அந்த அழகிய தேவதையின் பெயர் மாலதி… குனிந்த தலை நிமிராமல் கல்லூரிக்கு செல்லும் அவளது தலையில் பூ இல்லாத நாளே இருக்காது.
மிகவும் திறமைசாலியான இவர் படிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆண்கள் மட்டுமின்றி பெண்களே இவளுடன் பேச வேண்டும் என்று ஏங்கும் அளவிற்கு மிகவும் அழகானவள்.
கல்லூரி விழாவில் இவளின் நடனக் கச்சேரி நடக்க உள்ளது. திடீரென வேலை செய்யவில்லை இவள் நடனமாடும் பாட்டின் சி.டி… என்ன செய்வது என்று திகைத்து நின்றாள்…
அத்தருணத்தில் அவளுக்கு கை கொடுத்தவன் பெயர் தான் திலீப்… திறமையான பாடகன்… இவளின் நிலையினை அறிந்த அவன் தனது நண்பர்களுடன் பாடி இவளது நடனத்தினை அரங்கேற்றினான்.
அதன் பின்பு இருவரும் நண்பர்களானார்கள். எப்பொழுதும் பாட்டு பாடுவதில் மட்டுமே ஆர்வம் கொண்ட திலீப் படிப்பில் மட்டமாக இருந்தான். இது மாலதிக்கு பிடிக்கவில்லை… கல்லூரிக்கு வந்து படிக்காமல் இருப்பது தவறு… பாடகன் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் படிப்பிலும் கவனம் செலுத்து என்றாள்… அவளது பேச்சுக்கு திலீப் எப்பொழுதும் மறுபேச்சு பேச மாட்டான்….
மாலதியின் பேச்சைக் கேட்டு நன்றாக படித்தான்… இருவருக்கு ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தது. எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் காதலர்கள் ஆனார்கள்.
காதலிக்கும் பொழுது திலீப் எனது உயிர் உன்னிடத்தில் உள்ளது… உனது உயிர் என்னிடத்தில் உள்ளது என்று அடிக்கடி கூறுவர். திலீப்பின் இந்த பேச்சு மாலதிக்கு அவன் மேல் இன்னும் காதலை அதிகப்படுத்தியது.
திடீரென ஒரு நாள் மாலதியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். மாலதிக்கு தவிர மற்ற எல்லோருக்கும் மாப்பிள்ளை பிடித்துவிட்டது. எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவளது வீட்டார் திருமணத்தை நிறுத்தவில்லை.
வேறு வழியின்றி திலீபனின் காதலை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அலுவலக வேலையிலிருந்து நின்றுவிட்டாள். திலீப்பிற்கு கடிதம் எழுதினாள்… அதில் என்னை மறந்துவிடு… உன் நல்ல குணத்திற்கு என்னை விட மிக நல்ல பெண் கிடைப்பாள்… பாடகனாகும் குறிக்கோளை நோக்கிச் செல் என்று எழுதியிருந்தார்.
மாப்பிள்ளை பார்த்த இரண்டு தினத்தில் நிச்சயதார்த்தம், மூன்று மாதத்தில் திருமணம் என்று நாட்கள் ஓடியது. ஆரம்பத்தில் எப்பொழுதும் சோகமாகவும், அழுகையுடனும் இருந்த மாலதி கவலையை மறந்து கல்யாண கலை வந்தது அவளது முகத்தில்.
ஆனால் அவளது காதலனை மட்டும் மறக்க முடியவில்லை. பிடிக்காமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தார். இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் இவளது காதலனிடம் இருந்து ஒரு பரிசு வந்தது.
அது என்னவென்று திறந்து பார்க்க மனமின்றி அவனது பெயரை மட்டும் அனைத்துக் கொண்டு முத்தமிட்ட அவள், திலீப் மிகவும் நல்லவன் தவறாக எதுவும் அனுப்பியிருக்க மாட்டான் என்று அதனை பிரிக்காமலே வைத்துவிட்டார்.
பெற்றோருக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு, வீட்டில் அனைவரையும் எதிர்த்து அக்குழந்தைக்கு தனது காதலனின் பெயரை வைத்தாள். அவளால் தனது கணவனை மட்டும் காதலிக்க முடியவில்லை. நாட்கள் கடந்தது இருவரும் விவாகரத்து செய்ய முன்வந்தனர். ஆனால் குடும்பத்தினர் குழந்தையின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
சரி என்று பல வருடங்கள் கழிந்தது. மகன் திருமண வயதை எட்டினான். காதலித்த பெண்ணையே மகனுக்கு திருமணம் வைக்க தயாரானது மாலதியின் குடும்பம். திருமண வரவேற்பு பலகையில் திலீப் என்ற பெயரை கண்டதும் திலீப்பிற்கே திருமணம் நடக்க போவது மாதிரி கற்பனை செய்து கொண்டாள்.. மணமேடை விருந்தினர்கள் அனைவரையும் காணும் போது தனது திருமண நியாபகம் வந்தது…!
திருமண மண்டபத்தில் கணவன் ஒருபுறம் இத்தனை ஆண்டுகள் தனது மனைவிக்கு தன் மேல் காதல் வரவில்லையே என்றும் அவரது உறவினர்கள் இன்னும் இவர்கள் இருவரும் ஒன்று சேரவில்லையே என்று கவலையில் இருந்தனர்.
ஒருபுறம் தனது காதலனுடன் சேர முடியவில்லை என்ற கவலையில் இருந்த மாலதி தனது வீட்டிற்கு ஓடினாள். மனைவியை பின் தொடர்ந்து கணவனும் வந்தான். மாலதி காதலன் அன்று கொடுத்த பரிசை எடுத்தாள். பிரித்துப் பார்ப்பதற்கு முன்பு ஆயிரம் முத்தத்தை கொடுத்தாள்.
காதலன் கொடுத்த பரிசை திறந்து பார்க்க சென்ற போது, அவளை ஏதோ ஒன்று தடுத்தது…! உடனே வேகமாக சென்று காதலிக்கும் போது திலீப் தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கி கொடுத்த புடவையை அணிந்து கொண்டாள்.. திலீப்பிற்கு பிடித்த அந்த ஜிமிக்கி கம்மல், கலகலவென சினுங்கும் கண்ணாடி வளையல் எல்லாம் அணிந்து கொண்டாள்…!
பின்பு அந்த பரிசை திறந்து பார்த்தார் மாலதி. அதில் மாலதிக்கும் அவரது வருங்கால கணவருக்கு என இரண்டு மோதிரமும், ஒரு கடிதமும் இருந்தது. அதனை அவதானித்த மாலதி கீழே சாய்ந்தாள். மனைவியை தேடி வந்த கணவர் மாலதி கீழே சாய்ந்து கிடப்பதை பார்த்து அவளை தூக்கினான்… ஆனால் மாலதி ஏற்கெனவே இறந்து விட்டாள்…
ஆம் அப்பொழுது தான் மாலதியின் கணவர் திலீப் எழுதிய கடிதத்தை பிரித்துப் பார்த்தான்… அதில் நீ நன்றாக இரு என்றும் இன்னொருவருக்கு மனைவியாகப் போகும் உனது உயிர் என்னிடத்தில் இருப்பது சரியல்ல. அதனால் உயிரை உன்னிடத்தில் கொடுத்துவிட நான் இறந்து போகிறேன் என்று இரத்தத்தில் எழுதியிருந்தான் திலீப்…. இதனை படித்த மாலதியின் கணவர் கண்ணீர் விட்டார்!…