தமிழர்கள் என்று தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் நிலைக்கு வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற எண்ணம் அல்லது முடிவு அவசரத்திலோ அல்லது எழுந்தமானமாகவோ எடுக்கப்பட்ட முடிவல்ல. இது அனுபவ வாயிலாக எடுக்கப்பட்ட முடிவு. அந்நியர் வருகையின் முன்பு இன்றைய சிறீலங்கா என்ற நாடு மூன்று வேறுபட்ட, இராச்சியங்களாக இருந்திருக்கிறது. இந்த மூன்று இராச்சியங்களும் நிர்வாக தொழிற்பாடுகளின் இலகுவாக்கலுக்காக ஒரே அரசமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின் அரச இயந்திரத்துள் பிரவேசிக்க சுதேசிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேளைகளில் சிங்களரை பொறுத்தவரை தங்கள் இருப்பையும் செல்வாக்கையும் வலுப்படுத்தவே உறுதி கொண்டார்களே தவிர இலங்கையில் வாழும் அனைவரும் ஒரேமக்கள் என்று நினைக்கவே இல்லை. இதற்கு அன்றைய சிங்கள முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட முறுகல்களும், சிங்கள தமிழ் மக்களிடையே காணப்பட்ட முறுகல்களும் ஆதாரமாகவே உள்ளது.
இந்த சிங்கள தமிழ் மக்களிடையேயான முறுகலுக்கு சிங்களரை முற்று முழுதாக எதிர்க்கவோ குறைகூறவோ முடியாது. காரணம் சிங்கள அரசில் வெறுப்புற்ற சிங்களர்களும் உள்ளார்கள். சிங்களர்களும் நாட்டைவிட்டு புறப்பட்டும் உள்ளார்கள். எல்லா சிங்களரும் தமிழரை வெறுப்பவர்கள் அல்ல. ஆனாலும் கூர்ந்து அவதானித்தால் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதிகளை தமிழர்களும் ஆதரிக்கவில்லை அதேவளை சிங்களவர்களும் புறக்கணித்தார்கள். இதனால் சில சிங்கள தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கும் சூழலும் ஏற்பட்டது. அதே சமயம் சிலர் தங்கள் இருக்கையை நிலைப்படுத்துவதற்காக இனவாத அரசியலில் இணைந்துகொண்டனர். சிங்களரில் இருந்த, இருக்கின்ற ஒரு முக்கிய திறமை தமிழ் மக்களிடம் இருப்பதில்லை. அதாவது எங்கு கூட்டு வைத்தும் தங்கள் காரியத்தை சாதிப்பார்கள். இது இன்றல்ல மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. அது நல்லதோர் இயல்பு என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சிறீலங்கா என்ற நாடு எங்களுடையது, அது ஒரு சிங்கள பௌத்த நாடு, நாங்கள் பெரும்பான்மையினர், நாங்கள்தான் ஆட்சிக்குரியவர்கள் என்று சாதித்து விட்டார்கள். தமிழர்கள் தங்களால் ஆளப்படவேண்டியவர்கள் என்ற மனநிலையை சிங்களமக்களிடம் வளர்த்துக்கொண்டார்கள். இந்த அடிப்படையில்தான் சிறிலங்காவில் தற்காலிக சனாதிபதியாக இருந்த டீ. பீ. விஜயதுங்க என்பவர் பெரும்பான்மையினர் மரங்கள் போன்றவர்கள் இங்கு வாழும் சிறுபான்மையினர் அதில் படரும் கொடிகள் போன்றவர்கள் என்று கூறினார். அதாவது பெரும்பான்மையினரை நம்பி சிறுபான்மையினர் வாழலாமே தவிர அவர்கள் தங்களுக்கு ஒரு அதிகாரத்தை எதிர்பார்க்கக் கூடாது. பெரும்பான்மையினர் தருவதை ஏற்றுக்கொள்ளலாமே தவிர மேலதிகமாக எதையும் கேட்கக்கூடாது. அடங்கிப்போகவேண்டுமே தவிர ஆளும் எண்ணம் வரவே கூடாது என்பது அவரின் கருத்து. இக்கருத்தினை அவரின் தனிப்பட்ட கருத்தாக கொள்ளமுடியாது. பொதுவான சிங்கள அரசியல்வாதிகளின் கருத்து.
தமிழ் மக்களின் தலைவர்கள் தங்கள் சமூகம் தொடர்பாக எப்படி சிந்திக்கிறார்கள் என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது. இசுலாம் சமயத்தை பின்பற்றும் மக்கள் தாங்கள் மதத்தின் அடிப்படையில் முசுலீம்கள் என்றே கூறுவார்கள். அதேபோல சிறீலங்காவில் தமிழ் பேசும் முசுலீம்கள் தாங்கள் தமிழ்மொழியை பேசினாலும் முசுலீம் என்ற வகுதியுள் தம்மை அடக்கிக்கொள்வர். இதனால் தாங்கள் தனியான பிரிவாக உருவாகிக்கொள்வர். முசுலீம்களின் தலைவர்களும் எப்போதும் தமிழர்களில் இருந்து வேறுபட்ட ஒருநிலையில் முசுலீம்ளை வைத்திருப்பர். தமிழ்பேசும் முசுலீம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே எப்போதும் சிறியதொரு முறுகல்நிலை இழையோடிக்கொண்டிருக்கும். சைவ சமயத்தினரும், கிறித்தவ மதத்தினரும் மத அடிப்படையில் தங்களை வேறுபடுத்தாமல் மொழிவாரியாகவே இணைவர். இருப்பினும் தமிழ் மக்கள் தலைவர்கள் தங்களின் சொந்த நலன் சார்ந்தே எந்த முடிவையும் எடுப்பார்கள் என்றே சொல்லமுடியும். ஒரு சமூகம் என்னை நம்பி தங்கள் எதிர்காலத்தை ஒப்படைத்துள்ளார்கள். நான் அவர்களுக்காக உண்மையான சேவை செய்யவேண்டும் என்று எத்தனை தலைவர்கள் செயற்பட்டார்கள் என்று கோடிட்டு காட்டமுடியாது. தவிர எங்களுக்குள் உட்பூசல் ஏற்படுத்தி சண்டையிட்டுக்கொள்வர். ஆனால் ஒவ்வொரு தலைவர்களும் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவார்கள், தங்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர பாடுபடுவார்கள், எங்கள் உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்று முற்றுமுழுதாக தமிழர்கள் நம்புவர். அதில் எத்தனைவீதம் நிறைவேறியுள்ளது என்று கூறமுடியாது. காரணம் தமிழர்கள் இன்னும் தொடக்கநிலையிலேயே வாழ்கிறார்கள். இதற்குமேல் கருத்துருவாக்கம் என்ற அடிப்படையில் நோக்கின் வலுவான பேச்சாற்றல் உள்ளவர்கள் இலகுவாக தங்களை திறமையானவர்கள் என்று காட்டிவிடுகிறார்கள். ஆனால் செயற்பாட்டில் எந்தளவுக்கு ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது கடந்தகால விளைவுகளின் அடிப்படையில் சிந்திக்கவேண்டிய ஒன்று. பொதுவாகவே செயல்வீரர்கள் அதிகம் பேசுவதில்லை. காரணம் எதையும் சாதித்துக்காட்டவே அவர்கள் விரும்புவார்கள். ஆனால் சாதனைவீரர்களை நாம் நம்புவது குறைவு, ஏனென்றால் பேச்சுவன்மை அவர்களுக்கு குறைவு. அவர்கள் பேசுவதும் குறைவு. இந்த கவனமின்றிய போக்கு அநேக இடங்களில் எம்மை தோற்க வைக்கிறது. அதனால் நாம் தோற்றுவிடுகிறோம். இதை எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதே மிகப்பெரிய சோகம்.
உண்மையிலும் பார்க்க போலிகளையே நாம் பெரிதாக நம்புவோம். அவர்கள் எங்களை நம்பவைப்பார்கள். இதற்கு ஒரு சிறப்பான உதாரணத்தை நான் சொல்ல விரும்புகிறேன். அப்போது நான் தமிழ் ஈழம் என்று எல்லப்படுத்தப்பட்ட பிரதேசத்துள் வாழ்ந்தேன். தமிழ் திரைப்படங்களும் காண்பிக்க அனுமதி வழங்கப்பட்டகாலம் அது. தமிழ் திரைப்படங்கள் மிகவும் கவனமாக பார்க்கப்பட்டு, தேவையற்ற காட்சிகள் நீக்கப்பட்டு, முகம்சுளிக்க வைக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோரும் ஒன்றாக இருந்து அனுபவிக்க கூடியதாகவே திரைப்படங்கள் காண்பிக்கப்படும். நானும் எனது சில நண்பர்களும் படம் பார்க்க சென்றிருந்தோம். அது ஒரு திரையரங்கு. நிறைந்த மக்கள் கூட்டம். நின்ற நிலையில் படம் பார்த்தோம். அப்படத்தில் துப்பாக்கி சண்டைகள் காட்டப்பட்டன. தனி ஒருவர் நின்று எல்லா எதிரிகளையும் சுட்டு வீழ்த்தி, வெற்றியுடன் எந்த ஒரு காயமும் இன்றி தப்பி வருவார். படம் முடிந்து வீட்டுக்கு வரும்போது எங்கள் மீதே எங்களுக்கு கோபம் வந்தது. எங்களை நாங்களே பேசி வெறுப்பை தீர்த்துகொண்டோம். எவ்வளவு மோசமான ஏமாற்று. உண்மை நிலையை சிந்திக்க கற்றுக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் உண்மைக்கும் பொய்மைக்குமான வேறுபாட்டை கண்டு பிடிக்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். உண்மையில் எங்கள் தமிழ் தாயின் பிள்ளைகள் எவ்வளவு துன்பத்தின் மத்தியில், தங்கள் உயிரை துச்சமாக மதித்து, போர்க்களங்களில் சமராடி, உயிர்க்கொடை செய்யும் நாட்டில், எப்படி இந்தக்காட்சிகளை ஏற்றுக்கொள்வது. எனவே போலிகளை நம்பும் அளவிற்கு உண்மைகளை நாம் நம்புவதில்லை. அதுவே எங்களை தோல்வியின் பக்கம் இழுத்துச் செல்கிறது.
மேற்சொன்ன சம்பவம் ஒரு உதாரணம். இதை வைத்துக்கொண்டு “நீ அவங்கட ஆளா” என்றெல்லாம் முடிவெடுக்க வேண்டாம். எப்போதும் நடுநிலையில் நின்று முடிவெடுக்க வேண்டும். நடுநிலையில் நின்று முடிவெடுக்கும் நல்ல இயல்பு எம்மிடம் மிக அரிது. இதை கண்டு பிடித்த சிங்கள அரசு தனக்கு சாதகமாக, அல்லது பணிந்து போகாத எவரையும் புலி என்று பச்சை குத்தும் வேலையை செய்தது. எனவே நாங்கள் தமிழனின் நன்மை கருதி புலி என்ற வரையறைக்கு வெளியே வந்து தமிழர் வாழ்வு என்ற பெருநோக்கில் நடுநிலையில் சிந்திப்போம்.
இந்த செய்திகளுக்கும் தமிழ் மக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போமா?. தமிழனின் போராட்டம் நலிவடைய வேண்டுமெனின் தமிழரின் எண்ணிக்கை குறையவேண்டும். வெளிநாட்டுக் குடிப்பெயர்வு வெற்றிகரமாக இதனை நிறைவேற்றியது. அதாவது போராடும் வலுக்கொண்ட இளைஞர்கள் நாடுவிட்டு சென்றனர். போராட்ட வலுக்குறைப்பை சுலபமாக செய்யும் வழிமுறை என்பதாலேயே அரசு எந்த தடங்கலும் இன்றி தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்ல அனுமதித்தது. இவர்களின் குடிபெயர்வை தொடர்ந்து அவர்களை மணம்முடிக்க தமிழ்ப்பெண்கள் போயினர். அதனுடன் அப்பா, அம்மா போயினர். தமிழ் ஆட்கள் குறைந்தனர். வெளிநாட்டுப்பணம் இலங்கைக்கு வந்தது. இதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பானது. வெளிநாட்டு பணவரவு ஆசையை தூண்ட மேலும் மேலும் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பணமீட்டும் வசதிகள் குறைவு. எனவே நிறைந்த பணமீட்டும் சிறந்த வழியாக வெளிநாடு அமைய ஈழத்தில் போராடும் வலுவுள்ள தமிழர்கள் குறைந்தனர். போராட்ட வலுவும் குறைந்தது. மக்கள் எண்ணிக்கையும் குறைந்தது. இதைவிட இன்னுமொரு செய்தி இனமுரண்பாடு, அதனால் ஏற்பட்ட உயிர்க்கொலை, கடத்தல் காணாமல் போதலால் நாட்டை விட்டுப்போகும் மக்கள் நாட்டை மறக்கின்றனர். தங்கள் புதிய வாழ்வு பற்றி சிந்திப்பரே தவிர விடுதலை எண்ணம் மறக்கப்பட்டு போகின்றது. அதேவேளை அவர்கள் போராடவும் தவறவில்லை. அது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் நடக்கும். பின் பழையபடி தங்கள் வேலைகளை ஆரம்பிப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பும் வெளியில் வந்தது. எனவே வெளிநாட்டு இடப்பெயர்வு அரசிற்கு நன்மையே தந்தது.
இதற்கும் மேலாக தமிழ் மக்கள் கொழும்பு நோக்கி படை எடுத்து அங்கேயே வாழ ஆரம்பித்தனர். இதனால் அங்கும் பணப்புழக்கம் அதிகமாகியது. சிங்களமக்களுக்கும் தமிழர்கள் பணம் காய்க்கும் மரங்களாக தெரிந்தனர். வியாபாரம் பெருகியது. வீட்டு வாடகை உயர்ந்தது. வேலை தேடும் இளைஞர் தொகை குறைந்தது. வீடுகளும் விலையேறின. இவை எல்லாம் அரசிற்கு சாதகமாகியது. இந்த அடிப்படைதான் தமிழர்களின் பாதுகாப்பு பிரதேசமாக கொழும்பை நினைக்க வைத்தது. ஈழம் வேண்டிப்போராடிய மக்கள் நன்மை பெற்றார்களோ இல்லையோ சிங்கள மக்களும், அரசும் நிறைந்த நன்மைகளை அனுபவித்தன. அப்படியென்றால் ஏனிந்தப் போராட்டம்?. நாங்கள் நொந்து சிங்களர் வாழ்வதா? என்ற கேள்விகள் எழும். அந்தக்கேள்விகளுக்கான விடைகளை இனித்தேட ஆரம்பிப்போம்.
தொடரும்
பரமபுத்திரன்