நாளைய பொழுதில்
நல்லதொரு விடியலுக்காய்,
விடுதலைக்காய்
போராடிய நாங்களோ இன்று
புலரும் திசை தெரியாமல்
புலம்பி நிற்கின்றோம்….!
புலவன் நிலவென சொன்னானே
நீயோ அதை மாற்றி எழுதினாய்
தலைவன் வழி நடந்தாய்
தாயென தேசத்தை நினைத்தாய்
தானையில் வீரத் திருமகளாய்
ஓயாது வீறுகொண்டு எழுந்தாய்….!
கொற்றமுடன் என் முற்றம் வாவென
நெற்றியில் திலகமிட்டு அனுப்பி வைத்தாளே
அந்த வீரத்தாய்
விடுதலை வேட்கையுடன் உனை
என்ன சொல்லிவிட தெரியல
உன் அம்மாவிற்கு ….!
பெண்ணியம் பேசும்
மனங்கள் பேசியதா
உனக்காய் இந்த உலகினில்
ஏன் பேசவில்லை..
மனித உரிமை பேசுகின்ற
மன்றங்கள் எல்லாம்
மௌனம் காத்து நின்றதே……!
சமாதானமும், சகோதரதரத்துவமும்
மனிதநேயமும் என்றே அறிக்கையிடுகின்ற
ஐ.நா சபை இன்று எங்கே
மீதி தமிழினமும் நாளை
செத்தொழிந்த பிறகு தான்
நீதி தருவார்களோ…!
மண்ணை இழந்தல்ல
உன்னை இழந்தே
துடிக்கின்றோம் நாம் இன்று
களத்தினில் கொடுத்தோம்
எத்தனை ஆயிரம் உறவுகளை
அத்தனை வலிகளையும்
மிஞ்சிய ஒரு வலியையே
அனுபவிக்கின்றோம் இன்று….!
தாங்கவும் முடியவில்லை
தூங்கவும் முடியவில்லையே….?
இறுதி நொடிப்பொழுது
எம் இதயத்தை பிழிகின்றது
மரத்துப்போன மரநாய்கள் செய்த
கோர வெறித்தனம் பார்த்து….!
என் அக்கா
உனக்காய் என்ன செய்தோம்
முடியவில்லையே – நீ
ஈழத்து இசைப்பிரியாக்களுக்கு
முகவரியாகிப் போய்விட்டாயே..!
வளர்த்த கோழியை
வறுத்திட கூசிடும்
எம் இனத்தவனை
வதைத்துப் பார்த்தியா….?
பார்த்திரு
மீண்டும் ஒருநாள்
வரலாறு எம் பக்கமாய் திரும்பும்
மறைந்த மர்மங்களெல்லாம்
விலகிப் போய் விடியல் பிறக்கும்
அப்போது தெரியும்
ஆயுதங்களை மௌனித்தோம்
அண்ணனோ அமைதியானான்
விடுதலைப் பாதையினை
வேறு வடிவத்தில் மாற்றிவிட்டு
ஆனாலும் நீதியின்றிப் போனதே
தர்மத்தின் வாழ்வுதனை சூது வெல்லும்
தர்மம் மறுபடியும் ஒருநாள் வெல்லுமே
தமிழா அதுவரை
அமைதியாய் ஜனநாயகத்தின்
உச்சம்வரை சென்று போராடிக்கொண்டேயிரு….!
– அ.பவளம் பகீர்.