மனது தொலைக்குமா…? தொடர் 02- கவிமகன்.
“அக்கா… ” குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்கிறாள் அந்த மருத்துவ போராளி. அவள் கரங்கள் ஒரு குழந்தையின் குருதி மண்டலத்தில் இருந்து வெளியேறும் பெறுமதிமிக்க குருதியை தடுத்து குழந்தைக்கான உயிர் மீட்கும் செயற்பாட்டில் வேகமெடுத்திருந்தன. அந்த நேரத்தில் மருத்துவ உதவியாளர் “அக்கா டொக்டர்……. கூப்பிடுகிறார்.” ( சில காரணங்களுக்காக பெயர்களை தவிர்க்கின்றேன்) அந்த குழந்தைக்கான சிகிச்சையை முடித்து நிமிர்ந்த போது ஒரு உயிர் காத்த உன்னத பணியில் தலைவர் எம்மை வளர்த்ததை நன்றியுணர்வோடு நினைத்து கொள்கிறாள்.
மாசித்திங்களின் இறுதி நாட்களில் ஒரு நாள் வள்ளிபுனம் பகுதியில்
சிகிச்சை கூடம் என்ற பெயரில் நான்கு பக்கமும் இழுத்துக் கட்டப்பட்டிருந்த தறப்பாள் கொட்டகையை விட்டு வெளி வர முயன்ற போது சட சடத்த Pk கனரகத் துப்பாக்கி ரவைகள் தறப்பாளை கிழித்து சென்றன. பாய்ந்து வந்த ரவைகள் இவளையும் தாக்கியிருக்கும் ஆனால் பாதுகாப்பு நிலையில் தன்னை காத்துக் கொண்டு தன்னை அழைத்த அவளது மருத்துவ நண்பனை காண செல்கிறாள்.
அவன் ஒரே பிரிவில் பணியாற்றும் போராளி என்பதை விட மிக நெருக்கமான குடும்ப நண்பன் அவனது மனைவியும் இவளும் நெருங்கிய தோழிகள். இப்படியான உறவு அவர்களுக்கு இருந்தாலும் ஏதோ ஒரு காயத்துக்கான சிகிச்சை தொடர்பான உதவி கோரலாகவே அவனது அழைப்பு இருக்கும் என்று அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள்.
தறப்பாள் கொட்டிலை விட்டு வெளியில் வந்தவள் அவனை கண்ட போது ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டது என்பதை புரிந்து கொண்டாள். எத்தனையோ காயங்கள் சத்திர சிகிச்சைகள் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் என்றும் இரத்தமும் தசைத் துண்டுகளும் என்று பயணித்த அவன் எதைக்கண்டும் கலங்காத நெஞ்சம் கொண்டவன். ஆனால் கண்கள் கலங்கி குரல் வெளியில் வர மறுத்து தனது கல் நெஞ்சையும் கரைக்கும் ஏதோ ஒன்று நடந்து விட்டதை அவன் வெளிக்காட்டிக் கொண்டிருந்தான் மருத்துவ போராளியாய் அவன் இதுவரை பயணித்த போது ஒரு நாள் கூட எதற்கும் தளர்ந்ததை அவள் கண்டதில்லை.
“என்ன நடந்தது…? ஏன் அழுகிறாய்…? அவளது வினாவுக்கு பதில் எதுவும் அவனால் கூற முடியவில்லை. அவன் நடந்து சென்று ஒரு மரத்தின் கீழ் கிடத்தப்பட்டிருந்த உயிரற்ற உடலங்கள் முன்னே நின்றான். அங்கே பல பத்து உடலங்கள், தசைகள் பிய்ந்து, குருதி மண்ணோடு கலந்து சேறாகி, உயிரற்று கிடந்தன. அவறுக்குள். ஒன்றின் முன்னே போய் நின்றவன் விம்மத்தொடங்கியிருந்தான். அருகில் சென்றாள் அவள்.
அவனின் மனைவி, அவளின் அன்புத்தோழி, பள்ளியில் சிறந்த ஆசிரியை, பேச்சற்று மூச்சற்று, வயிற்றுப்பகுதி பிரிந்து பெரும் காயத்தோடு கிடந்தாள். விழிகள் கலங்கியது கத்தி அழ வேண்டும் போல் உணர்வு எழுந்தது. ஆனால் தான் உடைந்து போக கூடாது. நான் உடைந்தால் அவனை ஆற்றுகைப்படுத்த முடியாது. எமது பணி இப்போது எங்கள் தேசத்துக்கு அதி முக்கியமானது. மருந்துகள் இன்றி உபகரணங்கள் இன்றி எமது மக்களின் உயிர் காக்கும் தன்நம்பிக்கை ஒன்றை ஆயுதமாக்கி பயணிக்கும் நாம் இதையும் கடந்து செல்லவேண்டிய தேவையை அவள் உணர்ந்தாள். அவனுக்கும் உணர வைக்க முயன்றான்.
ஏனடா தியேட்டருக்கு எடுத்து செய்திருக்கலாமல்ல. கேட்க தோன்றிய போதே அவன் பதில் சொன்னான். வரும்போதே உயிர் இல்லையாம் அக்கா… கொண்டு வந்தவ பிள்ளையள் வந்து என்னை கூப்பிட்டவ ஒடி வந்து பார்த்த போதே உயிர் போய்ட்டுது. அவனை தேற்ற முடியவில்லை… அழுது கொண்டிருந்த அவனிடம் கூற வார்த்தைகள் இன்றி தவிக்கிறாள் அவள்.
அவனின் துணைவிக்கான இறுதி நிகழ்வுகள் செய்ய கூட இடம் இல்லை உயிரற்ற உடலங்களை ஏற்றி கொண்டு செல்ல வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தை பார்த்துக் கொண்டிருந்த அவனிடம் என்ன கூற முடியும்? எங்கோ கொண்டு சென்று புதைத்துவிடவோ எரித்துவிடவோ போகிறார்கள்.
அவன் செய்வதறியாது பார்த்துக் கொண்டு நிற்க, காயங்கள் வந்திருப்பதற்கான அழைப்பு. தங்கள் மனதின் வலிகளை மறக்க வேண்டிய நியம். தேசத்துக்கான தேவை, தலைவனின் எதிர்பார்ப்பு, மருத்துவ அத்தனையும் வலிகளை சுமந்திருந்த அவளை பணிக்காக கொண்டு செல்கிறது. துவண்டிருந்த மனசு வலியோடும் தனது கடமைக்காக தயாராகி இருக்கிறது. அவள் மீண்டும் கரத்தினில் டெதஸ்கோப்பை எடுத்துக் கொண்டு தொடர்கிறாள்….