அம்மா…
ஒரு நிமிடம் உன்
கால்களை நீட்டி வை
எனக்கு உன் மடி சாய்ந்து
விழி மலர வேண்டும்
என்று ஆசை துளிர்க்கிறது
தூரங்கள் பல ஆயிரம்
கடந்து நாம் எங்கெங்கோ
வாழ்ந்தாலும்
கனவில் வந்து உன் மடியில்
தூங்க மனம் வேண்டுகிறது
நீயும் நானும் ஒன்றாக
வாழ்ந்த காலங்களை விட
சிங்கங்களின் பாச்சல்களை
எதிர்த்து நின்ற
புலிக் குகையில் உன்னை
சுகமாகத் தூங்க வைத்து விட்டு
உன்னையும் உன்னைப் போன்றதாய்களின்
இருப்பையும் காக்கும் பணியில்
நான் காடுகளையும் பற்றைகளையும்
மேடுகளையும் மண் குழிகளையும்
வீடாக கொண்டு வாழ்ந்த
காலங்களே அதிகம்
ஈர்பத்து ஆண்டுகளை
இவ்வாறு தானே கடந்து வந்தோம்
நீ அறிவாயா அம்மா
அப்போதெல்லாம் உன் நினைவுகளை
நான் சுமந்து திரிந்தது குறைவு
ஈழத் தாயவளை எண்ணும்
பொழுதுகளே அதிகம்
எப்போதோ ஓர்நாள்
எட்டிப்பார்க்கும் உன்
மடி வாசம் உணர
என் குறிப்புப் புத்தகத்துக்குள்
தூங்கும் உன் புகைப்படத்தை
ரசிப்பதிலே கரைந்து போகும்
அம்மா…
துள்ளித் திரிந்த பள்ளிப் பருவமதில்
எனக்கும் என்னவளுக்கும்
இடையில் அள்ளி அணைத்த காதல்
நெஞ்சமர்ந்து திமிறிய போது
கண்மலர்ந்து கடிவாளம் இட்ட
மனசையும் வயசையும்
எந்த வகைக்குள் அடக்க?
எனக்கும் காதல் துளிர்த்தது
கண்கள் பட படக்க
அவளின் இதயமும் என்னுள் பரிமாறப்பட்டது
ஆனாலும்
ஒட்டிய தூசி போல
புறங்கையால்
தட்டி அடக்கி நிமிர்ந்த
அந்தப் பொழுதுகளை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
அப்போதெல்லாம்
வெள்ளை சீருடை தழுவிய
உடலை தொட்டுப் பார்க்க
கூச்சமாக இருப்பதாகவே
உன்னிடம் பலமுறை கூறுவேன்.
கண்முன்னே நிறைவேறா
கனவாகி கடந்தது ஈழ
விடிவெள்ளியின் வரியுடை
என் உடலைத் தழுவும்
நாளுக்காக நான் காத்திருப்பதாக
தினமும் காதில் கிசுகிசுப்பேன்
நீ என்னிடம் படிக்க வேண்டிய நியத்தை
உரைக்கும் போதெல்லாம்
படையகத் தேவையை உணர்த்தி சிரிப்பேன்
நீயும் புன்னகை ஒன்றுக்குள்
என்னை அனுமதித்து கடந்து விடுவாய்
ஈரொன்பது ஆண்டுகள்
வெறுமையாய் கடந்து
நிறுவ வேண்டிய
வீரத்தின் அடையாளத்தை
உடலில் போட்டுக் கொண்டு
நெஞ்சில் சுமந்தெழுந்த
கணம் ஒன்றில் நான்
புதிதாய் பூத்த பூக்களின்
குளிர்மையை நெஞ்சில்
சுமந்ததை யாரும் அறியார்
ஆனால் உனக்கு மட்டும்
என் எண்ணங்களின் வண்ணம் புரியும்
அதனாலே புன்னகை ஒன்றை
எனக்காக விட்டுச் செல்வாய்
எனக்கு புயல், மழை
வெய்யில் பனி எதுவும்
பயம் காட்டியதில்லை
களமுனை இடியையையும்
மின்னலையும் விரும்பியே
என் உணவாக்கி மகிழ்ந்தேன்
பச்சை நீலம் என நீண்டு
கறுத்த வரியுடுத்தி
உரிமைக்காக நான் நிமிர்ந்த
அந்த கணப் பொழுது
என் உடலில் அறியப்படாத
உணர்வுகளின் தூண்டல்கள்
வீரமாக நிமிர்ந்ததையும்
யாரும் அறியார்.
நான் விரும்பிய வரி உடையை
வரிக்காத தருணங்களை
நான் வெறுத்தே நின்றேன்
“சாகும் போது கறுப்பு வரியோட சாகனும்”
என் மனம் வேண்டும்.
அதையே எங்களில் பலரும்
விரும்பி நின்றனர்.
வரி உடுத்தி கருவி எடுத்து
நான் படை நடத்தி
சென்ற போதெல்லாம்
படை நடுங்கி ஒடுங்கி கிடந்த
வீரத்தின் விளைநில விளைச்சலை
மறக்க முடியாத பதிவாக்கியது
என் தேசம்
பள்ளிக்கு சென்றவரை,
படுக்கையில் கிடந்தவரை,
பாலகரை, பாவையரை
பாசமான வேர்களை
துள்ளி வந்து பகை அழித்தொழித்த
வேதனையின் உச்சத்தையும்
என் தேசமே பதிவாக்கி கொண்டதம்மா.
இப்போதெல்லாம் என்னுள் வீரம் இல்லை
நிமிர்ந்தெழ என் முதுகெலும்பில்
நிமிர்வும் இல்லை
அத்தனையையும் முள்ளிவாய்க்காலில்
புதைத்துவிட்டு
வெற்றுடம்போடே தப்பி வந்தேன்
என் உடலில் மானம் மறைக்க
ஆதி மனிதனின் இலை தளைகளைப்
போல் துண்டொன்று தொங்குகிறது.
பல லட்சம் தாண்டிய இரும்பு
சிதறல்களுக்கு கூட
என்னை உண்டு விட மனசில்லாது
போன கொடுமையின் நினைவில்
இப்போதெல்லாம்
பச்சை இறைச்சியை
நெருப்பில் வாட்டாது உண்பதைப்
போலவே உணர்கிறேன்.
வெண்பனிகள் பூத்துக் கிடக்கும்
கம்பளியுடை நாட்டில்
காந்தள் மலர்களின்
நினைவில் ஒற்றை போர்வைக்குள்
சுருண்டு கிடக்கும்
என்னை தட்டி எழுப்பிய உன்
மடிவாசம் கண்களை இருட்ட வைத்து
வேடிக்கை பார்க்கிறதம்மா
எதற்கும் உன் காலை நீட்டியே
வைத்துக் கொள்
கற்பனையில் உன் மடி மீது
துயல்கிறேன் தினமும்….
கவிமகன். இ
14.12.2017