சிமெந்துக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 50 ஏக்கர் காணியைப் பெற்று காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இந்தத் துறைமுகத்திலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வது என்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.