விருப்பின்றி புணரப்பட்டு
கிழிக்கப்பட்ட வரிச் சீருடையின்
மிச்சத் துண்டுகள் வார்க்கப்பட்ட
கூர் கருக்கு மட்டையால்
மடக்கி வைத்து கழுத்தோடு
அறுத்து வீசப்பட்டபோது இரத்தம்
சிந்தி சிவந்த மண்ணிது…
படரப்பட்ட பசும் புற்களில்
இடரப்பட்ட சில கட்டெறும்புக்
கூட்டங்கள் தடைபட்ட வரம்படியை
தள்ளிவிட்டு தாகம் தீர்த்து
அணைக்கட்டில் நுழைய
கொள்ளியெறும்பின் உதவி தேடியே
கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட
துரோகத்தின் நாட்களது
வாய்க்கால்களில் வழிந்தோடும் நீரில்
சில குருட்டுத் தவளைகள்
தலை காட்டி கானமிசைக்க
வயல் புற்றில் பதுங்கிய சாரைப் பாம்பு
சத்தம் இன்றி எயிறால் கௌவிப்
பிடிக்கையில் சிதறிய தசைகளில்
படிந்து குருதியில் உறைந்த நீரிது
நீருக்காய் ஓடையில் காத்திருந்த
புள்ளி மான்கள் நீரின்றிப்
பரிதவிக்கையில் சாயம் பூசிய
சுடலைக் குருவிகள் பல வந்து
சாதிக்க விடாது சாகடிக்கும்படி
கீச்சிடும் போது நள்ளிரவில் நடுங்கி
பயப்படும் காலமிது…….
மலர்ந்த மலர் மண்ணில் விழுந்து
உபயோகமில்லாது உலர் நேரமாகி
உயிர் வாழ உணவிருந்தும் நீரின்றி
கரைக்கப்பட்ட கலப்படம் போலாகி
கரைந்தோடும் பனியாகிப்
போனது எங்கள் காலம் ……….
வன்னியூர் கிறுக்கன்