தனிஈழம் வேண்டுமா என்று வாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும் என்ற ஒரு செய்தி அடிக்கடி உச்சரிக்கப்படுவதுண்டு. உண்மையில் தமிழ்ஈழம் வேண்டுமா என்ற கேள்விக்கு வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் பதில் வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களே தமிழ்ஈழம் வேண்டாம் என்று எதிர்ப்புக்காட்ட தயாராக உள்ளனர் என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை. யார் இந்த எதிர்ப்பாளர்கள்? அவர்கள் ஏன் தனிஈழம், தனித்தமிழ் அரசு என்பவற்றை விரும்புவதில்லை என்று சிந்தித்துப் பாருங்கள்.
தனியரசு என்பது என்ன?, அப்படி ஒரு அரசு அமைவதன் நன்மைகள் என்ன? என்பதன் தெளிவான விளக்கத்தை தமிழர்கள் கொண்டிருப்பார்கள் என்று ஒத்துக்கொள்ளமுடியாது. பொதுவாக தமிழர்கள் தங்களைப்பற்றிய அறிவினை இருவழிகளில் பெற்றிருப்பர். ஒன்று பள்ளிக்கல்வி மற்றையது ஊடகங்கள், புத்தகங்கள் மற்றும் உரைகள். இவ்வாறு பெறப்படும் அறிவுதான் தமிழர்களுக்கு தமிழர்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை சொல்லமுடியும். குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் வரும் ஒரு காட்சி. இப்போது ஈழவிடுதலைக்கும் தமிழ் திரைப்படத்துக்கும் என்ன சம்பந்தம், அதை ஏன் இடையிலே புகுத்துகிறீர்கள், சொல்லவந்த செய்தியை சுருக்கமாக சொல்லுங்கள், வாசிக்கும் எங்களை வதைக்காதீர்கள் என்ற இந்த நினைவுகள் உங்களுக்கு வந்து போகலாம். இந்தத்தொடர் வாசிப்பதற்காக எழுதப்படவில்லை. யோசிப்பதற்காக எழுதப்படுகிறது. இவை பொழுதுபோக்குச் செய்திகள் அல்ல . சிந்திக்கவேண்டிய செய்திகள். எங்களை நாங்கள் இழந்த இடங்கள். எம்மை நாம் தவறாக வழி நடத்திய தடங்கள். எனவே கடந்தகால அனுபவங்களைக்கொண்டு நிகழ்காலத்தை திட்டமிட்டு எதிர்காலத்தில் நடக்கவேண்டும். நீ என்ன தலைவரா? மக்களை வழிநடத்த என்ன தகுதி உண்டு? என்றெல்லாம் கேட்கவேண்டாம். எனது ஆதங்கத்தை சொல்கிறேன். அது பலனளிக்கும் காலம் வரும். அப்போது ஈழத்தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். நிறைந்த ஒரு வாழ்வை அவர்கள் வாழ்வது மட்டுமன்றி, உலகத்தமிழ் மக்களுக்கே வழிகாட்டியாக இருப்பார்கள். இந்த வெற்றியை பெறவேண்டுமானால் ஈழத்தமிழ் மக்கள் முதலில் தங்களைப்பற்றி தெளிவாக அறியவேண்டும். போலிகளை களையவேண்டும். புதுமைகள் படைக்கவேண்டும். அந்த நாள் வராமல் போகாது. கண்டிப்பாக வந்தே தீரும். இனி தொடங்கிய செய்திக்கு வருவோம்.
பொதுவாக தமிழர்கள் யாபேரும் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் திரைப்படங்களை பார்க்க வேண்டியே உள்ளது அல்லது பார்ப்பார்கள். அவர்கள் தேவையின் அடிப்படையில் பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பொழுது போக்கு அடிப்படையில் தான் திரைப்படங்களை பார்க்கிறார்கள். இருப்பினும் அதில் சொல்லப்படும் செய்திகள் அவர்களால் உள்வாங்கப்படுகின்றன. இந்த உள்வாங்கல் அவர்களிடம் நிலைத்துப்போவதால் அதைப்பின்பற்றவும் ஆரம்பிக்கிறார்கள். இதுவே கருத்துருவாக்கம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒரு செய்தியை தவறாக அல்லது சரியாக மக்கள் மனதில் விதைத்தல். இவ்வாறு விதைக்கப்படும் கருத்துக்கள் மக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தும். இக்கருத்துக்கள் நல்லவையாக இருப்பின் சமூகத்தில் பயனுள்ள மாற்றங்களை கொண்டுவரும். தவறாக அமையின் சமூகத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்போது காட்சிக்கு வருவோம்.
“என்ன அரசியல் பேசிறவனுக்கு பயப்படுரியா?, யாரு ரீக்கடையளில ரீ குடிக்கேக்க பத்திரிக்கை படிச்சு அரசியல் பேசுறவனை சொல்லுறியா? இல்ல சாப்பிட்டுக்கொண்டு அரசியல் பேசிறவனை சொல்லுறியா?” இவங்களெல்லாம் வெத்துவேட்டுக்கள், இவங்கள் பொழுதுபோக்குக்கு கதைச்சிட்டு அப்பிடியே போயிடுவாங்க. இவங்களுக்கு பயப்பிடவே தேவையில்லை. அது அவர்களின் பொழுதுபோக்கு அரசியல், கவலைப்படாமல் உன்ரை வேலையைப்பார்” என்கின்ற போக்கில் காட்சிகள் அமையும். ஆக, அது வெளிக்காட்டி நிற்பது எதை என்று சிந்திக்கவேண்டியுள்ளது. அதாவது அரசியலுக்கு உரியவன் அவன்தான். அவன் பொழுதுபோக்காக இல்லாமல் என்றைக்குப் பொறுப்புடன் செயல்படுகிறானோ அன்றே காட்சி மாறும். அரசியல் மாறும். இந்தக்கருத்து ஆழமாக உள்வாங்கப்படுவதில்லை. அதிலும் இன்றைய உலகு வியாபாரத்தை மையமாக வைத்து இயங்குவதால் பொதுவாகவே மனிதன் எதையும் சிந்திக்கவோ அல்லது தெளிவான கருத்துகளை கண்டுபிடிக்கவோ முடியாமல் ஓடிக்கொண்டிருக்கின்றான். எங்களுக்குத்தெரியாமல் எங்கோ இருக்கும் ஒருவருக்காக நாம் உழைக்கின்றோம். எமக்கு பலனளிக்கின்றதா? என்ற கேள்வியை மனதில் போடாமல் நாள்முழுக்க உழைக்கின்றோம். எங்களது உழைக்கும் ஆற்றல் முடியும்போதுதான் சிந்திக்கத்தொடங்குவோம். காலம் கடந்து போய்விடும். உழைத்ததன் பலனுமின்றி வாழ்வை அனுபவித்த சுவையுமின்றி கடந்துவந்த பாதையை சிந்திப்போம். விளைவு இனி என்ன “சென்றதெனி மீளாது மூடா” என்பதுதானே. இதற்கோர் நல்ல உதாரணத்தை சொல்கின்றேன்.
புதிய விலை உயர்ந்த தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கிவிடுகின்றோம். ஆனால் அதில் நிகழ்ச்சிகளை வீட்டில் அமர்ந்து இருந்து பார்க்க நேரமில்லை. கடன்பட்டு விலை உயர்ந்த மகிழூந்து ஒன்றினை வாங்கிவிட்டு அக்கடன்கட்ட நாள் முழுக்க ஓடி ஓடி உழைப்போம். இப்படி பல செய்திகளை அடுக்கலாம். ஆனால் மக்கள் ஏற்கமாட்டார்கள் காரணம் நாம் எமக்காக வாழ்வதிலும் மற்றவர்க்காக வாழ்வதற்கே அதிக நேரம் செலவிடுகின்றோம். மற்றவர்க்கு என்பது மற்றவர்க்கு உதவவல்ல எங்கள் பெருமைகளை மற்றவர்களுக்கு காட்ட. ஈழவிடுதலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். நிறைந்த தொடர்புகள் உண்டு. அதாவது நாங்கள் எங்கள் ஈழவிடுதலை தொடர்பான அறிவை முழுமையாகப்பெறவில்லை என்பதுதான் அது. கோபம் வேண்டாம், அடுத்த கட்டத்திற்கு செல்வோம். நானும் உங்களில் ஒருவன்.
ஈழத்தமிழர்களிடம் ஆழமான போராட்ட எண்ணம் இருந்ததா? என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. நான் தமிழில் வெறுக்கும் ஒரு வரியினை முதலில் குறிப்பிடுகிறேன். அது “ கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ் குடி” தேவையா இது, இதைச்சொல்வதனால் என்னபெருமை, அடுத்து தொடங்குவார்கள் உலகில் தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்றும் ஒரு நாடில்லை. ஏன் இதைசொல்கிறார்கள் என்று புரியவில்லை. பேச்சுக்கள் பேசுகிறார்கள், கவிதைகள் படிக்கிறார்கள், பாட்டுக்கள் பாடுகிறார்கள், கைகோருங்கள் என்றால் நடைமுறையில் அது இல்லை என்பதே உண்மை. தமிழர் வரலாறு என்றால் அது தமிழ் இலக்கிய வரலாறு என்பதில் ஆரம்பிக்கிறது. பொதுவாக இந்தியா தான் எமது தொடக்க வரலாறு என்பதாகவே எங்கள் இலக்கியங்கள் கட்டமைக்கப்படுகிறது. ஈழம் தொடர்பான சிந்தனைகள் எங்களிடம் வேரூன்றச் செய்வதற்குப்பதில் இந்தியச்செய்கள் வலுவாகச் சொல்லப்படும். கேட்டால் பழந்தமிழ் இலக்கியங்கள் எங்கள் வேர்கள் என்பர். அவை உண்மையா இல்லையா என்று நாம் சிந்திப்பதும் இல்லை யாரும் சிந்திக்க விடுவதும் இல்லை. உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை மக்களிடம் பரப்பி ஈழத்தமிழன் பற்றிய சிந்தனைகளை எங்களிடம் தடுத்துவிட்டனர். இதற்கு நல்லதொரு உதாரணம் சொல்ல விரும்புகின்றேன்.
ஒரு வெளி நாட்டுக்காரர், அவர் ஈழத்தமிழர்களின் வாழ்வியலுடன் தொடர்புபடுகிறார். அதாவது புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் அறிவூட்டுவது அவர் வேலை. தமிழ் எழுத்தறிவு என்றில்லாமல் ஈழத்தமிழர் கதைகளை சொல்வது. ஈழத்தமிழர் தொடர்பான செய்திகளை சொல்லிக்கொடுப்பது. நாங்களே தமிழ் வேண்டாம் என்று விடும்போது இவன் ஏன் தமிழ் ஊட்டுகின்றான் என்று கேள்விகேட்கவேண்டாம். அதை விலக்கிவிட்டு செய்திக்கு வருவோம். அவர் தன்னை என்னிடம் அறிமுகம் செய்து, பின்பு என்னிடம் கேட்டார் ஈழத்தில் தமிழ் கதைகள் உண்டா?, அவ்வாறு தமிழ் கதைகள் சொல்லியவர்கள் உண்டா? என்றார். நான் யோசிக்க ஆரம்பித்தேன். மீண்டும் அவர் சொன்னார், தெனாலிராமன் கதைகள், முல்லா கதைகள் போன்று ஈழத்திலும் இருக்கும் அவற்றைச் சொல்லுங்கள் என்றார். நான் உடனே கல்லடி வேலுப்பிள்ளை என்று ஒருவர் இருந்திருக்கின்றார் என்றேன். நல்லது, அவரது விபரங்களைத்தாருங்கள், அவரது கதைகளை சொல்லுங்கள் என்றார். உண்மையாகவே சொல்கின்றேன் “சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் “, “தமிழ் சிறந்த மொழி இருந்தாலும் சமஸ்கிருதம்தான் தேவமொழி” என்று சொன்ன பாரதியார் தெரியும். ஆனால் எங்கள் நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு மனிதன் பற்றி தெரியவே தெரியாது. அவர் கதைகளும் தெரியாது. இப்போது எனக்கு அவர் பற்றிய எந்த விபரமும் தெரியாது என்றேன். அடுத்து அந்த வெள்ளைக்காரர் சொன்னார் கல்லடி வேலர் என்று பலர் எனக்கும் சொன்னார்கள். ஆனால் அவரின் விபரமும் கதைகளும் எனக்கு வேண்டும், வலைத்தளங்களில் தேடியும் கிடைக்கவில்லை, அதனால் தான் தேடுகிறேன். ஏனென்றால் பிற நாட்டுக்கதைகளை சொல்லிக்கொடுப்பதிலும் சொந்த நாட்டுக்கதைகளை சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் தங்கள் தாய்நாட்டை அவர்கள் நேசிப்பார்கள், தங்களுக்கு முன் வாழ்ந்த பெரியோர்களை அறிந்துகொள்வார்கள், தங்கள் கதைகளை மற்றோர்க்கும் சொல்வார்கள், என்று கூறி தனது மினஞ்சல் முகவரியையும் தந்துவிட்டு சென்றார். இது நடந்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் வரை வரும். அதன்பின் அவர் வரும்போதெல்லாம் நான் ஓடி ஒழித்து விடுவேன். காரணம் கல்லடி வேலர் தொடர்பாக எனக்குத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அவரின் விபரங்களை தேடியும் பெறமுடியவில்லை என்பதும், இதனால் இது கூட தெரியாமலா வாழ்கிறீர்கள் என்று அவர் நினைப்பார் என்ற தாழ்வு எண்ணமும், அவரை சந்திக்காமல் தடுத்து விட்டது. ஆனால் இன்னமும் ஈழத்தில் வாழ்ந்த கதை சொல்லியவர்களையும், கதைகளையும் நான்கண்டு பிடிக்கவில்லை என்பது உண்மை. எங்களைப்பற்றி நாங்கள் தெரியாமல் இருப்பது பெரிய குறைபாடு இல்லையா?
இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் சிந்திக்கலாம். நாம் ஊரில் இருக்கும்போது எங்கள் வீடுகளில் எங்களுடைய பரம்பரையினரான அப்பு, ஆச்சி அதனைவிட மற்றும் இறந்த உறவினர்கள் படங்கள் இருக்கும். அந்தக்காலங்களில் படங்கள் என்பது மிகப்புனிதமாக பார்க்கப்படும். நாங்கள் அவர்கள் படங்களை கவனமாக பாதுகாத்து வைத்திருப்போம். இப்போது நினைவுமலர் பதிப்பிப்பதே அவமானம் என்று தவிர்க்கும் காலம் வந்துவிட்டது. எங்கள் முன்னோர்கள் எமக்காக தேடி வைத்து சென்ற சொத்துக்களை அம்மா தந்தது, அப்பா தந்தது, ஆச்சி தந்தது, அப்பு தந்தது என்று கவனமாக பாதுகாப்போம். எங்கள் காணிக்குள் ஒருவர் உள்வர விடமாட்டோம். இப்படியாக எனது, எங்களுடையது என்ற எண்ணம் எங்களிடம் பலமாக இருந்தது. ஆனால் ஈழம் என்ற நாடும், நாம் பேசும் தமிழும் எங்களுடையது, எங்களுக்கு உரிமையானது, எங்கள் பரம்பரையினர் ஆண்டு அனுபவித்து வாழ்ந்த பூமி, இங்கு எங்களுக்கென்று அழுத்தமான வரலாறு உண்டு, ஈழத்தமிழர்க்கென தனித்த சிறப்பான கலை, கலாசாரம், பண்பாடு உண்டு என்று இடித்துச் சொல்லப்படவில்லை என்றே சொல்லவேண்டும். எங்களுக்கு முந்தைய செய்திகள் எமக்கு தெளிவாக சொல்லப்படாமையால் அல்லது எங்கள் வரலாற்றை அறியவேண்டும் என்ற ஆவல் எமக்கு ஏற்படுத்தப்படாமையால், நாங்களும் எங்கள் நாட்டை விரும்பவில்லை. எங்கள் தமிழை நேசிக்கவில்லை, சுலபமாக தாய்நாட்டை தூக்கியெறிந்துவிட்டு வேறு நாடு செல்கின்றோம். அங்கு வாழ்வுரிமை பெறுகின்றோம். இது மட்டுமல்ல எங்கள் சந்ததி தொடர்பாக, எங்கள் வழித்தோன்றல்களுக்குச் சொல்லாமல் விட்டுவிடுகின்றோம். எங்களுக்காக வரலாறுகளை உருவாக்கித்தந்த எங்கள் சமூகத்தின் சொத்துக்களான பெரியோர்கள் யாரையும் நாங்கள் கொண்டாடவில்லை. அதனால் எங்களை சுலபமாக மறக்கின்றோம்.
விடுதலைப்புலிகளின் வருகையின்பின் இங்கு அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது வரலாறுகள் எடுத்துச் செல்லும் இலக்கியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் “இந்த மண் எங்கள் சொந்தமண்” என்ற எண்ணம் பலமாக பதியச்செய்யப்பட்டுள்ளது. இயற்கையை பேணுதலின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கலை, பண்பாடு, கலாசாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் தொடர்பான வரலாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் வாழ்ந்த திறமையாளர்கள் இனம்காணப்பட்டனர். இதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ்ஈழம் வேண்டும் என்ற நிலை ஈழம் கடந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி உலகில் வாழும் ஏனைய மக்கள் மனதிலும் விதைக்கப்பட்டது. இவ எல்லாம் பாரிய மாற்றங்கள்தான், இருப்பினும் இன்றும் நாங்கள் தமிழ் ஈழத்தை விரும்பாதோர் தொடர்பாக தெரிந்து வைத்துள்ளோமா? தமிழ்ஈழம் தொடர்பான நம்பிக்கையுடன் உள்ளோமா? எங்கள் வழித்தோன்றல்களுக்கு தமிழ்ஈழம் தொடர்பாக சொல்லிவைக்கிறோமா?, அதில் எங்கள் கடமை என்ன? என்பவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
– பரமபுத்திரன்