பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவன் ஒரு சமூகமாக வாழ்வதனால், அவனுக்கென ஒரு பண்பாடும் தோன்றியது எனலாம். ஒரு கூட்டமாக வாழ்ந்த மனிதன் , தனக்கெனச் சில ஒழுங்கு முறைகளையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் தோற்றுவித்து அவற்றை காலங்காலமாக பின்பற்றி வந்ததனால் ஒரு பண்பாடு உருவாகியது எனலாம். இவ்வாறாக ஒவ்வொரு மக்கட் கூட்டத்தினரதும் தனித்துவமான அடையாளமாக விளங்குவது பண்பாடாகும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் பல்வேறு இன ,மத மொழிகளைக் கடைப்பிடிக்கும் மக்கள் பரந்து வாழ்கின்றனர். இவற்றிலே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்துவமான பண்பாடுகளைப் போற்றிப் பாதுகாத்து பின்பற்றிவரும் வெவ்வேறு இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்விரு மாகாணங்களையும் பண்பாட்டு ரீதியாக நோக்கும் போது அதிகளவான ஒற்றுமைகள் காணப்படுவது கண்கூடு. இருந்தாலும் இம்மாகாணங்களில் ஒரே வகையான பண்பாட்டு அம்சங்கள் காணப்பட்டாலும் இணைவற்ற ஒரு போக்கையே காணக்கூடியதாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மாவட்டங்களும் வட மாகாணத்தில் கிளிநொச்சி ,மன்னார், முல்லைத்தீவு ,வவுனியா ,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களும் காணப்படுகின்றன.
வடகிழக்கில் இஸ்லாமியர்கள் , பௌத்தர்கள் , கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் வேறு மதத்தவரும் இணைந்து வாழ்கின்றனர்.
ஆனாலும் மிகத்தொண்மை நாட்களில் இருந்து தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால், வடகிழக்கு மாகாணம் தமிழர்களின் மரபுவழித்தாயக பூமி எனப்படுகிறது.
ஆனாலும் சிங்களவர்களின் பேரினவாத செயற்பாடுகளின் விளைவாக உருவான ஈழவிடுதலை இயக்கங்களின் அழுத்தங்களால், இவ்விரு மாகாணங்களும் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடகிழக்கு மாகாணம் என்ற ஒற்றை மாகாணமாக பெயரளவில் இணைக்கப்பட்டது.
இவ்வாறு வடக்கும் கிழக்கும் ஒன்றாக இருந்த காலத்தில் பண்பாட்டுப் பெருவிழாக்கள் மிகக் கோலாகலமாக நடைபெறுவதும் நாம் அறிந்ததே.
ஆனால் 2006 அக்டோபர் 16 ம் திகதி மீண்டும் இவ்விரு மாகாணங்களும் சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டதுடன் தமிழர்களின் பண்பாட்டு இணைப்பு துண்டாடப்பட்டது.
ஆனால் தற்போது வடக்கில் பண்பாட்டு பெருவிழாக்கள் மாகாண அரசால் முன்னெடுக்கப்பட்டாலும், கிழக்கில் அவ்வாறான நிகழ்சித் திட்டங்கள் பெருமெடுப்பில் நடைபெறுகிறதா? என்பது கேள்விக்குரியதே.
அதுபோல வடகிழக்கு இணைந்ததான எந்தவிதமான பண்பாட்டுக் கலாசார நிகழ்வுகளும் திட்டமிடப்படுவதில்லை என்பதும் பெருங்குறையே.
ஆனால் பண்டைய காலத்திலிருந்தே வடக்கும் கிழக்கும் பண்பாட்டு ரீதியிலும் சரி ,அரசியல் ரீதியாகவும் சரி இணைந்தே காணப்பட்டது.
உதாரணமாக ஆரியச்சக்கரவர்த்தி காலத்திலே இராசதானியானது யாழ் பெருநிலப் பரப்பை மையமாகக் கொண்டு அமைந்திருந்தாலும் அக்காலத்தில் அநேகமான நூல்கள் கிழக்கிலங்கையை மையமாகக் கொண்டே தோன்றின.
உதாரணமாக கோணேசர் கல்வெட்டு , தட்ஷண கைலாய புராணம் போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்ப காலமாகிய ஆரியச்சக்கரவர்த்தி காலத்திலே
வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைந்தே காணப்பட்டன ஆனால் தற்போது பண்பாட்டிலும் அரசியலிலும் ஏன் பிரிந்து காணப்படுகின்றன என்பதும் சிந்திக்கத்தக்கதே.
கிழக்கு வாழ் தமிழ் மக்களை எடுத்துக்கொண்டால் ,வடக்கு தமிழர்களுடன் ஒப்பிடுகையில் பேச்சுவழக்கில் . மாறுபட்ட தன்மைகள் காணப்பட்டாலும், வட கிழக்கு வாழ் இந்துக்களுடைய வழிபாட்டு முறைகள் ஒத்த தன்மையாகவே காணப்படுகின்றன.
பெருந்தெய்வ ,சிறுதெய்வ வழிபாட்டில் ,பெருந்தெய்வங்களாக, முருகன் ,சிவன்,பிள்ளையார் போன்ற தெய்வங்களும், சிறு தெய்வங்களாக மாரியம்மன், பத்ரகாளி ,வீரபத்திரர்,சுடலைமாடன் போன்ற தெய்வங்களையே இருவரும் வழிபடுகின்றனர்.
இதைவிட இந்துக்களின் பத்தினித்தெய்வ வழிபாட்டை பின்பற்றி சிங்களவர்களும் பத்தினித்தெய்யோ என வழிபடுவதையும் காணலாம். இதைவிட இஸ்லாமியர்களைப் பொறுத்த மட்டில் கிழக்கில் தமிழர்களுடன் கலந்து வாழ்கிறார்கள்.
உதாரணமாக நீலாவணை என்ற தமிழக்கிராமத்தை அடுத்து மருதமுனை என்ற இஸ்லாமிய கிராமம் காணப்படுகிறது. இதே போல வன்னி மாவட்டத்திலே தமிழ்க்கிராமங்களையடுத்து இஸ்லாமிய கிராமங்கள் காணப்படுவதும் நோக்கத்தக்கது.
எனது இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் உரையாடும் போது அவர் கூறிய சில பதில்களும் என்னை சிந்திக்க வைத்தது .அதாவது வடக்கு வாழ் இஸ்லாமியர்களுக்கும் , கிழக்கிலங்கை இஸ்லாமியர்களுக்கும் ஏதும் வேறுபாடுகள் கணப்படுகிறதா?
என்று கேட்டிருந்தேன் அக்கேள்விக்கு அவர், சிறிய அளவிலே வேறுபாடு காணப்படுகிறது . ஆனால் அவை வெளித்தெரிவதில்லை என்று கூறியிருந்தார்.
இதேபோல வடக்கு வாழ் தமிழர்களுடைய சில பாரம்பரியங்களும், கிழக்கு வாழ் தமிழர்களுடைய சில பாரம்பரியங்களும் வேறுபட்ட போக்கை காட்டி நிற்கின்றன.
தொழில் அடிப்படையில் நோக்கும் போதும் இரு மாகாண மக்களினதும் பிரதான ஜீவனோபாயமாக விவசாயமும் மீன் பிடியுமே காணப்படுகிறது. அத்தோடு கூத்து வகைகளில் சில ஒரே தன்மையுடனும்
சில வெவ்வேறு தன்மையுடனும் , பிரதேச ரீதியாகவும் காணப்படுகின்றன.
வடமோடி , தென்மோடி போன்ற சிந்து நடைக்கூத்துகளும் கரகம் ,காவடி, போன்ற நடன வகைகளும் பொது வகைகளாக காணப்படுகின்றன. அத்தோடு குரவைக் கூத்து வகை கிழக்கில் தனித்துவம் பெற்ற ஒன்றாகவும் காணப்படுகிறது.
மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலில் , தமிழர்களும் இஸ்லாமியர்களும் நட்புடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது .
இதனைப்பிரதிபலிப்பதாக , தமிழர்களுடைய அரிவுவெட்டுக் காலங்களில் இஸ்லாமிய பக்கிரிமார்களின் வருகை இடம் பெறுவதும் ,அவர்களுக்கு தமிழர்கள் மரியாதை செய்வதும் வழமையாக இருக்கிறது. ஆனால் வடக்கைப் பொறுத்தமட்டில் இவ்வாறான ஒரு பாரம்பரியம் இல்லையென்றே கூறலாம்.
எது எவ்வாறெனினும் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி பண்பாட்டு ரீதியாக சில வேற்றுமைகள் காணப்பட்டாலும்அதிகமாக ஒற்றுமைகளே காணப்படுகின்றன.
இவ்வாறு ஆங்காங்கே காணப்படும் ஒற்றுமைகளை ஒன்றாக இணைப்போமானால் பண்பாட்டுப் பெருவெளியில் எமது நாட்டையும் தனியாக நோக்க வாய்ப்புகள் உருவாகும்.
வடக்கிழக்கை அரசியல் ரீதியாக இணைக்க வேண்டும், அதற்கு முன்பாக பண்பாட்டு ரீதியிலான இணைவுக்கு அடிக்கல் நாட்டவேண்டும்.
மிதிலைமாறன்.
ஊடகப்பயிலுனர்
குறிப்பு:- எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக தொகுக்கப்படுகின்ற கட்டுரைகள் தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும்.