ஜேர்மனியின் குறித்த பகுதி ஒன்றில் விசேட மக்கள் சந்திப்பு ஒன்றுக்காக, பிரித்தானியாவில் இருந்து தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த எங்கள் உரிமைக் குரலுக்குரியவரும் அங்கிள் என்று அன்பாக போராளிகளால் அழைக்கப்பட்டு உரிமை கோரப்பட்டவரும் தமிழீழத்துக்காக உலகெங்கும் தனது குரலை உரிமையோடு ஒரிக்க விட்டவருமான அன்டன் பாலசிங்கம் அவர்களும் தாயகத்தில் இருந்து புன்னகைக்குச் சொந்தக்காறனாக இருந்து போராளிகள் மக்கள் என்ற பாகுபாடின்றி தாயகம், புலம்பெயர் தேசம் என்ற வேறுபாடின்றி தமிழீழம், இலங்கை, அனைத்துலகம் என்ற பிரிவின்றி எங்கும் புன்னகையால் கொள்ளை கொண்ட அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களும் வருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருந்தன.
குறித்த நகரத்தில் ஏற்பாட்டாளராக இருந்தவருக்கு பிரித்தானியாவில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. “எப்பிடியடாப்பா ஏற்பாடுகள் எல்லாம் முடிஞ்சுதே? சனம் என்ன மாதிரி…?” அண்ண சனம் ஆர்வமா இருக்கு உங்களையும் தமிழ்செல்வன் அண்ணையையும் பார்க்க வேணும் என்று ஆவலாக இருக்குதுகள். கடுமையான எதிர்பார்ப்போட உங்களுக்காக காத்திருக்குதுகள் அண்ண. “எங்கட சனம் எப்பிடி என்று சொல்லவா வேணும் அண்ண? நகரப் பொறுப்பாளர் மிக மகிழ்வோடு கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பாலா அங்கிள்,
” சரியடாப்பா நாங்கள் சரியான நேரத்துக்கு விமானநிலையம் வந்திடுவம் அங்க ஒரு கார் அனுப்பு சரியா? தொலைபேசி துண்டிக்கப்பட இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பாட்டாளர் சந்தோசமாக இன்னொரு தகவலை குறிப்பிடுகிறார். அண்ண உங்கள விமானநிலையத்தில் இருந்து கூட்டி வருவதற்கு ஒழுங்கு செய்திட்டன் அண்ண. விமான நிலையத்தில இருந்து உயர் ரக கார் ஒன்று உங்களை ஏற்றி வரும் அதற்கு பிறகு நிகழ்விடத்தில், மக்கள் இரு பக்கமும் சுமார் 200 மீட்டர் வரை நின்று உங்களை வரவேற்பார்கள். வாசல்வரை கார் கொண்டு வரும் அதன் பின் உங்களை பூமாலைகள் அணிவித்து ஆராத்தியுடன் உள்ளே அழைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இருக்கு அண்ண… தொடர்கிறார் ஏற்பாட்டாளார்.
அந்த குரலை இடைமறித்த மறுபக்கம் “நிறுத்து… நாங்கள் என்ன களியாட்ட நிகழ்வுக்கா வருகிறோம்…? நாங்க போராளிகளா அல்லது கூத்தாடிகளா? அல்லது அரச தலைவர்களா…? ஆடம்பரம் காட்டுறதுக்கு? தாயகத்தில எங்கட மக்கள் என்ன நிலையில வாழுகினம் என்றத மறந்திட்டியா…? ஜேர்மனிக்கு எங்கட மக்கள பார்க்கத்தான் நாங்கள் வாறம். பொழுது போக்குக்கல்ல பூ மாலையும் வரவேற்பும் ஏற்றுக்கொள்ள வரல்ல. புரிஞ்சு நடந்துக்க. சாதாரண கார் ஒன்றை அனுப்பு… மக்களை மண்டபத்தை விட்டு வெளியில் கொண்டுவர வேணாம் கார் கார்ப்பார்க்கிங்ல நிக்கட்டும் அதில இருந்து நாங்கள் நடந்தே வருவோம் இதை விட்டு எதாவது ஆடம்பரம் காட்டாத மீறினா நடக்குறதே வேற. அந்த குரலின் அதிகாரத்திலும் கட்டளையின் வேகத்திலும் இந்தப்பக்கம் அதிர்ந்து கிடந்தது. “சரி அண்ண” பதில் அலைபேசி வழி சென்றடையும் முன்னே தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
சொகுசான வாழ்க்கையை பல உறவுகள் தேடிக் கொண்டிருந்த போது, புலம்பெயர் நாட்டில் மேன்நாட்டு வாழ்க்கைக்குள்ளும் தன்னைத் தொலைத்து விடாத விடுதலைப் போராளியாக வாழ்ந்து வந்தவர் எங்களின் தேசக் குரல் அன்டன் பாலசிங்கம் அங்கிள்…
இவ்வாறான ஓர்மமும் உறுதியும் கொண்ட பாலா அங்கிள் வன்னியில் இருந்த காலத்தில் அதாவது 1999 ஆம் ஆண்டு உடல்நிலையில் பயங்கர பின்னடைவை சந்தித்தார். தமிழீழ மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். மூத்த இராணுவ மருத்துவர் ஒருவரின் முழுமையான பொறுப்பில் பாலா அங்கிள் படுக்கையில் மருத்துவ சிகிச்சைக்காக இருக்கிறார். அவர் கூட அடேல் அன்டியும் பராமரிப்புக்காக இருக்கிறார். பூரண மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகம் செயலிழந்து போகிறது. உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழீழ இராணுவ மருத்துவர்கள் அவரது சிறுநீரை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதாவது சிறுநீரில் உள்ள பொட்டாசியம் (Potassium) மற்றும் யூரியா (urea) ஆகியவற்றின் அளவுகளை சரியாக கணித்துக்கொள்ளும் பரிசோதனை செய்ய வேண்டும் (Urine Analyze ) ஆனால் அதற்கான எந்த வசதிகளும் வன்னியில் அப்போது இருக்கவில்லை. (Analyzers) என்ற சாதனம் எம்மிடம் இல்லை அதனால் கொழும்புக்கு சிறுநீரை அனுப்பி பரிசோதிக்க வேண்டிய சூழல் வருகிறது.
தினமும் செல்லும் அவசர ஊர்தியில் (Ambulance) அவரது சிறுநீர் வேறு ஒருவரது பெயரோடும் அவரின் வயதோடும் அனுப்பப்படும். நான்கு நாட்கள் கழிந்த நிலையில் கிடைக்கும் பெறுபேறுக்காக (Report) மருத்துவர்கள் காத்திருப்பார்கள். சாதாரணமாக ஒவ்வொரு 10 மணித்தியாலத்துக்கு ஒரு முறை பரிசோதித்து பெறுபேற்றை (Report) ஆராய வேண்டிய நிலையில் இருக்கும் சிறுநீர் பெறுபேறு நான்கு நாட்களுக்கு ஒருமுறையே ஆராயப்பட்டது.
தேசியத்தலைவரை தம்பி என்று உரிமையோடு அழைக்கும் அந்த குரல் வன்னியில் ஓய்ந்து போடுமோ என்ற அச்சம் எழுந்த போதெல்லாம் தலைவருக்கு விடுதலைப்புலிகளின் மூத்த இராணுவ மருத்துவர் நம்பிக்கை கொடுத்தார். “அண்ண பாலா அண்ணைக்கு ஒன்றும் ஆகாது ஆனாலும் நாங்கள் லண்டனுக்கு அனுப்புறது நல்லது அண்ண… ” மருத்துவரின் நம்பிக்கையான வார்த்தைகளுக்குள் இருந்து மறு தெரிவு ஒன்றும் வெளி வந்தது. லண்டனுக்கு அனுப்பப்பட்டால் நிட்சயமாக அவரின் உடல்நலம் சீராகும் என்ற நம்பிக்கையை மருத்துவர் விதைத்தார். தலைவருக்கும் அதுவே சிறந்த தெரிவாக இருந்தது.
அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணைக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அண்ணை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக (ICRC) அன்றைய சிங்கள அரச தலைவராக இருந்த சந்திரிக்கா குமாரதுங்காவுக்கு தொடர்பினை ஏற்படுத்துகிறார். பாலா அங்கிளின் உடல்நிலையை தெரியப்படுத்தி அவசரமாக பயண வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதாவது கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக பிரித்தானியாவுக்கு அவரை அனுப்புவதற்கான அனுமதி கேட்கப்படுகிறது.
கேட்கப்பட்ட மறு நிமிடமே சந்திரிக்கா பாலா அங்கிளை கட்டுநாயக்கா ஊடாக லண்டனுக்கு பயணம் செய்ய தான் அனுமதிப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறுகிறார். தன்னைப் பொறுத்தவரை அவர் ஆயுதம் ஏந்த வில்லை அதை விட உலக அரசியல் ஒழுங்குகள் இந்த நடவடிக்கை மூலம் எந்த கெடுதலையும் பெறாது என்ற எண்ணம் சந்திரிக்காவுக்கு இருந்திருக்கலாம். தலை சிறந்த உலக அரசியல் வல்லுனர்களுக்கு நிகரான பெரும் அரசியலாளன் என்ற உண்மையை சந்திரிக்கா உணர்ந்திருக்கலாம் அதனால் உடனடியாக பணயத்துக்கு அனுமதி தருவதாக கூறுகிறார்.
ஆனால் உடனடியாக அனுமதி தருவதாக சம்மதித்த அம்மையார் 3 அல்லது 4 நாட்கள் கடந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாது காலம் நகர்த்தினார். பின் அனுமதிக்க முடியாது என்று மறுக்கிறார். அப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் எதற்காக மறுக்கிறீர்கள்? என்று காரணம் கேட்கப்பட்டது. அப்போது தனக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்றும் தனது இராணுவ படை அதிகாரிகள் இது தொடர்பாக அதிர்ப்தி தெரிவிப்பதாகவும் கூறுகிறார். ஆனால் மீண்ணும் மீண்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயன்று கொண்டிருக்கிறது. அரசியல்துறையும் முயற்சியை கைவிடாது முயல்கிறது. ஆனால் இனவாத அரசும் அதன் துவேசம் பிடித்த இராணுவ அதிகாரமும் அனுமதியை இறுதிவரை தரவே இல்லை.
எம் மூத்த மருத்துவர் தொடக்கம் இராணுவ மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் தொடக்கம் நெருங்கி இருந்த போராளிகள் வரை அனைவருக்கும் ஏமாற்றம். பாலா அங்கிளை நாம் இழந்து விடுவோமோ என்ற ஏக்கம். ஆனாலும் தலைவர் இதை எதிர்பார்த்தே இருந்தார். அதனால் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணைக்கு பாலா அங்கிளை பிரித்தானியாவுக்கு கடல் மூலம் கொண்டு செல்வது தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க கட்டளையை ஏற்கனவே இட்டிருந்தார்.
ஒரு பக்கம் அரசியல்துறை முயன்று கொண்டிருக்க மறுபக்கம் கடற்புலிகளின் அணிகள் பாலா அங்கிளை பிரித்தானிய மண்ணுக்கு அழைத்துச் செல்ல தயாராகியது. சிங்கள தேசம் விடுதலைப்புலிகள் தமது அரசியல் ஞானியை இழக்கப் போகிறார்கள் என்று கணக்குப் போட்டுக் கொண்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருக்காத ஒன்று கடல் மூலம் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் பாலா அங்கிள் வன்னியிலே இருப்பதாக கனவு கண்டு கொண்டிருக்க கடல் நீரை கிழித்துக் கொண்டு கப்பல் ஒன்று அவரை பிரித்தானிய மண்ணுக்கு கொண்டு சென்றது.
இதற்காக சூசை அண்ண நேரடியாக கடலில் நின்றார். மருத்துவப் போராளி ஒருவரோடு பாதுகாப்புப் படகுகள் நீரை கிழித்து செல்ல பாலா அண்ண சிறிய படகின் மூலமாக சர்வதேச கடல் எல்லைக்கு நகர்த்தப்படுகிறார். பின் அங்கே நங்கூரமிடப்பட்டிருந்த சர்வதேச கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு விநியோக பிரிவு போராளிகளால் பாலா அங்கிள் தன் துணைவியோடு பாதுகாப்பாக பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறார். இந்த நிலையில் தன் கணவனை தனது குழந்தை போல் தாங்கி நின்ற திருமதி அடேல் பாலசிங்கம் அன்டியின் துணிவும் பாசமும் நேர்த்தியான தாதியப் பணியும் கட்டாயம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்று. உண்மையில் எங்கள் போராட்டத்தோடு முழுவதுமாக அர்ப்பணித்து இருந்த அந்த நேசத்துக்குரியவரை தமிழ் நெஞ்சங்கள் மறந்துவிடக்கூடாது.
இவ்வாறாக தன் வாழ் நாளில் பல வருடங்களை நோயின் பிடியில் கழித்த பாலா அங்கிள் பிரித்தானியா மண்ணில் இருந்து எம் குரலாக ஓங்கி ஒலித்ததை என்றும் மறக்க இயலாது. ஆனாலும் இன்றோடு 11 வருடங்கள் கடந்து விட்ட இந்த நாளில் பாலா அங்கிள் என்ற எம் உரிமைக் குரல் ஓய்ந்து போய் விட்டதாக வந்த செய்தி பொய்யாகாதா என்று வன்னி காட்டிடை வளர்ந்து கிடந்த வன மரங்கள் அனைத்தும் ஏங்கியதை மறக்கவும் முடியாது. அவ்வாறான இன்றைய நாள் மீண்டும் ஒரு வருடத்தை கடந்து பயணிக்கிறது.
கவிமகன்.இ
14.12.2017