மனசு தொலைக்குமா…?
இறுதி நாட்களில் நடந்தது என்ன? மறக்க முடியாத நினைவுக் குறிப்புக்கள்…
“உடையார்கட்டு ” எனக்கான மருத்துவபணித்தளம் இருந்த இடம். வன்னிப்பெருநிலப்பரப்பு ஒரு குறித்த பத்து கிலோமீட்டர் பரப்பளவுக்குள் சுருங்கி கிடந்தது. மன்னாரில் இருந்து முழங்காவில், வவுனியாவில் இருந்து மல்லாவி மணலாற்றில் இருந்து முள்ளியவளை என பல பிரதேசங்களின் மக்கள் தமது உயிர்களை பாதுகாத்து கொள்ள ஓடி வந்த முல்லைத்தீவின் சிறு நகரம். எங்கு திரும்பினும் இடம்பெயர்ந்தவர்களின் அவல ஓலம் நெஞ்சை கருக்கியது. 2009 ன் தை மாத இறுதி நாட்களில் ஒரு நாள்.
அன்றும் எனது குழந்தையை எனது தாயிடம் விட்டுவிட்டு தள மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்த உடையார்கட்டு மகா வித்தியாலயத்துக்குள் போவதற்காக பயணிக்கிறேன். அந்த நேரம் பயங்கரமான தாக்குதல் காயங்கள் வந்து கொண்டிருந்தன. எமக்கான பணிச்சுமை கனதியாக இருந்தது.
அப்போது சிங்கள இராணுவம் உடையார்கட்டு குளத்தை மீட்பதற்கான சண்டையில் உடையார்கட்டு குளத்திற்கு பின்பக்கமுள்ள காட்டுக்குள் எம் படையணிகளோடு சண்டையிட்டு கொண்டிருந்தது. இதனால் மூங்கிலாற்று பாலம் கடந்து செல்பவர்களை நேரடிச்சூட்டின் மூலமாக தாக்குதல் நடத்த கூடிய ஆபத்தான நிலை உருவாகி இருந்தது.
சினைப்பர் தாக்குதல்கள் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. மக்கள் பயணங்களை தவிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் பயணித்துக் கொண்டிருந்த அந்த பொழுது வானில் இருந்து ஒரு இரைச்சல். எனக்கு என்னை பாதுகாப்பு நிலை எடுக்க உணர்வுகள் எச்சரிக்கின்றன. நிலத்தில் வீழ்ந்து படுக்கிறேன். பலமான சத்தம் செவிப்பறையை கிழிக்கிறது. வீதியில் வந்தவர்கள் பீதியில் சிதறி ஓடுகின்றனர். வெடித்த பின் கிடைத்த சிறு இடைவெளியில் மூங்கிலாற்றை பார்க்கிறேன் ஒரு உழவியந்திரம் தீபற்றி எரிகிறது இரண்டு குரல்கள் அதில் இருந்து எழுகிறது. ஆனால் அவர்களும் எரிந்து கொண்டிருக்கும் கொடிய நிகழ்வை கண்டேன்.
மீண்டும் எறிகணை சத்தம் எம்மை தாண்டி செல்ல உழவியந்திரத்தை நோக்கி சென்ற போது பாதி எரிந்த உடல்களில் இருந்து திரவம் ஒன்று வடிந்து கொண்டிருந்தது. பல நூறு காயங்கள் பல நூறு வீரச்சாவுகள் பல நூறு சாவுகள் என்று என் கண்முன்னே நடந்த போதும் கலக்கமற்று இருந்த எனக்கு அந்த இரு உடல்களும் எரிந்த நிலையில் வடிந்து கொண்டிருந்த அந்த திரவத்தை கண்ட போது மனது வலித்தது அருகில் இருந்தும் உடனடியாக காக்க முடியவில்லையே என்ற கோவம் வந்தது. ஒரு மருத்துவராக என்னால் செய்ய வேண்டிய பணியை செய்ய முடியவில்லை என்ற ஏமாற்றம் மிஞ்சியது. குறை உயிர் இருந்தால் கூட சிகிச்சை எதாவது செய்யலாம் என்று நினைத்த போது உயிரற்று அடங்கி கிடந்த அந்த உடல்களை சுமக்க வருகிறது ஒரு வாகனம். நான் கண்ட வேதனையான பல நினைவுகளோடு இதையும் மனசுக்குள் பூட்டிவிட்டு மருத்துவமனை நோக்கி நகர்கிறேன்…
அவன் அடிச்ச செல் என்ன செல்லாக இருக்கும்…? இப்படியான எரிதன்மை கூடிய எறிகணைக் காயத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. மனதுக்குள் எழுந்த வினாவோடு நகர்ந்த எனக்கு விடையாக கிடைத்தது. “பொஸ்பரஸ் ” எனிகணையாக இருக்குமோ…?
தகவல் பெண் போராளி மருத்துவர்
நன்றி அக்கா…
தொகுப்பு : கவிமகன்
01.05.2017