போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உளநலத்துறையைச் சேர்ந்த தயா. சோமசுந்தரம், புள்ளிவிபரங்கள் சிலவற்றை வெளியிட்ட சில நாட்களில், உலக சுகாதார நிறுவனத்தின் மற்றொரு அதிர்ச்சித்தகவல் வெளியாகியிருக்கிறது. 2014.8.4ஆம் திகதி உலக சுகாதார நிறுவனம் 172 நாடுகளின் புள்ளிவிபரங்களை ஆராய்ந்து வெளியிட்ட பட்டியலின்படி, தற்கொலை மரணங்களில் உலகில் நான்காவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலின் படி, உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு, 11.4 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.
…ஆனால் இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 28.8 பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகின்றது. ஆபிரிக்க நாடான கயானாவில் ஒரு இலட்சம் பேருக்கு 44.2பேரும், வட கொரியாவில், ஒரு இலட்சம் பேருக்கு 28.8 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக மேலும் உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது. இவ்விடயத்தில் தென்கொரியாவைப் பின்னுக்குத் தள்ளி வரும் ஆண்டு பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தைப் பிடித்துக் கொண்டாலும் ஆச்சரியமில்லை என்னும் அளவுக்கு தற்கொலைகளின் தீவிரம் காணப்படுகின்றது.
போருக்குப் பின்னர், அமைதிச் சூழலில் தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்வதாக தயா சோமசுந்தரத்தின் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாணத்தில் அவர் ஆய்வுக்காக திரட்டியுள்ள இந்த தரவுகள் போர்ச்சூழலில் இருந்த அமைதியும் ஒற்றுமையும் அங்குள்ள மக்களிடத்திலில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. போர்க்காலங்களில் தற்கொலைகள் குறைந்திருப்பதை அவரது தரவுகள் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளன.
….போர்க்காலங்களில், உயிர் அபாயங்கள், உணவுப்பற்றாக்குறை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், இராணுவத் தாக்குதல்கள், மருத்துவக் குறைபாடுகள், உயிர், உடல், சொத்து இழப்புக்கள், மனவிரக்தி போன்ற பல காரணங்கள் தற்கொலைத் தூண்டக் கூடிய பல காரணிகளாக இருந்த போதும் யாழ்ப்பாணத்தில் தற்கொலை மரணங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் அமைதிச்சூழலில், அத்தகைய நெருக்குவாரங்கள் முழுமையாகவே இல்லாத அல்லது ஓரளவுக்கேனும் முன்னேற்றமடைந்துள்ள சூழலில், ஒன்றில் மக்கள் மத்தியில் நிம்மதி, அமைதி என்பன இல்லாமல் போயுள்ளன அல்லது குறைந்து விட்டன என்பதே இங்கு குறித்துக் காட்டப்படும் முக்கிய கருத்தாகும்.
…குடும்பங்களுக்குள்ளேயே தனிமனித உறவுகள் சிதைந்து விட்டன. குடும்பங்களுக்கு வெளியே பகைமை அதிகரித்து விட்டன. போர்க்காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை இப்போது குடும்ப மட்டங்களிலாயினும் சமூக மட்டத்திலாயினும் குறைந்து விட்டது. இது தற்கொலைகள் அதிகரிப்புக்கு மிகவும் முக்கியமானதொரு காரணமாகும்.
…போர் தொடங்குவதற்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் 1980 ஆம் ஆண்டுகளில் ஒரு இலட்சம் பேருக்கு 35 பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்பட்டது. இந்திய இராணுவத்தின் வருகையின் போது 1987ஆம் ஆண்டளவில் போர் உக்கிரமடைந்த போது தற்கொலை வீதம் வீழ்ச்சியடைந்தது. பின்னர் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்தம் செய்யப்பட்டு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளை, 2004ம் ஆண்டு இது ஒரு இலட்சம் பேருக்கு 30 பேர் வரை உயர்ந்தது. பின்னர் 2006ம் ஆண்டு மீண்டும் போர் மூண்டதும் உக்கிரமாகப் போர்நடைபெற்ற போது ஒரு இலட்சத்துக்கு 15 பேர் என்று குறைந்திருந்தது. கடந்த 2009 ம் ஆண்டு போர் முடிவடைந்தததையடுத்து படிப்படியாக தற்கொலைகள் அதிகரித்து கடந்த ஆண்டில் அது 28 பேர் என்ற நிலையை எட்டிப் பிடித்திருப்பதாக தயா சோமசுந்தரம் அண்மையில் பி.பி.சி தமிழோசையிடம் கூறியிருந்தார்.
போர்க்காலத்தில் இருக்கும் கூட்டு ஒத்துழைப்பு மனப்பாங்கு, போரில்லாத காலங்களில் பொதுமக்களிடம் இல்லாது போவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் விபரித்திருந்தார். போருக்குள் வாழ்ந்த மக்கள் கடுமையாக அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். அவர்களுக்கு உரிய புனர் வாழ்வு அளிக்கப்படாமையும், தற்கொலைகள் அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
…1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்பாட்டுக்குப் பின்னர் சுமார் இரண்டரை மாதங்கள் வரை ஒரு தற்காலிக அமைதி நிலவியது. அந்த அமைதிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியான நாளிதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்று அமைதிக்கால உளவியல் வெறுமையை தெளிவாகப் படம் பிடித்திருந்தது. அந்தச் சிறுகதையின் தலைப்போ, எழுதியவரோ நினைவில் இல்லை. அந்தக் கதையின் மையப்பொருள் தான் முக்கியமானது. அமைதிக்காலத்தில் எந்தக் குண்டுச்சத்தமும் கேட்காததால், குடும்பத்தலைவர் ஒருவர் வெறித்துப் போயிருப்;பார். அதற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் மனைவி பிள்ளைகள் திணறிக்கொண்டிருப்பார்;. அப்படியான சூழலில் ஒரு குண்டுச் சத்தம் கேட்க, அந்தக்குடும்பத்தலைவர் பழையபடி சிரித்துப்பேசத் தொடங்குகிறார். இது தான் அந்தக் கதையின் கருப்பொருள்.
…பல ஆண்டுகளாகவே யாழ்ப்பாண மக்களின் வாழ்வுடன் குண்டுச்சத்தங்கள் அன்றாடக் காரியமாக ஒன்றித்துப் போயிருந்தன. அவ்வவ்போது ஏற்படும் அமைதிக்காலத்தில் அது இல்லாமல் போகும் போது மக்களிடையே ஒரு வெறுமை நிலை உணரப்பட்டது. அது போலத்தான், போர்க்காலத்தில் ஒன்றித்துப்போயிருந்த சமூக உணர்வும் பொறுப்பும் கடமையும் அமைதிக்காலத்தில் சிதைக்கப்பட்டு விட்டன. தனிமனித நலன்களே முதன்மைப்படுத்தப்படும் நிலையில் அது தற்கொலைக்குக் காரணமாகிறது.
…வடக்கில் போருக்குப் பின்னர், தற்கொலைகள் மட்டும் அதிகரிக்கவில்லை. கொலைகளும் கூட அதிகரித்துள்ளன. அதுவும் மோசமான – வன்மம் தீர்க்கும் கொலைகள் அதிகளவில் நிகழ்வதைக் காண முடிகிறது. இதுவும் போருக்குப் பிந்திய, ஒரு விளைவுதான், போர்க்காலத்தில் இருந்து வந்த ஒரு சமூக கட்டுப்பாடு இப்போது உடைத்தெறியப்பட்டுள்ளது. யார் எதையும் செய்யலாம் என்பது போன்ற நிலை, இத்தகைய குற்றங்களுக்குத் தூண்டுதலாகி விடுகின்றன.
…போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் தமிழ்ச் சமூகத்தின் கொடூர எண்ணங்கள் அதிகரித்துள்ளதை இத்தகைய குற்றங்கள் நிரூபிக்கின்றன. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமானது. அது தனியொரு தரப்பினால் முடியாதது. அரசாங்கம், அரச சார்பற்ற அமைப்புக்கள் மருத்துவத்துறை என்று எல்லாத் தரப்புகளும் இணைந்து உரிய புனர்வாழ்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். இந்தப் புனர்வாழ்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படாது போனால், வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு வெளியார் எவரும் வரவேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும்.
தொடரும்….