தற்கொலை தொடர்பான முன்னைய இலக்கியங்களின் மீளாய்வு (Literature Survey)
ஒரு ஆய்வு சிறப்பாக அமைய வேண்டுமாயின் அவ்வாய்வு சம்பந்தமாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றியும் அவ்வாய்வுடன் தொடர்புடைய ஏனைய இலக்கியங்கள் பற்றியும் மீளாய்வு செய்யவேண்டியது அவசியமாகும். இதன் மூலமே ஆய்வினை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்பதுடன், அவ்விலக்கியங்களில் விடப்பட்ட குறைபாடுகளை அல்லது இடைவெளிகளை அறிந்து, அவற்றினை நிவர்த்தி செய்யலாம். அவ்வகையிலேயே இவ்வாய்வினையும் சிறப்பாக செய்து முடிக்கும் முகமாக இந்த ஆய்வு விடயத்தோடு தொடர்புபட்ட முன்னைய ஆய்வுகள் பற்றி நோக்கவேண்டியுள்ளது. எனினும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மிகக் குறைவாகக் காணப்படுகின்ற போதும் அதனோடு சார்ந்ததான பின்வரும் இலக்கியங்கள் இங்கு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Emile Durkheim (1951) “Suicide” என்னும் நூலில் தற்கொலை, தற்கொலை தொடர்பான விரிவான விளக்கங்களும் தற்கொலையின் வகைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்கொலை தொடர்பாக முதன்முதலில் ஆய்வினை மேற்கொண்டவாராக எமில் டூர்க்கைம் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்நூலானது தற்கொலை தொடர்பான ஆழ்ந்த அறிவினை தருவதாக அமைந்துள்ளது.
தற்கொலை எண்ணக்கரு சமூகத்தில் எவ்வாறு காணப்படுகின்றது, சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள், தற்கொலையின் வகைப்பாடுகள் என்பவற்றைக் கூறி தற்கொலை அதிகமாக உள்ள ஒரு சமூகத்தை ஆய்வாளன் ஆய்வு செய்யும் போது அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்து விடயங்களையும் எடுத்துக்காட்டுகின்றது. இது தற்கொலை தொடர்பான எண்ணக்கருவை ஒரு சமூக ரீதியான சார்பில் மட்டுமல்லாது தனியாள் சார்பிலும் நோக்கியுள்ளதுடன் மேலைத்தேய நாடுகளை அதிகம் உதாணரமாகக் கொண்டு நோக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை பிரதான கருப்பொருளாகக் கொண்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜமாஹிர்,பீ.எம்.,(2010) ‘மெய்யியல் பிரச்சினைகளும் பிரயோகங்களும்’ என்னும் நூல் பிரயோக மெய்யியலும் ஒழுக்கப் பிரச்சினைகளும் என்னும் தலைப்பின் கீழே தற்கொலை பற்றியும், தற்கொலைக்கான காரணங்கள் பற்றியும், தற்கொலை செய்யும் முறை பற்றியும், தற்கொலைக்கான பொதுவான அறிகுறிகள் பற்றியும், தற்கொலையின் வகைகள் தொடர்பாகவும் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நூல் தொன்மை கிரேக்க, ரோம சிந்தனை மரபுகளிலும் தற்கொலை நாளாந்த நிகழ்வாக இருந்தமை பற்றியும் குறிப்பிடுகின்றது. அத்துடன் குழந்தைகள், சிறுவர்களின் தற்கொலை பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பரீட்சையில் தோல்வி, கடும் துக்கம், வேலையின்மை, வாட்டும் கடன் பிரச்சினைகள், பணப்பிரச்சினைகள், வறுமை, பணி இடங்களில் ஏற்படும் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமை, திருமண உறவில் உள்ள சிக்கல், பாலியல் காரணிகள், விரக்தி உணர்வு, தனிமைப்படுத்தல் முதலியன தற்கொலைக்கான பொதுவான காரணங்கள் என்றும் அதனைத் தடுப்பதற்கான வழிவகைகளையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பாத்திமா சிபானி,ஏ.ஜீ, (2010) ‘சமூகப் பிரச்சினைகள்’ என்னும் நூலிலே ஐந்தாவது அத்தியாயத்திலே தற்கொலை ஒரு பகுதியாக சமூகவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நூலிலே தற்கொலை பற்றிய எமில் டூர்கைமின் நோக்கு, தற்கொலையின் வகைகள் மற்றும் இலங்கையில் தற்கொலை ஒரு சமூகப்பிரச்சினை, தற்கொலைக்கான காரணங்கள் போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. இந்நூலில் சமூக ஒழுங்கின்மையாலும் தனியன்களின் மீது உறுதியான கட்டுப்பாடு நிலை இன்மையும் தற்கொலைக்கு வலிகோலுகின்றதாக டூர்கைம் கூறியதாக குறிப்பட்டிருக்கின்றது. மேலும் தற்கொலைக்கான காரணங்களை உளவியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணிகள் எனப் பிரித்து நோக்கமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலிலே தற்கொலையை சமூகவியல் ரீதியாக எவ்வாறு உள்ளது என்றும், இலங்கையில் எவ்வாறு தற்கொலை உள்ளது என்றும், தற்கொலை தொடர்பான பொதுவான விடயங்களை விளக்கியுள்ளதை காணமுடிகின்றது.
கோகிலா.ம,(2006) ‘மனச் சோர்வு’ என்னும் நூலிலே தற்கொலைக்கு பிரதான காரணம் மனச்சோர்வே என்றும், மனச்சோர்வுடையோர் தற்கொலையைப் பற்றி பேசுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் பெண்களில் அதிகமாக இருக்கின்ற போதும், தற்கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்பவர்களிலே ஆண்களே அதிகம் உள்ளனர் என்றும் குறிப்பிடுகின்றது.
வைத்திய நிபுணர்கள், சட்ட வல்லுணர்கள், பல் மருத்துவர்கள், விமான ஓட்டுணர்கள் மத்தியில் தற்கொலை நூற்று வீதம் என்றும், சமயம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மத்தியில் தற்கொலை செய்யும் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுவது போல மார்கழி மாதத்திலே அது குறைவாக காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தற்கொலைக்கான காரணங்கள் பற்றியும், தப்பிக்கும் தற்கொலை, ஆக்ரோஷத் தற்கொலை, அர்ப்பணிப்புத் தற்கொலை பற்றியும், வீரதீரத் தற்கொலை பற்றியும், தற்கொலை தொடர்பான தவறான கருத்துக்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவதாஸ்.எஸ். (2005) ‘நலமுடன்’ என்னும் நூலிலே 65வது பக்கத்திலே அனர்த்தங்களை தொடர்ந்து ஏற்படும் உளநெருக்கீட்டின் விளைவாகவும் ஏனைய சமூகக் காரணிகளாலும் மனச்சோர்வினாலும் தற்கொலை ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மைக்காலங்களில் தற்கொலை முயற்சியுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து பலர் வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என்றும் முல்லைத்தீவிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அதற்கான காரணங்களையும் குறிப்பிடுகின்றது.
தயா சோமசுந்தரம், கோகிலா.ம, கடம்பநாதன், (2005) ‘சின்னச் சின்னப் பிள்ளைகள்’ என்னும் பாடசாலை சார் உள சமூக செயற்பாடுகளுக்கான பயிற்சிக் கைந்நூலிலே அறிவாற்றல் சார் அறிகுறிகளில் ஒன்றாக தற்கொலை எண்ணங்களைக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மனச்சோர்வு நோய்க்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் ஞாபகம் வைத்திருப்பதிலும் கிரகிப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், தனது எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற எண்ணங்களையும் தற்கொலை எண்ணங்களையும் கொண்டிருப்பர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயூரன்.த, (2012) ‘சமூகப் பிரச்சினைகள்’ என்னும் நூலில் Rdwin Shneidmen, Bessil Benzel, Emile Durheim போன்றோர் தற்கொலை தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்கள் மிகச் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்கொலையினை உளவியக்கவியல் கொள்கை, உயிரியல் கொள்கை, சமூகவியல் கொள்கை என மூன்று கொள்கைகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. தற்கொலையைப் பற்றிய சமூகவியல் நோக்கில் சமூகச் சூழலே ஒருவரை தற்கொலைக்கு உட்படுத்துகின்றது என்பது அடிப்படை எண்ணக்கருவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் அதில் தற்கொலையினை அகநிலைத் தற்கொலை ((Egoistic Suicide) நியமமறுநிலை தற்கொலை (Annomic Suicide), உன்னத தற்கொலை (Altruistic Suicide) திவசப்பட்ட தற்கொலை (Fatalistic Suicide) என 1897 இல் Emile Durkheim என்பவர் தனது ஆய்வினடிப்படையிலான நான்கு வகைப்பாடு விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. தற்கொலையை விளக்குவதற்கான சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்திய காட்டுரு ஒன்றினையும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
வசந்த தேவராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா.எம்.டி,…., (——-) ‘மனித நடத்தையை புரிந்து கொள்ளல்’ என்னும் நூலிலே தற்கொலை என்றால் என்ன, தற்கொலை என்ற சொல்லின் தோற்றுவாய், அர்த்தம் போன்றன குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தற்கொலை செய்வோரினை மன அழுத்தத்திற்கு அல்லது நம்பிக்கையீனத்திற்கு ஆளாவோர், தொடர்பாடல் அல்லது தம்மைக் கட்டுப்படுத்த இயலாதோர் என இருவகையினராக பிரித்து விளக்கப்பட்டுள்ளது. தற்கொலையியல் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. அநேகமாகத் தற்கொலை செய்யக்கூடுமெனக் கருதப்படுபவர் அறுபத்தைந்தும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்களே அநேகமாகத் தற்கொலை செய்யலாமெனக் கருதப்படும் அதேவேளை, இவ்வயதினைக் கொண்ட ஆண்கள் தனிமையாயிருக்க முனைவதுடன், மனவழுத்தம், மூளைக்கோளாறு போன்ற உளவியல் நோய்களால் துன்புறுவதுடன் போதைப்பொருள் அல்லது மதுபானப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
றிச்சேட்.அ.எ, (2006) ‘சமூகப் பொருண்மைகள்’ என்னும் நூலில் அனோமி விவகாரத்தின் சமூகம்சார் அடிப்படை – கோட்பாடும், பிரயோகமும் என்னும் அத்தியாயத்தில் அனோமி என்பதற்கான வரையறை, அனோமியும் அதற்கான காரணங்களும், அனோமிக்கான காரணங்கள் டூர்க்கைமின் நோக்கு, அனோமியும் தற்கொலையும், தற்கொலை மனப்பாங்கு உருவாகும் விதம், டூர்கைமின் தற்கொலைக் கோட்பாடு, தற்கொலை தொடர்பான சமூகவியல் கோட்பாடுகள் போன்ற தலைப்புக்களினூhக விளக்கப்பட்டிருப்பதனை காணமுடிகின்றது. இதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருப்பது எமில் டூர்கைகமின் என்பவரது அகநிலைத் தற்கொலை, நியமமறுநிலை தற்கொலை, உன்னத தற்கொலை, விதிவசப்பட்ட தற்கொலை என்னும் நான்கு வகை தற்கொலைகளில் ஒன்றான அனோமி தற்கொலை பற்றியே அதிகமாக விளக்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து தற்கொலை தொடர்பான அறிவினை பெற்றுக்கொள்ள முடிகின்றது.
எஸ் டேமியன்.அ.ம.தி (1993) ‘உளவளத்துணை’ என்னும் நூலிலே தற்கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களுக்கான உளவள ஆலோசனை என்னும் அத்தியாயத்திலே தற்கொலை முயற்சிக்குரிய காரணிகள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை மதிப்பிடுவதற்கான சில வழிகள் என்பன தரப்பட்டிருக்கின்றது. இதில் நமது சமுதாயத்தின் உயிரை வாங்கும் முதல் உயிர்கொல்லி எதிரியாக இருப்பது அலரி விதையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சிக்குரிய காரணியாக, தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் இளம் வயதினை உடையவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக குமரப்பருவத்தில் இருப்பவர்கள் அவர்களின் வளர்ச்சிப் படியிலே உடலிலும் உள்ளத்திலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. குமரப்பருவம் நெருக்கடியும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம் திடீர் மன எழுச்சிகளுக்கு ஆளாகி எதையும் செய்து விடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால் ஏற்படும் கோபம், வெறுப்பு, ஆத்திரம் போன்றன தற்கொலையை தூண்டுவதோடு சமூக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், அழுத்தங்களும், தொழில் இன்மை, வறுமை, விரக்தி என்பனவும் காரணிகளாகின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது
Elliott.M.A & Merrill.F.E (1950) “Social Disorganization” என்னும் நூலில் இரண்டாம் பாகத்தில் தனியார் ஒழுங்கமைப்பின்மை என்னும் பகுதியில் 16வது அத்தியாத்தில் தற்கொலைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் அறிமுகமாக ஒரு கதையைக் கூறி தற்கொலை சம்பந்தமான விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் தற்கொலையின் தன்மை பற்றிக் கூறும் பொது எமில் டூர்க்கைம் அவர்களின் பாகுபாட்டை மையமாகக் கொண்டு மூன்று வகையாகக் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்நூலில் தற்கொலையானது தனது சுயத்திற்கு மனிதனின் எதிரான தன்மை என்று குறிப்பிடப்படடுள்ளது.
மேலும் இந்நூலின் தற்கொலைக்கான காரணங்களாக பால், வயது, குடும்ப சீர்குலைவு, தொழில் ரீதியான எதிர்பார்ப்பு என்பன காரணமாக அமையும் என்றும், சமயமானது அதிக சமூகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும்போது தற்கொலை நிகழும் என்று குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு தற்கொலையானது நகரப்பகுதிகளில், கிராமப்பகுதிகளிலும் பார்க்க அதிகமாகக் காணப்படுகின்றது என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் தற்கொலைக்கான காரணங்களாக மனவழுத்தம், யுத்தம், உளவியல தாக்கம், உடல்நோய்கள் என்பவையும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு தற்கொலைக்கான சூழல், தற்கொலை முறைகள,; தற்கொலை மனப்பான்மையின் தன்மைகள் என்பவை ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஆய்வாளனின் ஆய்விற்கு தற்கொலை பற்றிய எண்ணக்கருக்களையும், காரணங்களையும் விளங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.
Di Maio.J.M (1999) “Gunshot wounds” என்னும் நூலில் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ளல் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் 65 வீதமானோர் இவ்வாறான தற்கொலைகளால் இறப்பதாகவும், 48வீதமான பெண்கள் போதையால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ளல், நீண்ட முனைகளைக் கொண்ட துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ளல், பொதுவான முறையில் தற்கொலை செய்து கொள்ளல் போன்ற தற்கொலை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்செயலாக துப்பாக்கிச்சூடு ஏற்படுதலையும் இவர் தற்கொலையாகக் கொள்கின்றார்.