பச்சை கதிர் தடவ
உந்தன் மச்சான் போகையிலே
பால் முட்டி நின்ற நெல்லு
கரு இழந்து நிக்குதடி
முளைத்த விதை நெல்லும் போச்சு
உலை ஏத்த வழியும் போச்சு
பழைய கஞ்சி குடிக்க வைக்கும்
பானை சோறும் போச்சு
பெத்த பிள்ளை வயித்திலே
காட்டுத்தீ புகையுதடி
பிஞ்சு விரல் சூம்பி போய்
திண்டாட்டம் தெரியுதடி
கண்ணே கற்பகமே என்
நெஞ்சில் பொற்குணமே
கண்ணும் தெரியவில்ல செய்யும்
காரியமும் புரியவில்ல
கஞ்சிக்கும் வழியுமில்ல எங்கள்
பஞ்சம் முடிய இல்ல
வஞ்சம் கொண்ட வானும் இங்கு
பெஞ்ச கொஞ்ச நீருமில்ல
பொன்னாகும் வயலுமிங்கு
மண்ணாகி போனதுடி
விண்ணின் மழை பொய்த்ததாலே
கண்ணில் மழை ஓடுதடி
மார்படித்து நான் அழுதாலும்
ஏர்பிடிக்க குருதி பொங்குதடி
கார் மேகம் சூழ்ந்து நின்றும்
பொய்மை காட்டுதடி
கண்ணுக்குள் இமையாக
நான் இருக்க என்ன செய்வேன்
காத்திருந்த காலங்களை
எங்கு சென்று நான் கொய்வேன்
கஞ்சிக்கு வழியில்லை – எங்கள்
உயிருக்கு நிலை இல்லை
கெஞ்ச ஊரில் யாரும் இல்லை
ஒரு பிடி அரிசி தர நாதி இல்லை
போகின்றேன் நானும் புள்ள
உம்மை கைவிட்டு தூர புள்ள
வாய்க்கரிசி போட வேணாம்
கிடைத்தால் கஞ்சி உண்டு மகிழு புள்ள…
கவிமகனின் வேரோடும் விழுதுகள் கவியேட்டில் இருந்து ….
17.12.2007