தட்சணாமூர்த்தி அவர்களின் இளமைக்காலமும் தவில் உலகப் பிரவேசமும்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இசை வேளாளர்கள், அண்ணாவிமார், நடிகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரையும், இணுவை மக்களையும் நெறிப்படுத்தியவர்களான, சின்னத்தம்பிப்புலவர் – இவரது புலமை பற்றி அறிஞர் மு. வரதராசனார் தனது இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ நடராசஐயர்- இவர் ஆறுமுகநாவலரின் பிரதம சீடர். காசிவாசி செந்திநாதையர் உட்படப் பலர் இவரிடம் பாடம் கேட்டுள்ளனர். அம்பிகைபாகப்புலவர்– இவருக்கும் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கும் மிகுந்த நட்புண்டு,’இவரிடத்து யாம் தணிகைப் புராணத்துக்குப் பொருள் கேட்டு அறிந்துள்ளோம்’ எனப் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஈழநாட்டுத் தமிழப் புலவர் சரித்திரத்திற் குறிப்பிடுகின்றார்.
பெரியசன்னாசியார், சின்னத்தம்பிச்சட்டம்பியார், ஸ்ரீ.சடாசிவக்குருக்கள், க.வைத்திலிங்கம்பிள்ளை,வடிவேற்சுவாமியார், சேதுலிங்கச்சட்டம்பியார் போன்றோரும் இன்னும் பலரும் வாழ்ந்த மிகச் சிறந்த நீண்டதொரு குருகுல கல்விப் பாரம்பரியம் இணுவிலில் நிலைபெற்றிருந்தது. இத்தகைய சூழலில் வாழ்ந்த திரு விஸ்வலிங்கமும் அவற்றை இயல்பாகவே உள்வாங்கியதால் தமிழ், சமயக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதனால், தான் பெற்ற கல்விச் செல்வத்தைத் தன்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்க விரும்பி அவர்களையும் அவ்வழியிலே நெறிப்படுத்தினார். ஆனாற் சிறுவன் தட்சணாமூர்த்திக்கோ ஒரு இடத்தில்; ஓடி விளையாடாது, சிறிது நேரம் அசையாது இருத்தல் என்பது முடியாத காரியம். ‘படிக்கப் போ’ என்றாலே அது பிடிக்காத காரியம் ஆயிற்று. நான் ‘படிக்கப் போக மாட்டேன் தவில் வாசிக்கப் போகிறேன்’ என அடம் பிடிக்க ஆரம்பித்தார் தட்சணாமூர்த்தி.
தட்சணாமூர்த்திக்கு ஐந்து வயது நிறைவடைந்த வேளை 1938 ஆம் ஆண்டு காரைநகர்ச்; சிவன் கோயிலில் நான்கு ஆண்;டுகளுக்கு ஆஸ்தான வித்துவானாக இருக்க வேண்டித் திரு விஸ்வலிங்கம் அவர்களுக்கு அழைப்பு வரவே, அதனை ஏற்றுக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். திரு. விஸ்வலிங்கம் அவர்கள் மிகுந்த ஒழுங்கும் கடுமையான சட்ட திட்டங்களையும் உடையவர். பாரம்பரியக் கலைகளைப் புதிதாகக் கற்பவர்களாயினும் கலைப் பின்னணியில் வந்தவர்களாயினும் அவர்களுக்கு மரபுரீதியான தமிழ் சமய அறிவுக்கான கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தியவர். தானும் வரன் முறையாக அந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர். ஆகையாற் காரைநகர் சென்ற பின்னரும் தன் முயற்சியைக் கைவிடாத திரு.விஸ்வலிங்கம் அவர்கள் மீண்டும் தட்சணாமூர்த்திக்கு அறிவுரைகள் கூறி கல்வி கற்பிப்பதற்கு முயன்றார். ஐந்து வயதே நிரம்பிய சிறுவன் தட்சணாமூர்த்தியோ குறும்புகள் செய்வதிலும், தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் கிட்டியடிக்கவும், மாபிள்(போளை) விளையாடவும் காரை நகர்ச் சிவன் கோயில் வீதியில் மணலில் விளையாடவுமே ஆர்வம் காட்டினான். அந்தச் சுடுமணலில் அவனை விரட்டிப்பிடிப்பதே பெரும்பாடாய் விடும்.
ஒருநாட் காரைநகரில் உள்ள நாராயணசாமி என்பவர் கோயிலின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் நீராடிக் கொண்டு இருந்தார். அந்தச் சூழலில் விளையாடிக் கொண்டு இருந்த தட்சணாமூர்த்திக்குத் தாமரைக் குளத்தில் தானும் நீராட வேண்டும் என்ற ஆசை மேலிடவே உடனே ஓடிச் சென்று தாமரைக் குளத்திலே குதிக்க முயன்றபோது, நாராயணசாமி என்பவர் டேய் டேய் குதிக்காதே என்று சத்தமிட்டபடி பிடிக்க ஓடியவருக்குத் தாமரைக்குளத்தில் விழுந்து சேற்றில் அமிழப்போன தட்சணாமூர்த்தியைச் சேற்றோடு அள்ளியெடுத்து அணைக்கத்தான் முடிந்தது.
இன்னொருநாள் காரைநகர் ஆலயத் திருவிழாவின்போது கோயிற் கேணிக்கரையிற் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த தட்சணாமூர்த்தி திடீரென்று கேணியை நோக்கி ஓடி அதன் படிகளில் மிக வேகமாக இறங்கத் தொடங்கி விட்டாராம். அதைப் பார்த்துக் கொண்டு அருகில் நின்றவர்கள் அவரைப் பிடிப்பதற்குக் கலைத்துக்கொண்டு ஓட, அதற்கிடையில் கேணியின் இறுதிப்படியிற் தட்சணாமூர்த்தி காலை வைக்க, அதில் இருந்த பாசி வழுக்க, நிலை தடுமாறிய அவர் கேணியினுள் விழக் கலைத்துக் கொண்டு ஓடியவரும் கேணியுள் விழுந்து தட்சணாமூர்த்தியையும் தூக்கிக் கொண்டு போய் விஸ்வலிங்கத்திடம் ஒப்படைத்தாராம். சுட்டித்தனமும் கூர்மையான அறிவும் குழந்தைத் தனம் நிறைந்த வசீகர அழகும் நிரம்பிய சிறுவன் தட்சணாமூர்த்தி மீது அவருடைய குடும்பத்தினர் மட்டுமன்றிக் காரைநகர் ஆலயச் சூழலிலும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்தவர்களும் அவர் மீது அன்பைப் பொழிந்ததுடன் தங்கள் கண்ணின் மணியாகவே பாதுகாத்துவந்தனர். காரைநகரில் ஒரு ஐயனார் கோயில் ஒன்று உண்டு. அந்த ஐயனாரே இரவில் வெளிக்கிட்டு நகரைக்காப்பதாகக் காரைநகர் மக்கள் சொல்வதைக்கேட்டுள்ளார். அது உண்மையா எனத் தெரிந்து கொள்ளப் பல இரவுகள் ஓசைப்படாமல் எழுந்து கோயில் வீதியைச் சுற்றி விட்டு வந்து மீண்டும் ஓசைப்படாமற் படுத்து விடுவார். பின் நித்திரையில் ஐயனார் வாறார் ஐயனார் வாறார் எனச் சத்தம் போடுவார். தந்தையார் எழுப்பி நெற்றியில் வீபூதியிட்டுவிட்டு எங்கே போயிருந்தாய் எனக் கேட்டால் ஐயனாரைப் பார்க்கப் போனேன் என்பாராம்.
சிறுவன் தட்சணாமூர்த்தி படிக்கச் செல்லாமற்; தவில் வாசிக்கப் போகிறேன் என்று அடம்பிடித்துக்கொண்டு, செய்யும் குறும்புத்தனங்களுக்கும் எல்லையில்லாமற் போகவே திரு விஸ்வலிங்கம் அவர்கள் ஒரு நல்ல நாளில் 1939 ஆம் ஆண்டு தட்சணாமூர்த்தியின் ஆறாவது வயதிற் காரைநகர்ச் சிவன் கோவிலில் சிட்சை ஆரம்பிப்பதற்குரிய பூசைகளைச் செய்து அவரது மடியிலே தவிலைத் தூக்கி வைத்து வித்யாரம்பம் செய்து வைத்தார். தவிலிற் கைவைத்த மறுகணமே அங்குள்ள அனைவரும் வியக்கத் தவிலை வாசிக்க ஆரம்பித்து விட்டாராம். அன்றிலிருந்து தவில் கற்றுக்கொள்வதற்காகவும் தவிலை வாசிப்பதற்காகவும் தந்தையுடன் அதிக நேரம் அருகில் இருக்க ஆசைப்பட்டாராம். இதனைக் கண்டு மகிழ்வுற்ற தந்தை, தவில் சிட்சை பெறவதற்காக, இணுவில் தவில் வித்துவான் சின்னத்தம்பி என்பவரிடம் கதைத்து அவருடைய வீட்டிற்கு அனுப்பிவைத்தார். தந்தையைப் பிரிந்து இருக்க முடியாத தனையன் அழுது அடம் பிடித்து சீக்கிரமே மீண்டும் தந்தையிடமே சென்று அவருடனேயே இருந்து தவில் வாசித்து வந்துள்ளார்.
இவ்வாறு இருக்க, திரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்த மகன் திரு உருத்திராபதி அவர்களுக்குத் திருமணம் கைகூடி வந்தது. திரு உருத்திராபதி அவர்களின் திருமணவைபம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இசை வேளாளர்கள் பலரும் சமூகமளித்து இருந்தனர். அங்கு பிரபல தவில் வித்துவான் வண்ணைக் காமாட்சி சுந்தரம்பிள்ளையும் வந்திருந்தார். அவரிடம் தனது மகன் தட்சணாமூர்த்தியின் திறமைகளைப் பிரஸ்தாபித்து, தன் மகனின் ஆர்வத்தையும் கூறி முறைப்படி ஒரு குருவிடம் அமர்ந்து கலையைக் கற்றுக் கொண்டு அந்தக் குருவின் பரிபூரண ஆசிகளையும் பெற்றுக்கொள்ளும் போது தானே அந்தக் கலையும் பிரகாசிக்கும் கலைஞனும் பிரகாசிப்பான். என்று கூறிய திரு விஸ்வலிங்கம் தன் மகனுக்குக் குருவாக இருக்கும்படி திரு காமாட்சி சுந்தரம்பிள்ளையிடம் வேண்ட, அதற்கு அவரும் தமது ஒப்புதலைத் தெரிவிக்கவே, மீண்டும் ஒரு நல்ல நாளிற்; திரு காமாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அவரது இல்லத்திற் சிறுவன் தட்சணாமூர்த்திக்குச் சிட்சை ஆரம்பமாகியது. திரு விஸ்வலிங்கம் அவர்கள் குருவிடம் தன் பிள்ளையை ஒப்படைத்து விட்டுக் காரைநகருக்குச் சென்று விட்டார். தந்தை மகனைப் பார்க்க வரும் நேரங்களில் எல்லாம் ‘அப்பா எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்ததையே அவர் சொல்லித் தருகிறார் என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அழுதபடி கெஞ்சுவார். தந்தைக்கு மட்டும் என்ன பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்திருக்க ஆசையா என்ன? மனதைத் தேற்றிக்கொண்டு தனது இல்லம் திரும்புவார்.
காரைநகரில் இருக்கும் தந்தை விஸ்வலிங்கத்திற்கு உணவு செல்லவில்லை, உறக்கமும் கொள்ளவில்லை, மகனை நினைந்து நினைந்து கண்ணீர் உகுத்தபடி நீராகாரத்தை மட்டும் அருந்தி நாற்பது நாட்கள் மகனுக்காக இறைவனை வேண்டி விரதம் அனுட்டித்தார். இந்தக் கதைகளை எல்லாம் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி திருமதி பவானி வேதய்யா அவர்கள் சொல்லக் கேட்டபோது, இந்த நிகழ்வுகள் என்னை ஆயர்பாடிக்கு அழைத்துச் சென்றன. அங்கே கிருஷ்ணன் தன் சக தோழர்களுடன் விளையாடச் சென்று யமுனையிற் குதிக்கின்றான். தன் வசீகர அழகால் எல்லோரையும் மயக்குகிறான். அவன் செய்யும் குறும்புகளுக்கும் ஒரு அளவே இல்லை. தாய் யசோதையும் நந்தகோபரும் கிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பைச் சொரிந்தனர். கிருஷ்ணனும் அவர்களைப் பிரிந்திருக்க என்றும் விரும்பியது இல்லை. அது மட்டுமல்ல, கிருஷ்ணனை ஆயர்பாடியில் நந்தகோபர் யசோதையிடம் விட்டு விட்டு மதுராவில் உள்ள சிறைச் சாலையிற் கண்ணீருகுத்தபடி ஊனின்றி உறக்கமின்றித் தவித்திருந்த,வசுதேவரும் தேவகியுமே என் மனக் கண்ணில் நிழலாடினர். தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறந்த எட்டாவது குழந்தை கிருஷ்ணன். திரு விஸ்வலிங்கம் அவருடைய எட்டாவது குழந்தை லயஞான குபேர பூபதி தட்சணாமூர்த்தி. கண்கள் பனிக்க உடல் சிலிர்க்க ஒரு அற்புதமான உணர்வு, ஏதோ ஒரு அமானுஷ்யத் தன்மை ஒன்று சிறு வயதிலிருந்தே தட்சணாமூர்த்தியிடம் இருந்திருக்கின்றது என்ற எண்ணமே என் மனதிற் தோன்றியது.
நாற்பது நாட்கள் கழிந்ததும் திரு விஸ்வலிங்கம் அவர்கள் மீண்டும் தன் மகனைப் பார்க்கச் சென்றார். மீண்டும் அதே பல்லவி ‘அப்பா என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் எனக்கு இங்கு இருக்கப்பிடிக்கவில்லை’. என்று அழுது அடம் பிடிக்கவே நாற்பத்தியோராவது நாள் நிறைவிற் திரு விஸ்வலிங்கம் அவர்கள் திரு காமாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் அனுமதியோடு மஞ்சத்தடி கந்தசுவாமி ஆலயத்திற் பல வித்துவான்களின் முன்னிலையிற் தட்சணாமூர்த்தியின் எட்டாவது வயதில் முதலாவது கச்சேரியை நடத்தி முடித்தார். அன்றிலிருந்து எட்டே வயது நிரம்பிய பாலகனின் தவில் வாசிப்புத் திறமையைக் கேள்வியுற்ற பலர் அவரின் கச்சேரியைக் கேட்பதற்குத்; தத்தம் ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றிக் கொழும்பு, கண்டி பண்டாரவளை போன்ற இடங்களுக்கும் மக்கள் அழைத்தனர். அந்த இடங்களுக்குக் கச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் இணுவிலில் இருந்து ஒரு லொறி புறப்படும். அதில் சின்னமேளக்காரர் நாடகக் கலைஞர்கள் எல்லோரும் செல்வார்கள். கச்சேரி நடைபெறும் இடத்திற்குச் சென்றதும் தன் அன்பு மகனை ஒரு கரத்திலும் மறு கரத்திற் தவிலையும் தூக்கிச் செல்வாராம் திரு விஸ்வலிங்கம். காரைநகரிற் தனது கோவிற் சேவக ஒப்பந்தத்தை நிறைவு செய்ததும் மீண்டும் தனது குடும்பத்தாருடன் இணுவிலுக்கு அவர் வந்து வந்துவிட்டார்.
இப்போ தட்சணாமூர்த்திக்குப் பரமானந்தம் அவர் விரும்பியபடியே வாழ்க்கை அமைந்து விட்டதல்லவா. சேவகத்திற்குப் போகும் நேரம், வீட்டிற் தந்தையாரோடு தவில் வாசிக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களிற் தனது தோழர்களுடன் விளையாடுவதிலே அளவு கடந்த ஆனந்தம் அவருக்கு. கிட்டி அடித்தல், மரங்களின் மேலே ஏறித்தாவிக் குதித்தல் மதிலில் ஏறிப்பாய்தல் எனச் செய்யும் குழப்படிகளுக்கு ஒரு எல்லையே இல்லை. இவ்வளவு விளையாடிய பின்பும் அவருக்கு என்றுமே அலுப்போ, சலிப்போ, களைப்போ, ஏற்படுவதில்லை. மற்றைய குழந்தைகளைப்போல, சிறுவர்களைப் போல அதிக நேரம் நித்திரை கொள்ளும் பழக்கமும் சிறுவன் தட்சணாமூர்த்தியிடம் என்றைக்குமே இருந்ததில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கோயிற் திருவிழாக்காலங்களில் மேளக்கச்சேரிகளும் கலைநிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெறுவதால் அவை நிறைவுற்று வீடு திரும்ப இரவு வெகு நேரமாகிவிடும். அந்த இரவு நேரங்களிற் பாடிக்கொண்டே வீடு திரும்புவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. அவர் சிறிய வயதிற் சங்கீத உருப்படிகளை மிக நன்றாகவே பாடுவார். எப்போதும் அவர் மூளையும், உடலும் வெகு சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டு இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் அவர் உறக்கத்தை என்றைக்கும் பார்த்ததில்லை. அவர் எப்போது நித்திரை கொள்வார் எப்போது எழுந்திருப்பார். என்பது திரு விஸ்வலிங்கத்தைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் எல்லோரும் பார்த்தது தட்சணாமூர்த்தியின் இறுதி உறக்கத்தைத்தான்.
ஒரு நாள் இதே போல நண்பர்களுடன் விளையாடச் சென்றபோது இணுவிலில் லொறித்தம்பிராசா என்பவரின் வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று கிணற்றிலே தண்ணீர் எடுப்பது போல வாளியைக் கிணற்றினுள் இறக்கி வாளி தண்ணீரைக் கோலிய பின்னர் கிணற்றினுள்ளே துலாக் கயிற்றை விட்டு விட்டுத் துலாவின் மேற் தாவியேறி அந்தத் துலாவின் மீது காலை நீட்டி ஒய்யாரமாகப் படுத்திருந்தாராம். இதைக் கண்டு விட்ட அயலவர் யாரோ சென்று திரு விஸ்வலிங்கத்தாரிடம் சொல்ல அவர் சென்று மகனைத் துலாவிலிருந்து இறக்கிச் சென்றாராம். அன்று வீட்டில் தட்சணாமூர்த்திக்கு நல்ல தடியடி அபிஷேகம் நடைபெற்றதாம்.
சாப்பாட்டு விடயத்திலும் அவருக்கு விருப்பமான உணவு தான் தர வேண்டும். பொரியல் என்றால் சாப்பிடக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அது இல்லையேல் சாப்பிட மறுத்து விடுவார். சோறு சாப்பிடுவது என்பது சிறுவன் தட்சணாமூர்த்திக்கு அறவே பிடிக்காத விடயம். சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் போது தந்தையாரே பொரியல் செய்து சாப்பிட அழைப்பாராம்.
இப்படிப்பட்ட தந்தை தவில் வாசித்தாற் தான் உணவு என்று குழந்தையைப் பட்டினி போடுவாரா? அவர் தான் பிறவிக் கலைஞன் ஆயிற்றே. தவில் வாசிக்கப் போகிறேன் என்று தானே பாடசாலை செல்வதற்கே மறுத்தார். பிறகு இந்தப் பயமுறுத்தல்களெல்லாம் அவருக்கு எதற்கு? திரு விஸ்வலிங்கம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு இவ் உலக வாழ்க்கையை நீக்கும் வரை தந்தையும் தனயனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தது இல்லை. நாள் முழுதும் மகனைக் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதையே அவர் தனது விரதமாகக் கைக்கொண்டார்.
‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்’. – திருக்குறள்
தந்தை தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் திரு விஸ்வலிங்கம் அவர்கள்.
தொடரும்——–