“நல்லாட்சி அரசாங்கம்” பதவிக்குவந்து மூன்று ஆண்டுகளின் பின் நடக்கவுள்ள தேர்தலாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் உள்ளன. இவை உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களேயாயினும் நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் தேர்தல் என்ற வகையில் இது ஒரு நாடி பிடித்துப் பார்க்கும் தேர்தலாக அமைகிறது.
இத்தேர்தல் சிங்கள ஆட்சியாளர்களின் பகுதிக்கு மட்டுமன்றி தமிழ்ப் பகுதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். இவை வெறுமனே உள்ளூராட்சிச் சபைகள் சார்ந்தவைகளாக மட்டும் அமையாது தெற்கே சிங்களக் கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் தேசிய கொள்கை சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாகவும், தமிழ்ப் பகுதியில் தமிழ் மக்கள் ஒட்டு மொத்த பிரச்சனைகள் சார்ந்த விடயத்தை வெளிப்படுத்துவனவாயும் அமையவல்லது.
தெற்கில் காணப்படும் அரசியல் நிலவரத்தின் படி அங்கு ராஜபக்ச தலைமையிலான அணியினரின் கைகள் ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ராஜபக்ச கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு மிகப் பெருந்திளராக மக்கள் கூடுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச மீது சிங்கள மக்களுக்கு ஒருவகை அனுதாப அலையிருப்பதாக தெரியவருகிறது.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ச ஒரு பெரும் கதாநாயகனாவார். சினிமா பாணியில் சொல்வதானால் அவர் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார். ராஜபக்ச மீது சிங்களத் தரப்பில் வைக்கக்கூடிய ஒரேஒரு குற்றச்சாட்டு குடும்ப ஆட்சி, ஊழல் என்பன மட்டுமே. ஆனால் சிங்கள மக்கள் அதனைவிடவும் பெரிதாகக் கருதுவது புலிகளை இராணுவ ரீதியாக அவர் தோற்கடித்ததன் மூலம் அவருக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தையாகும்.
ஊழல், குடும்ப ஆட்சி என்பன சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இரண்டாம்பட்சமானவை. இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு நல்லாட்சி ஆட்சி அரசாங்கத்தினரும் விதிவிலக்கானவர்கள் அல்லர். ஊழல் குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசியலில் பழகிப்போன ஒன்று. அத்துடன் குடும்ப ஆட்சியும் பண்டாரநாயக்க குடும்பம் உட்பட, சேனநாயக்க குடும்பம் உட்பட அனைவருக்கும் புதிதான ஒன்றல்ல.
கடந்த தேர்தலில் ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் பெரும்பான்மை வாக்குக்களை பெற்றிருந்தவராவார் என்பதும் கவனத்திற்குரியது.
தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர்களின் வாக்குக்கள் அவருக்கு எதிராக அமைந்ததினால்த்தான் அவர் தேர்தலில் தோல்வியுற நேர்ந்தது. ஆனால் சிங்கள மக்களும், பௌத்த மகாசங்கமும் ராஜபக்ச பக்கமே தொடர்ந்தும் உள்ளன.
ராஜபக்சவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலமும் மற்றும் அண்டைநாடான இந்தியாவும் இணைந்து கடந்த தேர்தல்களில் வீழ்த்திவிட்டதாக ராஜபக்ச அணியினரும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரும் கூடவே ஊடகங்களும் கூறிவருகின்றன. தேர்தல் காலத்தில் அவர் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. இக்குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்கள் சிறிதும் பொருட்படுத்துவதாகவும் இல்லை. இந்நிலையில் ராஜபக்சவிற்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்து பலமாகவே உள்ளது.
மேலும் அவர் மீது ஆதரவு அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. குறிப்பாக வெளிநாட்டுச் சக்திகளினது சதியென்றும், சிறுபான்மையினத்தவரின் எதிர்ப்பென்றும் இரு அம்சங்கள் அங்கு முதன்மைப்படுத்தப்பட்டு இவற்றின் வாயிலாக சிங்கள பௌத்தர்களினது அனுதாபமும், ஆதரவும் அவருக்கு பலமாக அதிகரித்துள்ளது.
எப்படியோ எல்லாவற்றிற்கும் அப்பால் தோற்கடிக்கப்பட முடியாதவர்களாக மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட கதாநாயகன் என்ற பெரும் கவர்ச்சி முழுச் சிங்கள மக்கள் மத்தியிலும் உண்டு.
மிகக் குறிப்பாக இந்தவகையில் ராஜபக்சவை மகாசங்கத்தினர் தேசத்தை பிரிவினையில் இருந்து பாதுகாத்த பாதுகாவலனாக பார்க்கின்றனர். அந்த வகையில் அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நிரந்தர கவர்ச்சியுண்டு.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ராஜபக்ச பரந்தளவில் கலந்து கொள்ளக்கூடிய நிலையில் அவருக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு பற்றிய அச்சத்தை அவரது தரப்பினர் நாடாளுமன்றத்தில் இவ்வாரம் எழுப்பிய போது அதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க அளித்த பதில் மிகவும் கவனத்திற்குரியது. “
இந்தியாவில் ராஜீவ் காந்திற்கு ஏற்பட்ட நிலையை இலங்கையில் ராஜபக்சவிற்கு ஏற்பட ஒருபோதும் விடமாட்டோம்”. இத்தகைய கடுமையான அறிவித்தலானது ராஜபக்சவின் மீதும் அவர் தொடர்பான பாதுகாப்பு மீதும் அரசாங்கம் கொண்டிருக்கும் கவனத்தைமட்டுமன்றி அவ்வாறு கொள்ள வேண்டிய முக்கியத்துவம் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு என்பதையும் பறைசாற்றுகிறது.
ராஜபக்ச புலிகளை வென்ற கதாநாயகனாக மட்டுமன்றி இலங்கைக்கு அச்சமூட்டவல்ல இந்தியாவை ஓரங்கட்டத்தக்க வகையில் பலம்வாய்ந்த ஆசிய நாடான சீனாவை இலங்கைக்கு ஓர் அரணாக வடிவமைத்துக் கொண்டவர் என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.
சீனாவை அரவணைத்து இவ்வாறு இந்திய எதிர்ப்புக்கான அரணை அமைத்ததுமட்டுமன்றி சீனாவின் உதவியுடன் இலங்கையின் பொதுக்கட்டுமாணங்களை பெரும் அபிவிருத்திக்கு உள்ளாக்கியவர் என்ற கருத்தையும் சிங்கள மக்கள் கொண்டுள்ளனர்.
ராஜபக்ச காலத்தில் சீன உதவியுடன் பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு இலங்கை ஒரு கவர்ச்சிகரமான நவீன தோற்றத்துடன் காணப்படுகிறது. அத்துடன் பெரும் உல்லாச விடுதிகள் அமைக்கபட்டு அதன் மூலமும் இலங்கைக்கு ஒரு கவர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தி, கப்பல் போக்குவரத்து என்பன சீன உதவியுடன் துரித வளர்ச்சியடைந்துள்ளன.
இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிநிலை தோற்றப்பாட்டில் மேலோங்கியதாகத் தெரிகிறது.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தத்தால் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக நல்லாட்சி அரசாங்கத்தினர் ஆரம்பத்தில் கூறியிருந்த போதிலும் பின்பு அவர்கள் சீனாவை இறுகக் தழுவிக் கொள்வதில் ராஜபக்ச ஆட்சியாளர்களைவிடவும் ஒருபடி மேலே சென்றுள்ளனர்.
இந்த வகையில் ராஜபக்சவின் சீனச் சார்பு வெளியுறவுக் கொள்கை எதிர்த்தரப்பினராலும் பின்பற்றக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுடன் அது வெற்றி பெற்ற ஒரு வெளியுறவுக் கொள்கையாகவும் சிங்கள மக்களால் கருதப்படுகிறது. இதிலிருந்து இலங்கை இனி எந்தொரு ஆட்சியாளர்களாலும் விலகிச் செல்ல முடியாது. ஆதலினால் ராஜபக்ச பலவகையிலும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெறத்தக்க நிலையிலேயே உள்ளார்.
ஆனால் இங்கு இன்னொரு சமன்பாடு உண்டு. அதாவது புலிகளை யுத்தத்தால் தோற்கடித்த யுத்த கதாநாயகன் என்ற கவர்ச்சி சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் அதேவேளை அவர் “ஓர் இனப்படுகொலையாளர்” என்ற குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் மிகப்பலமாகவே உள்ளது.
ஐநாவின் உள்ளக விசாரணை அறிக்கையின்படி 70,000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் வகைதொகையின்றி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும் ஐநா தொழில்நுட்ப வல்லுனர் குழுவினரின் அறிக்கையின்படி சனல்-4 வெளியிட்ட “இலங்கை: கொலைக்களம்” என்ற மூன்று ஆவணப்படங்களும் உண்மையானவை என்றும் அவை எந்தவகையிலும் போலியானவை அல்ல என்றும் அந்த ஆவணப்படத்தில் வரும் ஒளி-ஒலி காட்சிகள், புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் இவை சூழ்நிலை உண்மை ((Contextual) கொண்டவையாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆவணப்படமே போர்க்குற்ற விசாரணையின் போது ஒரு முக்கிய சாட்சியமாக அமையக்கூடியது. அதாவது இந்த ஆவணப்படத்தில் பதிவாகியுள்ள படுகொலை தொடர்பான நேரம், பின்னணிச் சூழல்கள் அதைச் சூழ்ந்த படையினர் தொடர்பான நடமாட்டங்கள் அனைத்தும் உண்மையானவையாக மேற்படி நிபுணர் குழுவால் கூறப்பட்டுள்ள நிலையில் இவை விசாரணையின் போது மிகப்பலமான சட்ட சாட்சியங்களாக அமையக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் ராஜபக்சவையும் மற்றும் சிங்கள ஆட்சியாளர்களையும், இராணுவத் தளபதிகளையும் சர்வதேச விசாரணையில் இருந்து பாதுகாப்பதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கம் அவசியமானதாக உள்ளது. ரணிலுக்கு இருக்கக்கூடிய மேற்குல ஆதரவு இதுவிடயத்தில் கைகொடுக்கவல்லதாக உள்ளது.
எனவே ரணிலை ஆட்சியில் வைத்துக் கொண்டு போர்க்குற்ற விசாரணை என்பதிலிருந்து கடந்து செல்லவும், சர்வதேச நெருக்கடியில் இருந்து இலங்கையைக் காப்பாற்றவும் வேண்டிய அவசியம் உண்டு. ஆதலால் ராஜபக்ச அணியினரும், மகாசங்கத்தினரும் தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்தை தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் பேணுவதன் மூலம் தம்மை தற்காக்க விரும்புவர் என்பதில் சந்தேகமில்லை.
ஆதலால் பதவிக்கு வரத்தக்க ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு இருந்தாலும் அவர்கள் இந்த ஆதரவை ஒரு பேரத்திற்குரிய பலமாக முன்னிறுத்துவார்களே தவிர ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய வகையில் நிறுத்தமாட்டார்கள்.
எனவே நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்காத வகையில் ஒருவகை சமரசத்ததை அந்த அரசாங்கத்துடன் பேணக்கூடிய வகையிலும் அதேவேளை தமக்குரிய பலத்தை காட்சிப்படுத்தக்கூடிய வகையிலுமான ஒரு கலப்பு நிலைப்பாட்டைத்தான் ராஜபக்ச தரப்பு எடுக்கும். ஆதலால் இதில் பலிக்கடாவாகப் போவது ஈழத் தமிழர்கள்தான்.
ராஜபக்ச தரப்பு தனது பலத்தை உயர்த்திப் பிடித்தாவறும், அதேவேளை அரசாங்கத்தை கவிழ்க்காதவாறும் நடந்து கொள்ள இத்தேர்தலை பயன்படுத்தும் என்பதுடன் கூடவே இத்தகைய பலத்தை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களுகக்கான உரிமைகளை யாப்பு ரீதியாக வழங்காது தடுப்பதற்கான நியாயத்தை நல்லாட்சி அரசாங்கம் அரங்கேற்றவும் இதனை பயன்படுத்துவர்.
தனக்கு ஏற்படக்கூடிய வீழ்ச்சியானது பூதங்கள் எழ வாய்ப்பாக அமையும் என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை நோக்கும் போது ராஜபக்ச என்ற பூதத்தைக் காட்டி தமிழர்களுக்கான அனைத்து நியாயங்களும் புதிய அரசியல் யாப்பிலும் சரி, போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயங்களிலும் சரி மறுக்கப்பட உள்ளன என்பதே நிதர்சனம்.
இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக, அதாவது போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு-கிழக்கு ஓர் அலகாகக் கொண்ட இறைமையுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு என்பன பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் தலைகீழாகக் காணப்படும் நிலையில் நிகழவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் தமிழ் மண்ணில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
நன்றி: ஈழநாடு கனடா