தமிழரசுக் கட்சி பிழையான வழியில் செல்வதால் தான் ஒருபொது அணியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட்டு புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உருவெடுக்கும் என நான் நம்புகின்றேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தினசரி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியிலேயே இதனை அவர் அவர் தெரிவித்தார். ” அவரது பேட்டியின் விபரம்:
கேள்வி : உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக நீங்கள் நீண்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்திருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன?
பதில் : இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து விலகி வட கிழக்கு இணைப்பை கைவிட்டு, சமஷ்டி அரசியலமைப்பு முறையை கைவிட்டு, அரசியல் சாசனத்துக்கான இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களின் ஆணைக்கு புறம்பான ஒரு அறிக்கை என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தொடர்ந்தும் பணியாற்ற எங்களால் முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
இவ்வாறானதொரு கால கட்டத்தில் நாங்கள் சில கட்சிகளுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தோம். அத்துடன், தமிழ் மக்கள் பேரவையிலும் இணைந்து நாங்கள் பணியாற்றி வந்தோம்.
இந்நிலையில் தேர்தல் ஒன்று வரவிருப்பதனால் பொதுக் கூட்டு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், நாங்களும் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்த போதிலும் கூட இறுதியில் ஒரு பொதுச் சின்னத்தை எடுக்க முடியாத நிலையில், ஏற்கனவே, இருக்கக் கூடிய உதயசூரியன் சின்னத்தை பொதுச் சின்னமாக பாவித்துக் கொள்ளலாம் என்று நாங்கள் முடிவெடுத்த போது அதற்கு கஜேந்திரகுமார் தரப்பு இணங்கிவராததன் காரணத்தினாலும் தமிழ் மக்களுடைய தேசிய அரசியல் நிலைப்பாடுகளை சார்ந்த பல பொது அமைப்புகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வந்த காரணத்தினாலும் உதய சூரியன் சின்னத்தை பொதுச் சின்னமாக எடுத்து போட்டியிட தீர்மானித்தோம்.
அந்த அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். அதேபோல் வேறு பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அதனை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கின்றோம். அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதய சூரியன் சின்னத்தை பொதுச் சின்னமாக ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கின்றோம்.
கேள்வி : உங்களுடைய கொள்கைக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கும் சூழ்நிலையில் இந்த கூட்டு எந்தளவுக்கு சாத்தியமாகும் ?
பதில் : புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் நாங்கள் கையொப்பமிட்டிருக்கின்றோம். அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எங்களுடைய கொள்கைகளை விளக்கமாக கூறியிருக்கின்றோம். வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு சமஷ்டி அரசியல் முறையிலான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் அந்த ஒப்பந்தத்தில் கூறியிருக்கின்றோம். அதனை இந்த கூட்டில் இணைந்திருக்கின்ற அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல், மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டும். இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். காணாமல் போனோருக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்களையும் உள்ளடக்கியிருப்பதுடன், அரசியல் தீர்வு என்ன அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். இவை அனைத்தையும் எங்களுடன் இணைந்திருக்கின்ற அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இந்த கொள்கைகளுடன் உடன்பாடிருக்கிறது. அவர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
கேள்வி : உங்களுடைய முடிவை தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் ?
பதில் : பரவலாக நான் அறிந்த வகையில் தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிக்கு ஒரு மாற்று தேவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பேரவை அவ்வாறானதொரு மாற்றுத்தலைமையை வழங்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதற்கான மாற்று தலைமைத்துவத்தை கொடுக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை இல்லை.
ஏனென்றால் தங்களை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்துவதற்கு அவர்கள் ஆரம்பம் முதல் விரும்பவில்லை. எனவே, இதன் காரணமாக ஒரு மாற்று தலைமைத்துவம் ஒன்று அவசியமாக இருந்தது. நிச்சயமாக உதய சூரியன் சின்னத்தில் ஒன்று சேர்ந்திருக்கக் கூடியவர்கள் காத்திரமான முடிவுகளை எடுத்து சரியான மாற்று தலைமையை இதனூடாக உருவாக்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதனூடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணிப்பாளர்கள் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.
கேள்வி : மாற்றுத் தலைமை பற்றி கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் அந்த மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா ?
பதில்: நூற்றுக்கு நூறு வீதம் அந்த மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நான் சொல்லாவிட்டாலும் கூட, அதற்கான முதற்படியை நாங்கள் எடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றுத்தலைமை என்பது கூட்டுத் தலைமையாகவும் கூட இருக்கலாம். எனவே, அந்த மாற்றுத் தலைமைக்கான முதற்படியை நாங்கள் எடுத்து வைத்திருக்கின்றோம். நான் நம்புகின்றோம், மக்களுடைய ஆதரவுடன் அது இறுக்கமானதொரு அமைப்பாக நீடிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
அவ்வாறு உருவாகும் பட்சத்தில் இதில் இணையக் கூடியவர்களும் எதிர்காலத்தில் இணைந்து ஒரு காத்திரமான தலைமையை உருவாக்குவார்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி: தமிழ் மக்கள் பேரவையுடன் நீங்கள் நீண்ட கால உறவை பேணிவந்தீர்கள். இந்நிலையில் உங்களுடைய இந்த முடிவுக்கு பின்னர் அந்த உறவு எவ்வாறு இருக்கிறது ?
பதில்: அவர்களுடைய கொள்கைகளுக்கும் எங்களுடைய கொள்கைகளுக்கும் இடையில் எந்தவிதமான மாற்றுக் கருத்துகளும் இல்லை. பொது விடயங்களில் தமிழ் மக்கள் பேரவையுடன் தொடர்ந்தும் பணியாற்ற நாங்கள் விரும்புகின்றோம். பணியாற்றுவோம் என்று எதிர்பார்க்கின்றேன்.
நாங்கள் தமிழ் மக்கள் பேரவையை விட்டு வெளியேறவில்லை. தேர்தலை நோக்கமாகக் கொண்டு நாங்கள் ஒரு பொது அணியை உருவாக்கியிருக்கின்றோம். அவ்வளவு தான் வித்தியாசமே தவிர, பேரவையிலிருந்து வெளியேற வேண்டிய தேவையுமில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை.
தமிழரசுக் கட்சி பிழையான வழியில் செல்வதால் தான் ஒருபொது அணியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட்டு புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உருவெடுக்கும் என நான் நம்புகின்றேன்.
கேள்வி: நடைபெறவுள்ள தேர்தலின் மூலமாக மக்களுக்கு முன் நீங்கள் வைக்கவுள்ள கோரிக்கை என்ன ?
பதில்: திம்பு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வட கிழக்கு என்பது தமிழர்களுடைய தாயகம், அவர்களுக்கு சுயநிர்ணயம் உரிமை என்பது இருக்கிறது. அதனை யாரும் பறித்தெடுக்க முடியாது. அந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்டி அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய அடிப்படை கொள்கையாகவும் கோட்பாடாகவும் இருக்கிறது. அதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க முன்வரவேண்டும் என்று எங்களுடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெளிவாக கூறியிருக்கின்றோம்.
இதனைவிட மீள்குடியேற்றம், இராணுவம் மக்களுடைய காணிகளிலிருந்து வெளியேற வேண்டும். காணாமல் போனோருக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை நாங்கள் அதில் கோட்டிட்டு காட்டியிருக்கின்றோம். அதேபோல யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றுவது போன்ற விடயங்களையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.