ஆதிகாலத்தில் பெண்கள் கல்வி கற்பது குறைவாகக் காணப்பட்டது. குறித்த பருவமடைந்த வயது வந்ததும் திருமணம் முடிப்பதுடன் அவர்களது வாழ்க்கை வட்டம் சுருங்கி விடுகிறது. இவ்வாறு சிறையில் வாழ்வது போன்றே பெண்கள் வாழ்ந்து வந்தனர்.
இருந்தும் பெண் விடுதலைக்காக போராடிய பாரதி காலத்திற்குப் பின்னர் பெண்கள் சமூகம் ஓரளவு தலைநிமிர்ந்து காணப்பட்டது. ஆனால் அக்காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லவேண்டிய அவசியம் காணப்படவில்லை.
ஆனால் இன்றைய காலகட்டத்தின் பொருளாதார நிலைபற்றி நாம் அனைவரும் அறிந்ததே. தன் கையே தனக்குதவி என்பது போல நாம் உழைத்தால் தான் நமக்கு உணவு என்ற நிலையாகிவிட்டது. அவ்வகையில் முன்னைய காலம் போல் அல்லாமல் பெண்களும் சுயமாக உழைக்கத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
பெண்கள் பல வழிகளில் சாதிக்கவும் தொடங்கிவிட்டனர் ஆனால் அவர்களின் உழைப்பு பல இடங்களில் பல காரண காரியங்களால் சுரண்டப்படுகிறது என்பதுதான் கொடுமையான உண்மை.
இதில் குறிப்பாக ஆடைத்தொழிற்சாலைகளை குறிப்பிடலாம்.
உலகின் மிகச் சிறந்த ஆடையுற்பத்தி நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 1980 களில் இந்தியாவின் ஆடை உற்பத்தியாளர்களுக்கு மாற்றாக இலங்கை கணிசமாக வளரத்தொடங்கியது.
ஏனெனில் திறந்த பொருளாதார கொள்கை மற்றும் வர்த்தக முதலீட்டு நட்புச் சூழல் ஆகியவற்றின் காரணமாக multi fibre ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தகத்துறைக்கு இலங்கை ஒரு புதிய இடமாக மாறியது.
நமது நாட்டினை பொறுத்தவரையில் ஊழியம் மலிவாக கிடைக்கப்பெறுவதனால் வெளிநாடுசார் ஆடைத்தொழிற்சாலைகள் துரிதமாக வளர்ந்து விட்டது.
1985 ஆம் ஆண்டு முன்னோடிகளில் ஒருவரான மார்ட்டின் டிரஸ்ட் என்பவர் development of speed sourcing செயற்திட்டத்தில் இலங்கை ஆடைத்தொழிற்சாலைகளுடன் இணைந்து கொண்டார் 1986,1987 ஆம் ஆண்டுகளில் அவர் omar group (முன்னாள் LM apparels and part of the brandix group) மற்றும் the amelian group உடன் இணைந்து கூட்டுமுயற்சிகளை நிறுவினார்.
இது வெளிநாட்டு முதலீடுகளை வெகுவாக கவர்ந்தது.
இலங்கையின் ஏற்றுமதி கட்டமைப்பில் ஆடை உற்பத்தி பெரும்பங்கு வகிக்கின்றது. 1996 இலிருந்து 1997 வரை ஆடை வருவாயில் 38% அதிகரித்தது. இதில் 2.18 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியது. 1998 இல் இலங்கையில் 50 புதிய துணி தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. அவ்வாண்டில் இயங்கிய 800 ஆடை தொழிற்சாலைகளில் உற்பத்தியில் ஈடுபட்டவர்களில் அதிகமானோர் பெண்களே.
2010 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளில் 350 000 பெண்கள் வேலை செய்தனர். குறிப்பாக ஆடை உற்பத்தி தொழில்சார் தொழிலாளர்களில் 85% ஆனோர் சிறுபான்மையினர் ஆவார். இவ்வுற்பத்தியின் ஏற்றுமதியில் 2007 ஆம் ஆண்டில் 3144 அமெரிக்க டொலர்களாகவும் 2010 இல் 3178 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வருமானம் அதிகரித்துள்ளது.
இதற்கு பிரதான காரணம் பிற நாடுகளை விட நம்நாட்டில் ஊதியம் குறைந்த வேலைப்படை தாராளமாகக் கிடைப்பதாகும்.
நமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய வகையிலான ஒரு கொடுப்பனவு, இலகுவாக சென்றுவரக்கூடிய போக்குவரத்து வசதி, உணவு வசதி, ஏனைய சில கொடுப்பனவுகள் என்று ஓரளவுக்கு நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.
ஆனால் இவை அனைத்தும் பெண்களின் உழைப்பை ஈர்க்கக்கூடிய மாய விம்பங்களே. இதில் குறிப்பாக பெண்கள் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் சென்று வரக்கூடிய வகையிலான போக்குவரத்து வசதிகளே பெண்களை ஆடை தொழிற்சாலைகளின் பக்கம் வேலைக்கு செல்வதற்கு தூண்டுகின்றது. ஆடைத் தொழிற்சாலையின் தொழிற்பாடுகள் ஒரு சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொரு சங்கிலிப் பிணைப்பும் சரியாகவும் நேர்த்தியாகவும் இருந்தால் மட்டுமே வெளியீடுகள் சரியாக அமையும்.
இதனால் தொழிலாளர்கள் உரியநேரத்திலற்கு அழைத்து வரப் படவேண்டும். இதற்காகவே இப்போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து அவர்களுக்கு தொழிச்சாலையில் வழங்கப்படுகின்ற உணவையே உட்கொள்கின்றனர். அவை எந்தளவிற்கு தரமானது என்று தெரியவில்லை.
உடலை வருத்தி வேலை செய்த பின்னர் உணவு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர அது தரமானதா என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பது இல்லை.
ஆடை வெட்டுதல், பொருத்துதல், பொத்தான் தைத்தல் போன்ற வேலைகளை நின்ற படியே செய்விக்கப்படுவதனால் சில ஆண்டுகள் சென்றதும் தசைப்பிடிப்பு, மூட்டுவலி, எலும்பு பலவீனமடைதல் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.
குறித்த நிறுவனங்கள் அவர்களிடமிருந்து அதிகளவான உழைப்பை பெற்றுக்கொள்ளும் போது அதற்கேற்ற ஊதியத்தையும் வழங்க வேண்டும். தற்போது மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே அவர்களை குறித்த தொழிற்சாலைக்கு வேலைக்கு அமர்த்துவதற்கான செயற்பாடுகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறான விடயங்களில் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது நல்லது.
கோபிகா செல்வராசா
ஊடகப்பயிலுனர்.
மூலம்
குறிப்பு:- எமது Fme Inst ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக தொகுக்கப்படுகின்ற கட்டுரைகள் தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும்.