திருமணம் என்பது சொர்க்கத்தில் தீர்மானிக்கப்படுகிறது என்று எம்தமிழ் மக்களிடையே பேச்சுண்டு. ஒரு ஆணையும் பெண்ணையும் இல்லற பந்தத்தில் இணைப்பதுதான் உண்மையான பந்தம் என்றும், சரியான திருமணம் என்றும், சமூகத்துக்கு பயனுள்ளது என்றும் இந்த உலகம் நம்புகிறது. அதுதான் உண்மையும் கூட . ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்கின்றனர், திருமணம் செய்ய ஆசைப்படுகின்றனர், திருமணம் செய்து வாழத்துடிகின்றனர். இத்திருமணத்தை எதிர்ப்பவர்களுடன் போராட்டமும் நடாத்துகின்றனர். இது உண்மையான வாழ்க்கையா என்று சிந்திக்கவேண்டியுள்ளது. அசிங்கமானது என்று சிந்திக்கப்படும் ஒன்று அவையேறி பெருமை கொள்ள முற்படுகிறது. முன்பு இரகசியமாக நடத்தப்பட்ட, ஆனால் மனிதசமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத பந்தம் இன்று கோரிக்கை வைத்து போராடிவெல்லும் அளவிற்கு முன்னேறிவிட்டது. அதற்கும் சனநாயக முறையில் வாக்கும் கோரப்படுகிறது.வெற்றியும் பெறுகிறது. எனவே இன்றைய உலகம் எங்கு செல்கிறது என்று யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும் யோசிக்க நேரமின்றி மக்கள் இருப்பதால் திட்டங்கள் சுலபமாக நிறைவேற்றப்படுகின்றன. பல்வேறு காரணங்களை காட்டி ஒத்த பாலினர் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளகூடியது என்று ஒரு தொகுதியினரும், இல்லை இது சமுக நீதிக்கு மாறானது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று ஒரு தொகுதியினரும், இரண்டுக்கும் நடுவே நின்றுகொண்டு எதனுடன் சேர்வது என்கின்ற குழப்பத்தில் ஒரு தொகுதியினருமாக போராட்டம் நடக்கின்றது.
உண்மையில் முழுமையான ஆண்மை அல்லது முழுமையான பெண்மை கொண்ட ஒருவரால் இந்த திருமணத்தை அல்லது இந்த வாழ்க்கையை எந்த ஒரு கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆண் என்றால் ஆண்தானே அல்லது பெண் என்றால் பெண்தானே பிறகென்ன முழுமையான ஆண் முழுமையான பெண் என்று பேசுகிறீர்கள் என்ற எண்ணம் தோன்றலாம். இதனை எங்களின் அன்றாட வாழ்வியலிலே பார்க்கமுடியும். சில ஆண்களை பார்த்து “அவன் ஒரு உண்மையான ஆம்பிளையடா”, “இவனுக்கு பொம்பிளையளின்ர குரலடா”, “ அவன்ர நடத்தை பெண்மை பேசுது” என்ற சொற்களை கேட்டிருப்போம். ஆனால் அதை பெரிதுபடுத்துவது இல்லை. அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. காரணம் எமக்கு அது ஒரு பொருட்டாக தெரிவதில்லை. இப்போது அரங்கத்துக்கு வந்துவிட்டது எனவே சிந்திக்கத்தான் வேண்டும். இந்த உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரியும் தனக்கான சந்ததியை உருவாக்கி நிலைப்படுத்துவதில் உறுதியாக இருக்கும். மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. திருமண பந்தத்தில் இணைந்து நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்று மனித சந்ததியின் தொடர்ச்சி மட்டுமன்றி தனது தனித்த சந்ததியின் தொடர்ச்சியையும் நிலைப்படுத்த விரும்புகிறான். அதனால்தான் தன் இனத்தில், தன் சொந்தத்தில் திருமணங்கள் அமைய வேண்டும் என்று சிந்திக்கின்றான். இதற்குள் விஞ்ஞானம் புகுந்து சொந்தத்துள் மணமுடித்தால் குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறக்கும், பிறத்தியில் கட்டினால் நல்ல பிள்ளைகள் பிறக்கும் என்று சொல்கிறது. அது தொடர்பாக இங்கு ஆராயவேண்டாம். ஆகவே திருமணம் என்பது சந்ததி நிலைப்படுத்தல் என்பது தீர்மானமாகி விட்டது.
சந்ததி நிலைப்படுத்தலுக்கு குழந்தைகளே அவசியம். ஆகவே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்தாலே குழந்தை பெறும் வாய்ப்புள்ளது. ஆனால் ஒத்த பாலினர் திருமணம் ஒருபோதும் ஒரு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கமாட்டாது. அது மட்டுமல்ல இந்த திருமணமூலம் குறித்த மனிதனின் தனித்த உரிமைமிக்க பரம்பரையை உருவாக்கமுடியாது. ஒரு மனிதனின் இயல்புகள் அவனின் உடற்கூற்றிலுள்ள நிறமூர்த்தம் என்கின்ற பாகத்தால் தீர்மாணிக்கப்படுகிறது. இந்த நிறமூர்த்தங்கள்தான் மனிதன் மட்டுமல்ல எந்த ஒரு உயிரியினதும் இயல்புகள் மட்டுமல்ல உடலமைப்பு, உடல் பாகங்களின் அமைப்பு, தனித்துவமான சிறப்பியல்புகள், பாலியல்புகள் போன்ற ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும். அந்தவகையில் மனிதனின் ஆண், பெண் வேறுபாடும், தன்மையும் நிறமூர்த்தம் எனப்படும் பரம்பரை அலகினாலே தீர்மானிக்கப்படும்.
மனிதனைப் பெறுத்தவரை அவன் ஒரு சமூகப்பிராணி. அதாவது கூடிவாழும் இயல்பு கொண்டவன். உறவுகள் இன்றி அல்லது பிறமனித தொடர்புகளின்றி அவனால் வாழ முடியாது. ஒருசமயம் நான் தனித்து வாழ்வேன் என்று கூறிக்கொண்டாலும் அது அவனால் முடியாத காரியம். இந்தவகையில் மனித நடத்தையானது நிறமூர்த்தங்களால் தீர்மானிக்கப்பட்டாலும், அவன் வாழும் சூழல் சார்ந்தும் மனித இயல்புகள் வெளிக்காட்டப்படும். எனவே ஒரு மனிதனின் நடைமுறை வாழ்கையானது பரம்பரையாலும் அவன் வாழும் சூழலாலும் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடைபெறுவதற்கு செலவழிக்கப்பட்ட காலத்திலும் குறுகிய காலத்தில் திருமண பந்த முறிவு வேண்டப்படுகிறது. அதாவது இந்த திருமணம் நமக்கு சரிவராது என்று முடிவெடுக்கிறார்கள். திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் இடையே என்ன கருத்து வேறுபாடுகள் எனக்கண்டறிந்து தீர்வு காண்பதிலும் அவர்களை பிரித்து அனுப்புவதில் அக்கறை காட்டுகின்றனர் வழக்கறிஞர்கள். அல்லும் பகலும் சிக்கல்பட்டு வாழ்வதிலும் பிரிந்து போய் விரும்பியபடி வாழட்டும் என்று சமாதானமும் சொல்கின்றனர். உண்மையில் குடும்ப அமைப்பு தேவையற்றது என்ற கருத்து இப்போது வலுப்பெற்று வருகிறது. இதற்கான காரணம் மக்களின் நல வாழ்வு மேம்படுத்தல் அல்ல மாறாக வியாபார உலகினை வெற்றிகரமாக்கல் என்பதுதான். அது எப்படி நடைபெறும் என்பது இக்கட்டுரையின் நோக்கல்ல எனவே எடுத்த பொருள் பற்றி தொடர்கிறேன்.
திருமண முறிவுகளுக்கு காரணம் தேடினால் அதிலிருந்து வெற்றிகரமான வாழ்க்கையை அமைக்க வழிகாணலாம். ஆனால் எங்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்க்க இன்னொருவரிடம் செல்ல அவர் தனக்கு தெரிந்த அல்லது தனக்குத் தெரிந்ததை பரிட்சிக்க எங்களை பயன்படுத்துவர். இதனை தெளிவாக புரிந்தபின்பே பிறரிடம் ஆலோசனை கேட்டல் வேண்டும்.
ஒத்த பாலினர் திருமண அதிகரிப்பிற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கமுடியும். இதில் முதன்மையானதும் முக்கியமானதும் ஆண்தன்மை அல்லது பெண்தன்மை குறைபாடு. ஆண்தன்மை என்பது ஒரு ஆணின் ஆண்மையை குறிக்கும். ஆண் என்பது பரம்பரை அலகினால் தீர்மானிக்கப்படுவது போல ஆண்தன்மைக்கும் பரம்பரைக்காரணிகளுக்கும் தொடர்புண்டு. இது பெண்தன்மைக்கும் பொருந்தும். பலமான ஆண்தன்மை உள்ள ஒரு ஆணால்தான் ஒரு பலமான பெண்தன்மை உள்ள பெண்ணை முழுமையான காதல் வாழ்விற்கு கொண்டுசெல்லமுடியும். குடும்பவாழ்வில் ஒருவீட்டில் வாழ்தல் மட்டுமல்ல ஒருமித்து வாழ்தல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் திருப்திகண்டும் வாழவேண்டும். இந்த நிலைமை என்று தடுமாறுகிறதோ அன்றே குடும்பம் கசக்க ஆரம்பிக்கும். பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் முக்கிய குறைபாடு தன்னை முதலில் பரீட்சிக்கமாட்டார்கள். மற்றவர்களின் குறைபாடுகள் பற்றியே யோசிப்பார்கள். ஆண்தன்மைக்குறைவு உள்ளவர்கள் பெண்களை பெரியளவில் விரும்பமாட்டார்கள். பெண்கள் உடல்ரீதியாக சந்திக்க பயப்படுவார்கள். இதுவே மாற்றுவழி தேட வைக்கிறது. இந்த மாற்றீடே ஆண்களை ஆண்களும், பெண்களை பெண்களும் தேடும்நிலைமைக்கு ஆளாகி ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் திருமணம் செய்யும் நிலைக்கு வருகின்றது.
இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் ஊன்றிக்கவனிக்க வேண்டும். ஒரு ஆணிடம் ஆண்தன்மை குறைகின்றது என்றால் பெண்தன்மை அதிகரிக்கிறது. இவ்வாறு பெண்தன்மை அதிகரிக்கும்போது ஆணாக இருக்கும் இவர்கள் தம்மிலும் ஆண்மை கூடிய ஆணைத்தான் அதிகம் விரும்புவர். அதேபோல பெண்தன்மை குறைகிறது என்றால் ஆண்தன்மை அதிகரிக்கிறது. ஆண்தன்மை அதிகரிக்கும்போது இவர்களும் பெண்தன்மையுடைய பெண்களைத்தான் அதிகம் விரும்புவர். தமிழர்களை பொறுத்தவரை இச்சிக்கல் மிகவும் குறைவு. அதற்கான பிரதான காரணம் தமிழர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் போது “சாண் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை” என்று ஊட்டி வளர்ப்பார்கள். அதேபோல பெண்பிள்ளைகளை நீ பெண்பிள்ளை என்று சொல்லியே வளர்ப்பார்கள். இந்த வளர்ப்புமுறை காரணமாக ஆண்களை பொறுத்தவரை ஆண் ஒருவன் நான் ஒரு ஆண் என்றும், பெண்களை பொறுத்தவரை பெண் ஒருத்தி நான் ஒரு பெண் என்றும் உறுதியான மனநிலையில் வளர்கின்றனர். இந்த உறுதி ஆண்களை எப்போதும் ஆண் என்றும் பெண்களை எப்போதும் பெண் என்றும் நம்பவைக்கிறது. இந்த நம்பிக்கை உள்ள எவரும் அவர் தமிழரோ, அன்றி தமிழர் அல்லாதவரோ ஆண் ஆணாகத்தான் இருப்பான், பெண் பெண்ணாகத்தான் இருப்பாள். இந்த மனநிலை உள்ளவர்கள் ஒருபோதும் ஆண் ஒரு ஆணையோ அல்லது பெண் ஒரு பெண்ணையோ விரும்பமாட்டார்கள். ஆண்கள் தங்கள் ஆண்மையையும் பெண்கள் தங்கள் பெண்மையையும் உறுதிப்படுத்தவே விரும்புவார்கள்.
பொதுவாக சமுக நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் பாடகர்கள், நடிகர்கள், நடனக்காரர்கள், விளையாட்டுவீரர்கள் போன்றோரை பின்பற்றுவோர் அவர்கள் செய்வதே சரி என்றும், அவற்றை பின்பற்றுவதும், அவர்களுக்காக போராடுவதும் சமமூகநலனுக்கு நல்லதல்ல. ஏன், எதற்கு என்ற சிந்தனையின்றி அவர்களை தொடர்வது எங்கள் மனிதகுலத்துக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும். இந்த கண்மூடித்தனமான செயற்பாடுகளின் நீடிப்பு சமூகத்தில் தவறான செயற்பாடுகள் அரங்கேற வழிவகுக்கும். சமூகநட்சத்திரங்களை இரசிக்கலாம், விரும்பலாம் ஆனால் அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று பின்பற்றுவது தவறு. இயற்கைக்கு மாறான எந்த ஒரு செயற்பாட்டையும் ஆதரிப்பது நல்லதல்ல. அது எம்மை மட்டுமல்ல எங்கள் எதிர்கால சந்ததியையும் பாதிக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். கருத்தில் கொள்ளவேண்டும். நான் தனித்து நிற்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை எனச்சிந்திக்காது என்னால் முடிந்த ஒன்று எனச்சிந்தித்து சரியானவற்றை ஆதரிப்போம். தவறானவற்றை எதிர்ப்போம். எதையும் நம்பிக்கையுடனும் சுயசிந்தனையுடனும் செய்வோம்.
பரமபுத்திரன்.