சிறுத்தைகள் சீறிய களத்தில்
நத்தைகள் ஊர்கின்றன
புனிதர்களை விதைத்திட்ட
நிலத்தில் பூங்காயெதற்கு ?
முத்தவெளி முற்றத்தில்
துளிர்விட்ட புற்களிடம் புலி
வீரத்தை கேட்டாயோ ?
உலகே திரண்டு புயலாய்
வீசி எதிரித்திட்ட போது
தனித்து நின்று தாயகம்மீது
தாகம் கொண்டு தேகம் சிதைத்து
தேசியம் காத்த உத்தமர் வாழும்
உன்னத இடத்திலே !
உறக்கம் கொண்டவன் உடலைக்
காவி காவியம் கூறும் உன்
ஓவியப் பேச்சை கேட்பதா நாம்
கூரிய வாளின் முனையில் நின்று
உறவைக் கடந்து உடலை வெறுத்து
உரிமை மீட்க உடலை இழந்து
மடிந்தவர் மண்ணில் !
மத்தளம் தட்டி மகுடிகள் ஊதி
பட்டாசு கொளுத்தி
வெளிச்சக் கூடுகள் விட்டு
வீதிகள் தோறும் சுற்றிவளைத்து
இனிப்புக் கொடுத்து குதூகலிக்கும்
நீங்கள் உணர்வீர்களா எமை !
மேய்ப்பனைத் தவறிய
மந்தைகள் நாம்.
சந்தைகள் என்று விலை
பேசிட வேண்டாம்.
எழுச்சியின் எழுதலே எம்
கொள்கையின் தாகம்
விழுந்தாலும் எழுவதே
எம் புரட்சியின் வேகம்
வேட்டைக் களத்தில்
வேட்கை கொண்ட நரிகளா ?
விளையாட வேண்டாம்
வேங்கைகள் துயில் கொள்ளும்
அகத்தின் வீட்டில் கலியாட்டமா
இனவாத பேச்சு இது என்று
இழிவாக நினைத்திட வேண்டாம்
எம் இனத்தின் மூச்சுக் காற்று..
– வன்னியூர் கிறுக்கன்