்கிறார்கள்.
காலிழந்த ஒருமுன்னாள் பெண் போராளிகளத்தில் ஆயுதம் தரித்து நின்றவள்தான். எனினும் திருமணம் செய்து, அழகான பிள்ளைகளைப் பெற்று தனது குடும்பத்தை வளமாகவும் சமூகத்தை வளப்படுத்தும் தொண்டுள்ளம் கொண்டவளாகவும் வாழ்கிறாள். போராட்டம் துப்பாக்கியை மாத்திரம் தூக்கிதோளில் வைத்துக்கொண்டுஉலவவிடவில்லை. ஊணையும் உயிரையும் பிறருக்காகக் கொடுத்துவாழவும் மடியவும் சொல்லித் தந்த அழகான வாழ்வைத் தந்திருக்கிறது.
பொய், பிரட்டு, பித்தலாட்டம் செய்யும் ஒருசிலரால் உண்மைப்போராளிகளின் உயர்ந்த கொள்கைகள் அடிபட்டுப் போவதாக நினைக்கத் தேவையில்லை.போராளியாக வாழ்ந்ததற்காக எல்லாவற்றையும் இழந்து விட்டவர்களாக கருதத் தேவையில்லை. வாழ்வு என்பது பிறப்பிலிருந்து வாழ்வதன் தொடர்ச்சிதானே ஒழியபுனர்வாழ்வு, மறுவாழ்வு, சமூகத்திற்கு மீளத் திரும்பியவர்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. சவால்கள் மனிதனாகப்பட்ட அனைவருக்கும் பொதுவானதே என்பேன்.
தவிரமேற் சொன்ன அரசியல், இராணுவக் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டை விட்டோ கிராமத்தை விட்டோ அல்லது நாட்டைவிட்டோவிலக முடியாமல், இப்போதும் புலிப்பார்வைபார்க்கப்படுகின்ற முன்னாள் போராளிகள்,அல்லது அப்படித்தான் அரசதரப்பு தம்மைப் பார்க்கும் என்று உளரீதியான பாதிப்புகளை அடைந்தவர்களது வாழ்க்கை சவால்கள் மிக்கதுதான் என்பதுவும் உண்மையே. இதுவரைபடையினரைப் பார்த்து வெகுண்டெழும் நிலையிலேயே ஒருமுன்னாள் பெண் போராளிமனநோய் மருத்துவ நிலையமொன்றில் கட்டிலில் கட்டிவைத்துப் பராமரிக்கப்டுவதும், தன்னை போராளி என்று இனங்காட்டாமல் மறைக்க விரும்பிய ஒருவர் தன்னைத்தானே அலங்கோலப்படுத்திக்கொண்டு மனநலத்திற்காக மருத்துவம் பெற்று வருபவராகவும் இருப்பதைநான் அறிவேன். அவர்களதும் அவர்களது குடும்பத்தவர்களது வாழ்க்கையையும் சவால்கள் அற்றவை என்று சொல்ல முடியுமா என்ன?
- 18வருடங்கள் போராடிய ஒரு முன்னாள் போராளியாய் இயங்கிய அனுபவம் அல்லது காலம் உங்கள் இன்றைய வாழ்க்கையில் எவ்வாறான செல்வாக்கை செலுத்துகிறது?
இதோ நீங்கள் இந்தக் காரணம் சொல்லித்தான் என்னை நேர்காணல் செய்கிறீர்கள். எனது இருப்பை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்ற காலம் அந்த 18 ஆண்டுகளாய் ஆகிவிட்டிருக்கிறது. அந்தக் காலங்களை நான் இப்போதும் நேசிக்கிறேன். மக்களையும் நண்பர்களையும் நேசிக்கவும் அவர்களுக்காக தியாகம் செய்யவும் அவர்களுக்காகவே வாழவும் கற்றுத்தந்த நாட்கள் அவை. அவ்வாறு வாழ்ந்ததன் காரணமாகவே நான் மதிப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால் அதுமிகையில்லை.
- மாற்றுத் திறனாள்கள் சார்ந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளுகிறீர்கள்? இப்போது அவர்களின் நிலை என்ன?
பாெதுவாக பிறரில் தங்கிவாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகள் தமது சாெந்தக்காலில் நிற்பதற்கான தகுதியை பெற வேண்டும். அதற்காக அரசு நிலையான அபிவிருத்தித் திட்டங்களை காெண்டுவர வேண்டும். அந்த அபிவிருத்திகள் உண்மையிலேயே மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் அவசியமாகும். வாழ்வாதாரம் என்கின்ற வகையில் தற்பாேது நடைமுறையில் உள்ள திட்டங்களை பற்றி இங்கே கூறவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் அரசினால் ஏற்றுக்காெள்ளப்படவும் அவை நடை முறைப்படுத்தப் படவும் வேண்டும். அதற்காக என்னாலான பங்களிப்பை எனது தாேழியருடன் இணைந்து ஆற்றிவருகிறேன்.
- ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் உங்கள் ஆயுதம் எழுத்துஎனச் சொல்லமுடியுமா?
ஆயுதப் போராட்டகாலத்திலும் நான் எழுத்துலகில்தான் அதிகம் வாழ்ந்தேன். நானொரு அங்கமிழந்தவர் என்பதால் ஆயுதம்தாங்கிப் போராடும் வாய்ப்பு எனக்கு குறைவாயிருந்தது. எனினும் களமுனைகளைத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
- ஈழப்போரின் இறுதிநாட்கள் புத்தகம் முக்கியவத்துவமான வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படி அவ்வாறான ஒரு பதிவை மேற்கொள்ள முடிந்தது?
முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெருப்பாய் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நாட்கள் அவை. மனசு வெடித்து விடும் என்றளவு அழுத்தத்தில் இருந்த தடுப்புமுகாம் வாழ்வில் நான் சாதித்திருக்கிறேன் என்றால் அது இந்தப் பதிவை செய்ததுதான். போரின் இறுதியில் நான் எனது கண்களால் கண்டவற்றை எழுதிவிட நினைத்தேன். அதுஎன்னையும் என் தோழிகளில் பலரையும் மன அழுத்தங்களிலிருந்து சற்று ஆறுதல் படுத்தியது என்பேன். சுவரில் சாய்ந்து குந்திக்கொண்டு மடியில் வைத்து, முதுகு வலிக்க வலிக்க எழுதிய அந்த எழுத்து ஒருகாலத்தின் பதிவாய் ஆகியிருக்கிறது.
- ஒருபோராளியிள் காதலி நாவல் குறித்துச் சொல்லுங்கள்?
இதுவும் ஈழப்போரின் இறுதிநாட்கள்தான். எனினும் நாவல் வடிவத்தில் எழுதினேன். நான் சேர்ந்துவாழ்ந்தவர்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் இந்நாவலின் பாத்திரங்களில் கோர்த்து விபரித்திருக்கிறேன். அதில் வரும் பாத்திரங்களின் உண்மைவாழ்க்கைஅத்தனையும் தனித் தனி நாவல்களாக வனையப்பட வேண்டிவை. கதையோட்டத்தோடு தொடர்புபட்ட சம்பங்களை இந்நாவலில் இணைத்திருக்கிறேன். நான் எப்போது எழுதிவிட்டு கொப்பியை கீழேவைப்பேன் என்று காத்துக்கிடந்து வாசித்து வாசித்துதம் உணர்வுகளை வெளிப்படுத்திய என் தோழிகள் மிதயாகானவி, அனந்தினி, மதி, முடியரசி, மணிமொழி போன்றவர்களை இந்நேரம் நினைத்துப் பார்க்கிறேன்.